அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!
வடக்கின் 05 வருட சாபம் வரும் 24ஆம் திகதியுடன் நீங்குகிறதா?
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!
பல தசாப்த போராட்டம், பல ஆயிரம் உயிரிழப்புக்கள், வீரமறவர்களின் உயிர்க் கொடைகள், அனைத்து இயக்கப் போராளிகளின் தியாகங்களால் உருவானதே இந்த மாகாண சபை முறைமையாகும்.
இந்த பொன்னான வாய்ப்பையும், அல்லோலப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களினுடைய எதிர்காலத் தலைவிதியையும் நிர்ணயிக்கும் இந்த ஆட்சி அதிகாரத்தை “ஐந்து வருடங்களை நாம் வீணடித்துவிட்டோம்” என்று சீ.வி.கே.சிவஞானம் அவர்களும், “விக்கியை முதல்வராக்கியமை நான் செய்த பெரும் பாவமே” என திரு. மாவை சேனாதிராஜா அவர்களும், சுமந்திரன் அவர்களோ தகுதியற்ற தலைவராக விக்னேஸ்வரனை வினவ முற்பட்டதும் காலம் கடந்த ஞானங்களே!
எமது சமூகம் என்றுமே எதிர்நோக்கியிராத இந்த அவலங்களைத் துடைத்திருக்க வேண்டியவர்கள் ஆளுக்காள் மாறிமாறி அறிக்கை விடுவதில் எமக்கு ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
ஒரு குழந்தை தான் பிறந்து ஐந்து வருடங்களை இந்த மாகாண சபைக் காலத்தில் பூர்த்தி செய்துள்ளது. ஓர் ஐந்தாம் ஆண்டு படித்த மாணவன் 10ஆம் ஆண்டு வரை தனது கல்வியைப் பூர்த்தி செய்திருப்பான். ஓர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவன் தனது பல்கலைக்கழகப் படிப்பை முடித்து, வெளியேறியிருப்பான். வெளியேறியவனோ இன்று வீதியில் நின்று அழுகிறான். தனது படிப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லாமையினை உணர்ந்து.
இலங்கை அரசியல் வரலாற்றில் எனது அறிவுக்கு எட்டியவரை பட்டதாரி மாணவர்களின் போராட்டமானது, வடக்குக் கிழக்கு எங்கும் நீண்டதொரு போராட்டமாக மேற்கொள்ளப்பட்டு, இன்றுவரை சரியானதொரு முடிவை அல்லது தீர்வை எட்டமுடியாமல் காலம் உருண்டோடியுள்ளது.
இதற்கெல்லாம் பொறுப்பானவர்கள் யார்? ஆட்சிபீடம் ஏறிய இவர்கள் அவசர அவசரமாக தமது இருப்புக்களை நிலைநிறுத்த முற்பட்டதும், சுயதம்பட்டமடித்துக் கொண்டதும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் தவித்ததும், சொகுசு வாகனங்களுக்கு அடிபட்டதும் வரலாறாகக் கழிந்து போகிறது.
மக்கள் மீது சுமத்தப்பட்ட இந்தக் கொடுமைகளுக்கு, இந்த வரலாற்றுத் தவறை இழைத்தவர்களுக்கு யார் பதிலிறுப்பது? போரின் வடுக்களில் சிக்கிய மக்கள் நோயாளிகளாகவும், குறிப்பாக மனநோயாளிகளாகவும் இன்று சமூகத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை உணவுதனும் நிரந்தரமில்லாத சூழலில் மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்வை அனுபவித்த இவர்கள், அரசியல் பிரபல்யம் தேடிக் கொண்ட இவர்கள் இன்னுமொரு முறை ஆட்சிக் கட்டில் ஏறத்துடிப்பதும், அதை நோக்கிக் காய்களை நகர்த்துவதும் வேடிக்கையானதும், தேவனைதரும் விடயமானதும், அரசியல் வறுமைத்தனமுமாகும்.
எந்தத் தகுதியுமற்ற தலைவனாக வடக்கை ஆளவந்த விக்னேஸ்வரனை இன்னுமொருமுறை மறந்தேனும் வாக்களித்து மகுடம் சூட்ட தமிழ் பேசும் மக்கள் தயாராக இருக்க முடியாது. கடதாசிப் புலிகளாக பல கைங்கரியங்களுடன் ஆவாக் குழுவாகவும், வாள்வெட்டுக் கலாசாரமுமாக தலைவிரித்தாட, தூபம் காட்டிக் கொண்டு தமது அரசியல் இருப்பை வடக்கில் நிறுவிக்கொள்ள விக்னேஸ்வரனின் முதுகில் சவாரி செய்ய முற்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் எமது மக்கள் தகுந்த பாடத்தினைப் புகட்ட வேண்டும்.
உருண்டுகொண்டிருக்கும் இவ்வுலகினில், மாறிவரும் அரசியல் சூழலில் சரியானதொரு அரசியல் தலைமையை தமிழ் பேசும் மக்கள் வடக்கில் நிறுவ வேண்டும். அரசியல் ஆளுமையும், ஏன்? ஆன்மீக ஆளுமையும் வழிகாட்டல் தெளிவுமற்ற விக்னேஸ்வரனை வடக்கிலிருந்து மக்கள் தூக்கியெறியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், மக்களே எங்கள் ஆதங்கங்களை உங்கள் சிந்தனைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
என்றும் நாம் மக்களுக்காக!
நன்றி.
0 commentaires :
Post a Comment