12/09/2018

ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்-கௌசல்யா

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் மறுமணம் நடைபெற்றது.
பறை இசை முழங்கும் சமயத்தில் கௌசல்யா - சக்தி ஆகியோர் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.L’image contient peut-être : 5 personnes, personnes assises et personnes debout
சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார்.
சாதிய வன்முறைகள் மற்றும் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்ணுரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார் கெளசல்யா.
"சாதி ஒழிப்புக் களத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்," என்று திருமணத்துக்குப் பிறகு கௌசல்யா கூறினார்.
உறுதிமொழி ஏற்றபின் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கௌசல்யா - சக்தி தம்பதி, அங்கிருந்த பறை இசைக் கலைஞர்கள் உடன் சேர்ந்து தாங்களும் பறையை இசைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் பழநியைச் கெளசல்யா ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 2015ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி சாதி இந்துக்களான கௌசல்யாவின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
சங்கரின் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கொலை வழக்கில் கெளசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி - அன்னலட்சுமி உறவினர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதி அலமேலு நடராஜன் ஆறு பேருக்கு தூக்குதண்டை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அன்னலட்சுமி, அவரது சகோதரர் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா எனும் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு நபர் ஆகிய மூவர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கௌசல்யா கூறியிருந்தார்.
இந்த தீர்ப்பு ஆணவப்படுகொலைக்கு எதிராக வழங்கப்பட்ட ஒரு வரவேற்கப்பட்ட தீர்ப்பாக பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதினர். சங்கர் கொலைக்குப்பிறகு ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் கௌசல்யா வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி என்பவருடன் மறுமணம் நடைபெற்றுள்ளது. சக்தி தமிழக பாரம்பரிய கலையான பறை இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி ஏற்று சக்தி, கெளசல்யா இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் நடத்தி வைத்தார். உடன் திராவிடர் கழகத்தின் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, எவிடன்ஸ் கதிர் மற்றும் செயற்பாட்டாளர்கள் உடனிருந்தனர்.
கௌசல்யாவே இதற்கு முன்னர் பல சாதி எதிர்ப்புத் திருமணங்களை நடத்திவைத்துள்ளதுடன், பல சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலும் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வருகிறார்.
தகவல் - பிபிசி

0 commentaires :

Post a Comment