4/25/2019

சகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது குழந்தைகளை மீண்டும் பலியிட நாங்கள் விரும்பவில்லை-.கிழக்கிலிருந்து ஒரு குரல்

-பாத்திமா மாஜிதா -Résultat de recherche d'images pour "isis srilanka"

இலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களையும் அடிப்படை வாத அமைப்புக்களாக பொதுமைப்படுத்திப் பார்த்தல் இன்னும் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும் என்றொரு கருத்தை ஆண்கள் முன் வைக்கின்றனர். 

இங்கே நான் ஆண்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லவது அவசியமானது. இவ் அமைப்புக்கள் அனைத்தும் மீதான எனது எதிர்மறையான விமர்சனப் பார்வை, தற்பொழுது நடைபெற்று முடிந்த பேரிழப் பின்னர் மேலும் அதிகரித்துள்ளது. தாக்குதலை நடாத்திய தீவிரவாதிகளுக்கும் தங்களது அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிப்பதிலேயே அனைவரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியே ஆண்மையச் சிந்தனையை மட்டும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இந்த அமைப்புக்களின் கடந்த காலச் செயற்பாடுகளை நோக்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருவிக்கப்பட்ட நிதிகளின் மூலம் கட்டடங்கள் அமைப்பதும் இங்கே இருக்கின்ற இளைஞர்களை தங்களது சிந்தனைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதிலுமே குறியாக இருந்தனர். 

பின்னர் இவ்வியக்கங்களிடையே யார் தூய்மையானவர் என்பதை நிரூபிப்பதற்கான போட்டி பின்னர் சில இடங்களில் வன்முறையை தோற்றுவித்தன. பிற சமூகங்களுடன் நல்லிணக்கம் பேணல், தமது சமூகத்திற்குள் இருக்கின்ற பொதுப் பிரச்சனைகள் , ஆண் பெண் சமத்துவம் , பெண்களின் நலன்கள் அவர்களுக்கெதிரான வன்முறைகள், எவற்றிலுமே இந்த இஸ்லாமிய அமைப்புக்களின் செயற்பாடுகள் பூச்சியமாக இருந்து வந்துள்ளன. மாறாக பெண்களின் நடத்தைகளையும் , அவர்களது ஆடைகளை வரையறை செய்வதிலும் மட்டுமே கரிசனை செலுத்தினர். எநதவொரு சமூகத்தின் வளர்ச்சியிலும் திட்டமிடலிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் அத்தியவசியமானது. அவ்வாறானதொரு பங்களிப்பற்ற எநதவொரு சமூகச் செயற்பாடும் பின்னடைவுகளை எதிர்நோக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவள். இதனை இன்றைய அனைத்து சம்பவங்களும் நிரூபித்து வருகின்றன. வேதனை , ஆற்றாமை, குற்றவுணர்ச்சி, எதிர்காலம் பற்றிய கேள்வி எல்லாம் நிரம்பியவர்களாக ஆண்கள் மட்டுல்ல எமது முஸ்லிம் பெண்களும் உழன்று கொண்டிருக்கின்றார்கள். விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை கொண்ட சந்ததியை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றார்கள். பிற சமூகங்களுடனான சக வாழ்வினை விரும்புகின்றார்கள். சகவாழ்வுக்கான ஓர் அழைப்பிற்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக்க அவசியமாகும் . 

இந்த வரட்டுத் தன்மை கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் அற்ற ஆண், பெண் சமத்துவம் நிறைந்த ஒரு கூட்டு நல்லிணக்கம் தான் இன்றைய சூழலுக்கு உகந்தது. அதனை நோக்கியே நாம் அனைவரும் செயற்பட வேண்டும் . உங்களுடைய சகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது குழந்தைகளை மீண்டும் பலியிட நாங்கள் விரும்பவில்லை. 
நன்றி முகநூல்  


0 commentaires :

Post a Comment