3/25/2019

கே. டானியல் நினைவு தினம்..!

கே. டானியல் நினைவு தினம்..!Aucune description de photo disponible.
----------------------------------------------
'மக்கள் எழுத்தாளர்' கே. டானியல் காலமாகி
33 வருடங்கள் கடந்துவிட்டன.
இன்றுபோல் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.
தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டானியலுக்கு 23 - 03 - 1986 காலை 8. 30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். டாக்டர்களும் தாதிமாரும் உடனின்று சிகிச்சையளித்தனர்.
எனது கையைப் பற்றிப்பிடித்தவாறு ''தம்பி... தம்பி... " என ஏதோ சொல்ல விழைந்து முடியாத நிலையில் 8.40 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
இந்நிகழ்வு என் மனதில் என்றும் மறக்கமுடியாத வேதனைப் பதிவாகிவிட்டது.
அவரது உடலைத் தோழர் பொ. வேல்சாமியின் உதவியுடன் அப்போது தஞ்சையில் வசித்த பேராசிரியர் அ. மார்க்ஸ் இல்லத்திற்குக் கொண்டு சென்றோம்.
எமது அறிவித்தல் கிடைத்துச் சென்னையிலிருந்து
செ. கணேசலிங்கன் வந்தார்.
எழுத்தாளர்கள் - கலைஞர்கள் பெருமளவில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திய ஆகாசவாணி - இலங்கை வானொலி மற்றும் இலங்கைப் பத்திரிகைகள் யாவும் செய்தி தெரிவித்தன.
மறுநாள் அவரது உடல் செங்கொடி போர்க்கப்பட்டு வண்டியில் ஊர்வலமாகத் தஞ்சை வடவாற்றங்கரையிலுள்ள நாத்திகர்களுக்கான இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு திராவிடக் கழகத் தளபதி பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அவரது உடல் அடக்கம்செய்யப்பட்டது.
அங்கு தோழர் பொதியவெற்பன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் செ. கணேசலிங்கன் -
அ. மார்க்ஸ் - கரிச்சான்குஞ்சு - எம். வி. வெங்கட்ராமன் - பொ. வேல்சாமி - து. மூர்த்தி ஆகியோருட்படப் பலர் அஞ்சலியுரை நிகழ்த்தினர்.
யான் நன்றியுரை வழங்கினேன்.
புரட்சிப் பண்பாட்டு இயக்கத் தோழர்கள் முன்னின்று உதவினர்.
இறுதிவரை இலட்சியம் குன்றாத எந்தவித விட்டுக்கொடுப்புகளுமற்ற நம்பிக்கையான போராளியாகப், படைப்பாளியாகத் திகழ்ந்த டானியல் மறைவு குறித்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாஓ) பொதுச்செயலாளர் என். சண்முகதாசன் அன்று வெளியிட்ட அஞ்சலிச் செய்தியில் எழுதியுள்ள வரிகள் குறிப்பிடத்தக்கன.
''இளமைக்காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுஜன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத்துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவுமிக்க போராளி. நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்துவிட்டேன்." எனத் தோழர் என். சண்முகதாசன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மானிட நேசனின், மக்கள் விடுதலைப் போராளியின், கூர்ந்த சமூகப் பார்வையுள்ள படைப்பாளியின் நாமம் காலம் கடந்தும் வாழும்..!
- வி. ரி. இளங்கோவன்.

0 commentaires :

Post a Comment