2/27/2019

கிளிநொச்சிக் குழப்பம்?!



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் முன்னெடுத்த போராட்டத்தின் போது குழப்பம் ஏற்பட்டது. போராட்டத்தில் பங்கெடுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளில் பெரும்பான்மையானோர், “காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள தனிப்பணியகம் வேண்டாம்; சர்வதேச விசாரணை வேண்டும்” என்று கோசம் எழுப்பினர். கறுப்பு சட்டை அணிந்திருந்த சில இளைஞர்களோ, “காணாமல் போனோர் பணியகம் வேண்டும்; அதன் அதிகாரத்தை வலுப்படுத்த வேண்டும்.” என்று கோசம் எழுப்பினர். இதனால்தான், குழப்பம் ஏற்பட்டது. ஒலிவாங்கியின் இணைப்பு துண்டிப்பு முதல் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை வரை கறுப்புச் சட்டை இளைஞர்கள் எல்லை மீறியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. அதன் காணொளிகளும் வெளியாகியிருக்கின்றன. அந்த இளைஞர் குழுவில், கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேராக இருப்பது, சாதாரண தமிழ் மக்களே. அவர்களின் அர்ப்பணிப்பிலும், பங்கெடுப்பிலுமே போராட்டங்கள் அடுத்தடுத்த கட்டங்களை அடைந்திருக்கின்றன. அந்த மக்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழ் அரசியலையே பேச முடியாது. அப்படியான வரலாற்றைக் கொண்டிருக்கின்ற சமூகத்திடம், கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்கள், கவனயீர்ப்புக்கள் தொடர்பில் குறிப்பிட்டளவு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆயிரம் நாட்களைத் தாண்டி நீண்டு செல்லும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்தில் சாதாரண மக்களின் பங்களிப்பு என்பது மிகமிக சொற்பமாக மாறிவிட்டது. ஒரு கட்டத்துக்கு அப்பால், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டம் என்பது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினதும், காணி மீட்புப் போராட்டம் என்பது, காணியைப் பறிகொடுத்தவர்களினதும் என்கிற உணர்நிலையை தமிழ்ச் சமூகம் அடைந்துவிட்ட தோரணையைப் பதிவு செய்து வருகின்றது. இந்த நிலை ஏற்படுவதற்கான அடிப்படைகள் குறித்து, எந்தவொரு தரப்பும், எந்தவொரு தருணத்திலும் ஆராயவோ, அறிந்துகொள்ளவோ முயலவில்லை என்பதுவும் வேதனையான விடயம்.
தமிழ்த் தேசிய அரசியல் எப்போதுமே ‘ஏகநிலை/ ஒற்றைப்படை’ பயணத்தைத் தொடர்ந்து வந்ததால், கருத்து பரிமாற்றங்களை அவ்வளவாக அனுமதித்ததில்லை. எப்போதாவது, ஏகநிலைக்கு எதிரான கருத்துக்கள் எழுப்போதெல்லம், அந்தக் கருத்துக்கள் மீதும், அதன் சொந்தக்காரர்கள் மீதும் துரோக அடையாளம் பூசப்பட்டிருக்கின்றது. இதனால், ஜனநாயக உரையாடல்கள் அவசியமான அனைத்துத் தருணங்களும் முடக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டு, எல்லாமும் ஒற்றைப்புள்ளியில் முடிந்து போயிருக்கின்றன. அவ்வாறான நிலைமை, போருக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளிலும் பெரிய மாற்றங்களைக் கண்டுவிடவில்லை. தம்முடைய கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையில் வடிவங்களோ போராட்டங்களில் குழப்பங்களாகவும், நினைவேந்தல் நிகழ்வுகளில் தள்ளுமுள்ளாகவும், கூச்சல்களாகவும் அரங்கேறி வருகின்றன. அதனை, தேர்தல் அரசியலின் போக்கிரித்தனங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியும் விடுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குள்ளேயும் பிளவுகளும், குழுக்களும், உள்ளக இழுபறிகளும் காணப்படுகின்றன. சாதாரண கேள்விகளுக்கே கூட, தமது குழுவின் தலைவியின் அனுமதியோடு பதிலளிக்கின்ற தன்மையோன்று வவுனியா போராட்டக் களத்தில் காணப்பட்டது. அத்தோடு, “இன்னொரு குழுவோடு உரையாடினால், தங்களோடு உரையாட முடியாது. அதனை, தமது குழுவின் தலைவியோ, ஒருங்கிணைப்பாளரோ அனுமதிக்கமாட்டார்” என்று வெளிப்படையாகவே பதிலளிக்கின்ற நிலைமையை, வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர், காணாமல் போனோர் தொடர்பிலான உரையாடலொன்றின் போது சுட்டிக்காட்டினார். உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு இதன் உண்மைத்தன்மை நன்றாகத் தெரிந்த போதிலும், அது சார்ந்து இதுவரை உரையாடியது இல்லை. (அதனை, பெரிதுபடுத்தி, போராட்டத்தின் போக்கை திசை திருப்பியதும் இல்லை. அது நல்லெண்ண அடிப்படையிலானது என்று கொள்ளலாம்.) ஆனால், போராட்டக்காரர்களுக்குள்ளேயே இருக்கின்ற இழுபறிகள், தனிநபர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் குறித்து, வெளிநாட்டு இராஜதந்திரிகள் களத்திலேயே நேரடியாக பார்த்து அறிக்கையிடுவது என்பது, மிகவும் மோசமானதொரு கட்டம். ஏனெனில், போராட்டத்தின் உண்மையான கோரிக்கைகளை வலுவிழக்க வைத்து, வேறு விடயங்களை மேல்நோக்கிக் கொண்டுவர அவை, உதவுகின்றன.
போராட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொரு தாய்க்கும், உறவுக்கும் தாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன, எங்கேயிருக்கிறார், எப்போது கிடைப்பார் என்கிற கேள்விகளே அடிப்படையானவை. அதற்கான பதில்களை/நீதியை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஒற்றை இலக்கு. அதற்கு, தமக்கு இணக்கமான வழிகளை நாடுவது இயல்பானது. ஆனால், அந்த வழிகளை, என்னவொரு காரணத்துக்காகவும், யாரும் அடைத்துக் கொள்ள முடியாது. அவரவர் வழிகள் மீதான நம்பிக்கையை வைத்துக்கொள்வது அவரவர் உரிமை. ஆனால், அவ்வாறான நிலையை அனுமதிக்கும் சூழலும் இந்தப் போராட்டங்களுக்குள் இல்லை என்பதுவும் கசப்பான உண்மை.
காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், சாலிய பீரிஸ் தலைமையிலான குழு, நாடு முழுவதும் அமர்வுகளை நடத்தியது. அந்த அமர்வுகளில் பங்கெடுப்பதற்கும், சாட்சியமளிப்பதற்கும் ஒருதொகுதி மக்கள் முன்வந்தார்கள். ஆனால், இன்னொரு தொகுதி மக்கள் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களில் போது, சாட்சியமளிக்க முன்வந்தவர்களை, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களினால் தடுக்கப்பட்ட காட்சிகளும் அரங்கேறின. இங்குதான் சிக்கல்நிலை தோன்றுகிறது. சாட்சியமளிப்பதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குமான உரிமை அவரவருக்கு உண்டு. அதனை முதலில் அனுமதிக்க வேண்டும். கிளிநொச்சியில் இப்போது, அரங்கேறியிருப்பதும், அதன் ஒரு வடிவமே.
கிளிநொச்சிப் போராட்டம் என்பது, ‘காணாமற்போனோர் தனிப்பணியகம் தொடர்பில் நம்பிக்கையில்லை; சர்வதேச விசாரணை வேண்டும்’ என்கிற கோரிக்கையை முன்வைத்து ஒழுங்கமைக்கப்பட்டது. இதுதொடர்பில், ஊடகங்களில் போதியளவில் செய்திகளும் வெளியாகிவிட்டன. அரசியல் கட்சிகளும், போராட்டத்தின் அடிப்படைக்கோரிக்கையை உணர்ந்துவிட்ட பின்னரே, ஆதரவு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தன. அவ்வாறான நிலையில், அந்தப் போராட்டத்தின் அடிப்படைக் கோரிக்கைக்கு எதிராக, அந்தப் போராட்டத்துக்குள்ளேயே நுழைந்து கோசமிடுவது என்பது அறமற்ற செயல். அந்தச் செயலையே, அந்தக் கறுப்புச் சட்டை இளைஞர்கள் அங்கு அரங்கேற்றினார்கள். அப்படியான நிலையில், அந்த இளைஞர் குழுவில், தமது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இருந்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது, கூட்டமைப்பைப் பொறுத்தளவில் தவிர்க்க முடியாதது. அதற்கு சாக்குப்போக்குகள் சொல்லவும் கூடாது.
தேர்தல் அரசியலின் போக்கில், அடிப்படை அறமற்ற செயல்களை எந்தவிதமான வெட்கமும் இன்றி செய்யும் சூழலும் குறிப்பிட்டளவில் மேலெழுந்து வருகின்றது. தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்திய போது, அதே பெயரில், அதேநாளில் ஈ.பி.டி.பி யாழ்ப்பாணத்தில் கூட்டம் நடத்தி மக்களை குழப்பியது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தன் கலந்து கொண்டிருந்தபோது, கத்திக்கூப்பாடு போட்டு இடத்தின் மகிமைக்கு அப்பால் சென்று கவனம்பெற முயன்ற குழுக்களின் நாடகம், தியாகி திலீபன் நினைவிடத்தில் அரங்கேறிய அடிதடி, மக்கள் ஒருங்கிணைக்கும் போராட்டங்களிலும் தமக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற நிலையை பிரதிபலிக்கும் அரசியல்வாதிகள், அது சாத்தியமாகாத புள்ளியில், போராட்டங்களில் இருந்து இடைநடுவில் கழன்று செல்வது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கடந்த முறை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திக்காட்டிய வேடிக்கை என்று இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வாறான நிலைப்பாடுகளின் போக்கிலும், கிளிநொச்சிப் போராட்டத்தை கறுப்புச் சட்டை இளைஞர் குழுவோ, அல்லது வெளித்தெரியாத மற்றக்குழுக்களோ கையாண்டிருக்கின்றனவா என்கிற சந்தேகமும் எழுகின்றது.
இது ஆயுதப் போராட்ட காலம் அல்ல. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அடுத்த கட்ட அரசியலை எவ்வாறு வரையறுப்பது என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்ற காலம். இந்தக் காலப்பகுதியை அதன் தன்மையை- உண்மையை உணர்ந்து நோக்காதுவிட்டால், சாதாரண மக்களிடம் இருந்து போராட்டங்கள் இன்னும் இன்னும் அன்னியப்படும். அது, தமிழ்த் தேசிய அரசியலை சூனிய வெளிக்குள் தள்ளும். அந்தக் கட்டங்களையே, கிளிநொச்சிக் குழப்பமும் பதிவு செய்திருக்கின்றது.
-தமிழ்மிரர் பத்திரிகையில் இன்று வெளியான எனது பத்தி


*நன்றி முகநூல் 

0 commentaires :

Post a Comment