*****"""""""***********************
மட்டக்களப்புத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ராஜன் செல்வநாயகம் என்ற கிறிஸ்தவருடன் இணைந்து எனது கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ராஜன் இன மத சாதி பேதங்களின்றி மட்டக்களப்புக்கு சேவையாற்றிய மனிதராகும். வெறும் பதினோராயிரம் மட்டக்களப்பு தலித் மக்களின் வாக்குகளால் 1970 ஆம் ஆண்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர் பின்னர்; அக்காலத்தில் அரசமைத்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சேவையாற்றினார். இந்த கிறிஸ்தவர் மட்டக்களப்பு படுவான்கரைக்கும், மாநகருக்குமிடையில் வலையிறவுப் பாலத்தை அமைத்து மட்டக்களப்பின் பொருளாதாரத்தில் புரட்சியைச் செய்தவராகும்.
மட்டு நகர் பேரூந்து நிலையத்துக்கு அருகாமையில் இவர் அமைத்த இராஜன் அரங்கின் பெயர்ப் பலகையை "இராஜன் அ(கு)ரங்கு" என்று அன்றைய தமிழ்த் தேசிய இளைஞர்கள் மாற்றி எழுதினர். கல்லடிக் கறுப்புப் பாலத்தில் 'காம இராஜன்' என்று சுண்ணாம்பினால் எழுதி ராஜனை அவமானப்படுத்தினர்.
ராஜன் செல்வநாயகம் தனது கழுத்தில் தொங்கும் சிலுவை மேசையில் கிடந்து புரள மக்களின் கோரிக்கையைக் கேட்பார்,முடிந்தவரை மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவார்.
1957 ஆம் ஆண்டைய வெள்ளத்தின் போது பிரதமர் SWRD பண்டாரநாயக்கா காங்கேயன் ஓடைக்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வை மனதில் நிலை நிறுத்தியிருந்த ராஜன் முஸ்லிம் கிராமமான காங்கேயனோடையை தனது அபிவிருத்தி இலக்கின் மையங்களில் ஒன்றாக இணைத்துக்கொண்டார்.இக்கிராமத்துக்குப் பெயர் வரக் காரணமாயமைந்த மூன்று மாரப்பாலங்களையும் கற்பாலங்களாயமைத்தார்.1928 இல் கட்டப்பட்ட காங்கேயனோடைப் பாடசாலைக்கு 44 வருடங்களின் பின்னர் 1972 இல் 100 × 20 விசாலமான இரண்டாவது கட்டிடத்தைக் கட்டினார்.
நானும் எனது தந்தையாரும் எமது உழவு இயந்திரத்தை சேர்விஸ் செய்யவும் திருத்துவதற்கும் செல்வநாயகம் சேர்விஸ் சென்ரருக்கு கொண்டு செல்கிற போது ராஜனுடன் சுவாரசியமாகப் பேசுக்கொண்டிருப்போம்.
ஏனோ தெரியவில்லை இவ்வருட கிறிஸ்மஸ் சீசனில் ராஜனின் நினைவாகவே உள்ளது.
விரைவில் வருவதாக வாக்களித்துள்ள இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் அனைத்து நண்பர்களுடனும் இணைந்து நானும் ராஜனும் உலக மாந்தரை வாழ்த்துகிறோம்.
நன்றி* தோழர் பசீர் சேகுதாவூத்
0 commentaires :
Post a Comment