4/11/2019

எமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பிரச்னைக்கு ஒரே வாரத்தில் தீர்வு கிடைத்திருக்கும் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி கூறமுடியும்-பிள்ளையான்

வெருகல் படுகொலையின்  15 ஆவது நினைவையொட்டி வெருகல் மலை பூங்காவில் இடம் பெற்ற நிகழ்வில்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்  தலைவர் சிவ .சந்திரகாந்தன்   அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு  செயலாளர் பூ .பிரசாந்தன்  அவர்களால்  வாசிக்கப்படட  உரை.Résultat de recherche d'images pour "பிள்ளையான்"
எனதருமை வீரத் தாய்மார்களே, தந்தையர்களே,  சகோதர சகோதரிகளே!
எமது கட்சியின் தலைமைப்பீட உறுப்பினர்களே,மத்தியகுழு உறுப்பினர்களே, போராளிகளே, பொதுமக்களே,மற்றும்  ஊடகவியலாளர்களே!
உங்களனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
இன்றையநாள் எமது மண்ணின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாகும். உங்களதும் எங்களதும் உறவுகளான அந்த பலநூறு வீர மறவர்களை ஒரு படுகொலையில்  நாம் இழந்து நின்ற நாள் இது.
இந்த மண்ணிலே இதே போன்றதொரு கொடும் வெயில் காலத்திலே இந்த   மலையடிவாரத்திலே  அதோ அந்த வெருகலாற்றங்கரையிலே, அதற்கப்பாலே தெரியும் கதிரவெளி கடலோரத்திலே  அவர்களது உடலங்கள் வெம்பி வெடித்து காய்ந்து கருகி கிடந்த நாள்.
அந்த நாளையும் அந்த நாளில் பலியாகிய அந்த வீர மறவர்களின் தியாகத்தையும் நினைவுகூருவதற்காக நீங்கள் அனைவரும் இங்கே கூடியுள்ளீர்கள்.
2004ஆம் ஆண்டு இதே சித்திரை மாதத்து பத்தாம் நாளில்  தமிழ் தேசியம் என்கின்ற பெயரில் மறைந்திருக்கும் மேலாதிக்க சக்திகளின் நலன்களை அம்பலப்படுத்தியதற்காக எப்படி இந்த வெருகலாற்றங்கரையிலே வன்னியிலிருந்துவந்த கொலை வெறி தாண்டவமாடியது என்பதை இரத்தமும் சதையுமாக  அனுபவித்தவர்கள் நீங்கள். அந்த படுகொலையில் மயிரிழையில் உயிர் தப்பியவன் நான்.  அதே கொலை வெறி கொண்ட கயவர்களின்    சதியினால்த்தான்  நான்   இன்று பழிவாங்கப்பட்டிருக்கின்றேன். அதனால் கடந்த ஆண்டைப்  போலவே  நான் இம்முறையும்  உங்களனைவரையும் சந்திக்கும் வாய்ப்பின்றி சிறைப்பட்டே கிடக்கின்றேன்.
அன்று கிழக்கு போராளிகளை நூற்றுக்கணக்கில் கொன்று விட்டால் மட்டக்களப்பான்  கேள்வியெழுப்ப மாட்டான் என்று  எண்ணியவர்களைப்போலவே இன்று  இந்த பிள்ளையானை  சிறைப்பிடித்து வைத்துவிட்டால் இந்த மட்டக்களப்பு  தமிழகத்தவர்கள்  மதியிழந்து, மானமிழந்து, சிந்தனை கெட்டு  சீரழிந்து போவார்கள் என்று சிலர்  கனவு கண்டார்கள். ஆனால் அவர்களது கொடுங்கனவு பலிக்கவில்லை.
அதனால்தான் யாழ்-ஆதிக்கத்தின் வெறியாட்டத்தினால் நடந்தேறிய வெருகல் படுகொலை நாளை நினைவு கூருவதற்காக இந்த மலைப்பூங்காவிலே நீங்களனைவரும்  வருடா  வருடம் போல இன்றும் கூடியுள்ளீர்கள்.  பிள்ளையானை நான்காண்டுகள் அல்ல நாநூறு ஆண்டுகள் சிறைவைத்தாலும் அவனது குரல் இந்த மண் உள்ளளவும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதற்கு இன்றைய நாளே சாட்சியாகும்.
கிழக்கிலிருந்து ஒரு தலைமை  உருவாகி விடக்கூடாது என்பதில் காலாகாலமாக யாழ்-மேலாதிக்கத்தின் பிரதிநிதிகள் எவ்வளவு உறுதியாக  கருமமாற்றுகின்றார்கள் என்பதற்கு என் மீதான பழிவாங்கலே போதுமான உதாரணமாகும்.
இது பெருந்தலைவர்களான
நல்லையா, இராஜதுரை  போன்றவர்களை ஒதுக்கியத்தைப்போல தொடர்ந்து வரும் மேலாதிக்க வரலாறாகும்.
எல்லாவித சட்டங்களுக்கும் முரணாக பிணையுமின்றி, விசாரணையுமின்றி ஒரு கைதியாக என்னை முடக்கி விட்டால் தமிழ் மக்கள் விடுதலை புலிகளை ஒழித்து விடலாம் என்று எண்ணினார்கள். ஆனால்   எமது  மக்கள் அன்றுபோலன்றி இன்று அதனை நன்கே உணர்ந்து வருகின்றனர். அதனாற்தான் கடந்த ஆண்டு உள்ளுராட்சி தேர்தலிலே  நீங்கள் வழங்கிய வாக்குகள்  தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய எங்களுக்கு  தனிப்பெரும் கட்சி என்னும் அந்தஸ்தை தந்தது. அந்த வெற்றி என்னை ஒதுக்கிவிட முனைந்தவர்களுக்கு முகத்திலே கரி பூசிய நிகழ்வாகும் என்பதை நன்றியுடன் இங்கு நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன்.
துமட்டும்மன்றி மட்டக்களப்பு மாவட்டத்தின்  தமிழரசு கட்சி சார்பிலான    கையாலாகாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை கடந்த மாதம் படுவான்கரை  மக்கள் கேள்வி கேட்டு துரத்தியடித்திருக்கின்றனர். மக்கள் பாடிய வசையில் திசைகெட்டு திக்குத்  தெரியாது வழிதவறி ஓடித்தப்பியிருக்கின்றனர் அந்த எம்பிக்கள் இருவரும். இத்தகைய நிகழ்வுகள் எல்லாம்   தமிழரசு கட்சியினரின் பித்தலாட்டங்கள் இனியும் இந்த மண்ணிலே வேகாது என்பதை உறுதிப்படுத்தி கொண்டே  வருகின்றன.

 இது போன்ற வெட்கக்  கேடுகளை தாங்க முடியாமல்தான்   தமிழரசு கட்சி  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்   அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற சகதிக்குள் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினார். அவர்  மக்களின் மனதுணர்ந்து அவர்களின் தேவையறிந்து காலாவதியாகிப்போன வீட்டுக்குள் இருந்து  தப்பித்து வெளியேறியுள்ளார் என்றே நான் கருதுகின்றேன். 

தமிழ் தேசிய கூட்டடமைப்பினை தலைமையேற்று நடத்துகின்ற தமிழரசு கட்சியின் எழுபது வருடகால அரசியலால் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிரயோசனங்களும் கிட்டவில்லை. 
மாறாக உங்களைப்போன்ற  எத்தனையோ  ஆயிரம் ஏழைத்  தாய்மார்களின் பிள்ளைகள் சிந்திய  இரத்தத்தினால்தான்   எமக்கு ஏதோ கிடைத்திருக்கின்றது. அதுதான் இந்த  மாகாண சபைகள் ஆகும்.. 
அதேபோல எமது கிழக்கு மாகாண சபையை உருவாக்குவதற்காக நாங்கள்  கொடுத்தவிலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கேட்க நேர்ந்த  துரோகப்பட்டங்கள் எண்ணற்றவை,  எதிர்கொண்ட  அவமானங்கள் சொல்லிமாளாதவை. 

ஆனால் 
எனது ஆட்சிக்கு பின்னரான கிழக்கு மாகாண சபையை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சீரழித்தனர். அதே போலவே வடமாகாண சபையூடாக மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை தலைமைப் போட்டிகளாலும் போலி கெளரவங்களின் இழுபறிகளாலும் போட்டுடைத்தனர். 

  அதுமட்டுமன்றி இப்போது  இந்த  மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் காலவரையறையின்றி இழுத்தடிக்கப்படுகின்றன என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவரவிரும்புகின்றேன். தேர்தலுக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்ற ஒவ்வொரு பொழுதிலும்   மக்களது இறைமைகள் மறுக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும். இத்தகைய மறுப்புக்கள்   ஜனநாயக மரபுகளின் வேர்களையே  அலட்சியம் செய்கின்ற போக்காகும். 

துமட்டுமன்றி மாகாண சபைகள் என்பவை   மக்கள் பிரதிநிதிகளின் பிரசன்னம் இல்லாது  நீண்ட  காலத்துக்கு  ஆளுநரின் அதிகாரத்தினால் இயங்கும் போது   ஆளுநரின்  எதேற்சையதிகார போக்குகளுக்கும் மாகாண சபைகளில் அதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தும் கைங்கரியங்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.  குறிப்பாக பல்லின-சிறுபான்மையினர்   வாழும் கிழக்கில் இந்நிலைமை மென்மேலும் சிக்கல்களை தோற்றுவிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

 அது மட்டுமன்றி மாகாண சபைகளை எவ்வித அதிகாரமுமற்ற வெற்று கூடாரங்களாக  மாற்றுகின்ற நிலைமைக்கு அது இட்டுச்செல்லும்.  இது பற்றியெல்லாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் நாளும் பொழுதும் கொஞ்சிக்  குலாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எவ்வித கவலையுமில்லை. அவர்கள் கொண்டுள்ள கவலையெல்லாம்  ஐக்கிய தேசிய கட்சியின் மேற்கத்தேய தரகு முதலாளித்துவ     ஆட்சியை   எப்படி காப்பாற்றுவது என்பது மட்டுமேயாகும்.  


கடந்த நான்காண்டுகளாக ஐக்கிய தேசிய – தமிழரசு கட்சிகளின் கூட்டரசாங்கம்   எமது தேசம்  ஒரு போதும் கண்டிராத கேவலமான ஆட்சியையே நடத்தி வருகின்றது. யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள்  தாண்டிய நிலையிலும் எஞ்சியிருக்கும்  தமிழ் கைதிகளை ஏன் இன்னும் விடுதலை செய்ய முடியவில்லை?  கேவலம்   இவர்களால்   கல்முனையில் ஒரு பிரதேச செயலக பிரச்னையை கூட தீர்க்க முடியாமல் இருப்பது வெட்கக்கேடானது. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  போன்று எமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பிரச்னைக்கு ஒரே வாரத்தில் தீர்வு கிடைத்திருக்கும்  என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி கூறமுடியும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க தமிழரசு கட்சியினரின் இத்தகைய அரசியல் தோல்விகளை பயன்படுத்தி கொண்டு அந்த இடைவெளியில் மக்களை ஏமாற்ற இன்னுமொரு கூட்டம் களமிறங்கத்  தொடங்கியுள்ளது.  விராலில்லாத குளத்திலே குறட்டை அதிகாரியாம் என்பதுபோல் யாழ்ப்பாணத்திலிருந்து புதிய புதிய எஜமானர்கள் மட்டக்களப்பிலே கால்பதிக்க தொடங்குகின்றனர். தடியெடுத்தவனெல்லாம்  தண்டல்காரன் அல்ல என்பதை எமது மக்களாகிய நீங்கள் ன்கே உணர்ந்தவர்கள்.   வெள்ளை வேட்டி வேஷமிட்டுக்கொண்டு இங்கே ஆன்மீக அரசியல் செய்ய சிலர் விழைகின்றனர்.  அவர்களிடம் நீங்கள் ஒருபோதும் ஏமாந்துவிடக் கூடாது என்பதை கூறிவைப்பது என் கடமையென உணர்கின்றேன். இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் மீண்டுமொரு புதிய எஜமானர்களை வடக்கிலே தேடுவதற்கு நாம் முயன்றோமானால் அது அடிமைப்புத்தியை தவிர வேறொன்றுமில்லை. கூடவே அது எண்ணைக்குள்ளிருந்து நெருப்புக்குள் பாய்கின்ற முட்டாள்த்தனமாகவே இருக்கும்.
 வட- மாகாண சபையை  ஊழல்களின் உறைவிடமாக்கியவர்கள், அந்த சட்டவாக்க சபையை சண்டித்தன சபையாக மாற்றி கேலிக்கூத்தாக்கியவர்கள் இப்போது இங்கே வந்து கிழக்கு மக்களுக்கு சேவையாற்ற போகின்றார்களாம் என கதையளக்கின்றனர்.

எனதருமை மக்களே  ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலே கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் கிழக்கிலே வந்து வானமேறி வைகுந்தம் போகப்போவதாக கதையளப்பது நகைப்பிற்குரியது. இது உலக மகா நகைச்சுவையாகும். 


எமது மக்கள் வெள்ளாடுகளாக இருக்கும் வரை   இந்த தாடிவைத்த நரிகள் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு இங்கே வரத்தான் செய்யும். ஆனால் நாம் வெள்ளாடுகள் இல்லை புலிகள் என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள். ஆம், நாம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்பதை அவர்கள் புரிய சில காலம் செல்லலாம்.  யுத்தமுனைகளில்  யாதுமாகி நின்றவர்கள் நாங்களே . இந்த கிழக்கு மண்ணின் மைந்தர்கள் ஆகிய நாங்கள்      கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும், லண்டனிலும்   படித்து பட்டமும் பதவியும் பெற்று    சொகுசாக   வாழ்ந்து விட்டு பென்ஷன் கால அரசியல் செய்ய வந்தவர்கள்  இல்லை  என்பதையும் நீங்கள் சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும்.  

ஆம்  எனதினிய வீரத்தாய்மார்களே! தந்தையர்களே!

தமிழ் தேசியத்தை தமது பிழைப்புவாதத்துக்குரிய கருவியாக்கி  எமது மக்களை ஏமாற்றி பிழைக்கும்    இந்த கயவர் கூட்டத்தின் அரசியல் சூட்சிகள் உங்களனைவரினதும் பேராதரவுடன் எம்மால் முறியடிக்கப்படும் என்று அறுதியிட்டு கூறுகின்றேன்.  இந்த மண்ணின் மைந்தர்களாகிய  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இழந்து போன  கிழக்கை மீண்டும் மீட்டெடுப்பார்கள்.  அதுவே இந்த  வெருகல் படுகொலையில் உயிர் நீத்த எனது சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யும் தகுந்த கைமாறாக இருக்கும்  என்று பறைசாற்றிக்கொண்டு எனதுரையை முடிக்கின்றேன்.

அனைவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.

சிவ.சந்திரகாந்தன் 
தலைவர்- தமிழ் மக்கள் விடுதலை புலிகள். 
சிறைச்சாலை- மட்டக்களப்பு 
10/04/2019

0 commentaires :

Post a Comment