(கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட ஆய்விதழான 'நெய்தல்' டிசம்பர் 2016, தொகுதி - 8இல் வெளிவந்த கலாநிதி சு.சிவரெட்ணம் அவர்களின் கட்டுரை.)
தலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.பாகம் -ஒன்று
கலாநிதி.சு.சிவரெத்தனம்-மட்டக்களப்பு
தலித்தியம் இந்தியாவில், தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு கோட்பாடாகும். இதனை இலங்கைச் சூழலில் புரிந்து பின்பற்ற முடியுமா என்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இருந்த போதிலும் இரு தேசங்களிலும் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமைகளைக் கவனத்தில் கொண்டு தலித்தியத்தினைப் புரிந்து கொள்வதற்கும் புதிய கோட்பாட்டொளியில் வடகிழக்குத் தமிழ் சமூகத்தினைப் புரிந்துகொள்ளவும் இக்கட்டுரை முயற்சிக்கின்றது.
‘தலித்’ எனும் சொல்லாடல் தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கின்ற மராட்டிய சொல்லாகும். அங்கு தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த மகார், மாங்கு, சாமர், தோர், போன்றோரைக் குறிக்கக்கூடிய பொதுச் சொல்லாக அதாவது மராத்திய அட்டவணைச் சாதிகளுக்குரிய பொதுச்சொல்லாக தலித் என்ற சொல் பயன்பட்டது.
1973 இல் அமைக்கப்பட்ட தலித் பேந்தர் (தலித் சிறுகதைகள்) அறிக்கையில் அனைத்து ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், கூலி உழவர்கள், சிறு உழவர்கள், நாடோடி இனக்குழுவினர், ஆகியோர் தலித் என அடையாளமிடப்பட்டனர்.
ஆக, இங்கு தலித் என்ற மராத்தியச் சொல்லை ஒடுக்கப்பட்ட சாதிகளின் தொகுப்புச் சொல்லாகவும் போராடும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தொகுப்புச் சொல்லாகவும் பயன்படுத்துகிற இரண்டு பரிமாணங்களையும் காணலாம்.( கேசவன்.கோ,1998,பக்.5)
ஆனால் இன்று இச் சொல் தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் குறிப்பதோடு அம் மக்களின் சுயகௌரவத்தையும் சுயமரியாதையையும் எதிர்ப்பினையும் மீறுகையினையும் குறிக்கின்ற பொதுவான இந்தியச் சொல்லாக இருப்பதோடு ஒரு சமூகக் கோட்பாடாகவும் பல்வேறு செயற்பாட்டுத் தளங்களில் ஊடுபாய்ந்து கொண்டிருக்கும் செயல்நெறியாகவும் இருக்கின்றது.
தென்னாசியாவுக்கு அறிமுகமான பல சமூகவியல் கோட்பாடுகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோட்பாடுகளாக இருக்க இதுவே இந்திய சமூக சூழலுக்குள்ளால் சமூகத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்குள்ளிருந்து உருவான முதல் கோட்பாடாக அமைந்துள்ளது.
இக்கோட்பாடு தமிழகத்தில் 1990 களில் மிக வேகமாக கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், வரலாறு, ஆய்வியல் என பல்வேறு தளங்களிலும் ஊடுபாய்ந்து தனக்கான அடையாளத்தினையும் இடத்தினையும் கோரி நிற்கின்றது.
பார்ப்பன அதிகாரத்துக்கும் அதன் கருத்தியலுக்கும் எதிரான போராட்டங்கள் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருந்த போதிலும் பிரிட்டிஸ்சாரின் ஆட்சிக்காலமும் அவர்களால் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகளும் சாதி எதிர்ப்பு இயக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் உருப்பெறவும் மக்களை அணிதிரட்டி போராடவும் வழிவகுத்தன. இது காலனித்துவத்தினூடாக தாழ்த்தப்பட்டவர்கள் பெற்ற நன்மை எனக் கூறலாம்.
ஜோதிபாஃபுலே, அம்பேத்கார், பெரியார், அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களினால் தத்துவார்த்த தளம் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களுடைய பிரச்சினைகள் இன்று தலித் என்ற பேரியக்கமாக வளர்ந்துள்ளது. அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் தலித் என்ற சொற்பிரயோகத்தை தொடர்ச்சியாகவோ அல்லது பிரயோகிக்காமலோ விட்டாலும் அவர்களுடைய போராட்டங்களும் சிந்தனைச் செயற்பாடுகளும் தாழ்த்தப்பட்ட மக்களுடையதாகவே அமைந்திருந்தன.
சாதியின் தோற்றம் தொடர்பாக முதல் முதல் விளக்கிய இந்து மதம் கடவுளின் வெவ்வேறு உடற் பகுதிகளிலிருந்து அது தோற்றம் பெற்றதாகவும் அதனைப் பேணி நடப்பது கட்டாயம் எனவும் விளக்கி தெய்வ அங்கீகாரத்தினை சாதியின் நிலைபேற்றுக்கு வழங்கியது. அறிவார்ந்து சிந்தித்த ஃபுலே, அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் இந்துத்துவ வாதிகளால் கூறப்பட்ட இந்து மதத்தினையும் இந்துக் கடவுள்களையும் தங்களுடைய விடுதலைக்கான முதல் தாக்கு மையமாகத் தேர்ந்தெடுத்து இந்துத்துவத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நியமங்களையும் சடங்குகளையும் எதிர்ந்த்தனர், மீறினர்.
இதே போன்றே காலனியாதிக்கத்திற்கு எதிராக மகாத்மா காந்தியின் தலைமையில் போராடிய காங்கிரஸ்மீதும் இவர்களுக்கு உடன்பாடு இல்லாததால் அதனை நிராகரித்து தங்களுக்கான அரசியல் தளம் ஒன்றினை உருவாக்கிக் கொண்டனர்.
இதே போன்றே காலனியாதிக்கத்திற்கு எதிராக மகாத்மா காந்தியின் தலைமையில் போராடிய காங்கிரஸ்மீதும் இவர்களுக்கு உடன்பாடு இல்லாததால் அதனை நிராகரித்து தங்களுக்கான அரசியல் தளம் ஒன்றினை உருவாக்கிக் கொண்டனர்.
“நவீன இந்திய வரலாற்றின் வெவ்வேறு மாறுதல் கால கட்டங்களைச் சேர்ந்த, வெவ்வேறு சமூகப்பின்னணிகளைக் கொண்ட, வெவ்வேறு அறிவு நிலைகளைக் கொண்ட ஃபுலே, அம்பேத்கார், பெரியார் ஆகியோரிடையே அடிப்படையான ஒற்றுமைகள் பல இருந்தன. இந்திய சமூக அமைப்புப் பற்றிய அம்மூவரின் புரிதல்கள், வரையறைகள், அவர்கள் தொடங்கிவைத்து வழிநடத்திய இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலும் பல பொதுவான அம்சங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் இருந்திராத ஃபுலே, அம்பேத்கர் ஆகியோரைப் போலவே காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்திருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறிய பெரியாரும், நசிந்து போன இந்து சமுதாயத்தில் நவீனத்துவக் கூறுகளைப் புகுத்தியது பிரிட்டிஸ் ஆட்சியின் பண்பாட்டு வகையான செயற்பாடு எனக் கருதினார். இந்திய தேசிய காங்கிரஸ் மீது தமக்கு நம்பிக்கை ஏதும் இல்லை என்றும் அது கொண்டுவரக்கூடிய சுயராஜ்யம், பார்ப்பனீய இந்து மதம் ஆதிக்கம் செலுத்தும் இராமராஜ்யமாகவே இருக்கும் என்றும் அவர்கள் மூவரும் கருதினர்.” (இராஜதுரை.எஸ்.வி.2001, பக்.13)
இவர்களின் அரசியல் தளத்தின் வெற்றி இந்திய அரசியல் அமைப்பில் தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டமையாகும். இதன் மூலம் மரபுரீதியான உழைப்பிலிருந்து விடுபடவும் காலனிய முதலாளித்துவத்தினால் வழங்கப்பட்ட புதிய உழைப்பு முயற்சிகளில் ஈடுபடவும் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது. இந்த நவீன சமூகநிலமை சாதிய முறையின் பொருளாதார அடித்தளத்தை பெருமளவுக்கு அசைத்திருந்தாலும் பார்ப்பனியம் தனது அதிகாரப் பேணுகைக்காக இந்திய சமூகத்தைக் கையாளும் முறைமையும் (சமஸ்கிருதமயமாக்கல்) இந்தியச் சமூகத்தின் உளவியல் இயங்கு தளமும் அதன் திருப்தியும் தனக்குக் கீழ் உள்ளவனை விட தான் சிறந்தவன் என்பதும் தான் அதிகாரம் செலுத்துவதற்கும் தனக்கு கொளரவமும் மதிப்பும் வழங்குவதற்கும் தனக்குக்கீழ் குறிப்பிட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது ஒவ்வொருத்தருக்கும் அவர்களுடை அடிமனம்வரை ஊடுபாய்ந்து நிற்கும் ஒரு உளவியல் யதார்த்தமாகும். இதன் காரணத்தினால் நவீன நிலமைகளுக்கேற்ப சாதி புதிய வடிவங்களை எடுத்தும் (சாதிக் கட்சிகள், சமூக மேல்நிலையாக்கம்) இந்திய சமூகத்தில் நிலைபேறுடையதாக விளங்குகின்றது.
இந்த வரலாற்றுப் பின்புலத்தினூடே வடகிழக்குத் தமிழர்களின் சமூக அமைப்பினையும் இங்கு தோற்றம் பெற்ற சாதி எதிர்ப்புப்போராட்டங்களையும் நோக்குதல் வேண்டும். சமூக அமைப்பென்பது,
குறிப்பாக ஒரு வாழிட வரையறைக்குள் சீவிக்கும்பொழுது, அந்தச் சமூகம் ஒரு குறிப்பிட்ட கட்டமைவினைக் கொண்டதாக அமையும் (Social Structure)இ அந்தச் சமூகத்தின் பல்வேறு அலகுகளிடையேயும் நிலவும், காலச்செம்மைபெற்ற, ஒழுங்குமுறைப்பட்ட அமைவொழுங்குள்ள உறவுகள் இந்தக் கட்டமைவைப் புலப்படுத்தி நிற்கும். இவ்வாறு அமையும் கட்டமைவு அதன் இயங்கு நிலையில் ஓர் “அமைப்பு” (System) ஆகத் தொழிற்படும். அந்தச் சமூகம் இயங்கும் முறைமையை விளங்கிக் கொள்வதற்கு அது எவ்வகையில் ஓர் “அமைப்பு” ஆகத் தொழிற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். (சிவத்தம்பி.கா, 1993 பக்.7)
இந்தியாவிலும் அதன் செல்வாக்குக்குட்பட்ட தென்னாசிய நாடுகளிலும் சாதியமைப்பு இச் சமூகங்களின் இயங்கு முறைமையினைத் தீhமானிக்கின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் அதன் பிரதேச சூழல்களுக்கேற்ப சாதிமுறைமையினைப் பேணிவருவதனைக் காணலாம். அது இடத்துக்கு இடம் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடுடையதாக விளங்குகின்றது. இந்த அடிப்படையில் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களின் சமூக அமைப்பில் இரு பிரதான சமூக அமைப்புக்கள் முக்கியம் பெறுகின்றன.
தொடரும்
0 commentaires :
Post a Comment