இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பமாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க-வை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தமது எதிர்த் தரப்பில் இருந்துவந்த முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அதன் பிறகு நடந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் முடிவில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ஷவால் முடியவில்லை. இதையடுத்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார் சபாநாயகர் கரு.ஜெயசூர்ய.
இலங்கையில் அக்டோபரில் நடந்த அரசியல் திருப்பத்துக்கு முன்பு இலங்கை சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்தன.
இலங்கையின் எதிரெதிரான இரு பெரும் அரசியல் தரப்பும் ஓரணியில் இருந்ததால், 16 எம்.பி.க்களைப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டணி எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தது.
0 commentaires :
Post a Comment