9/11/2018

இருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்டப்படுகிறது

யூத-கிறித்துவ-இஸ்லாமிய மூலக்கதைகளில் உள்ள ஆதாம்-ஏவால் என்கிற தொன்ம அடிப்படையில், ஆண் பெண் என்கிற இருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்டப்படுகிறது. அதாவது இருமை எதிர்வாக இது கட்டப்பட்டு உள்ளது. இது ஒருவகையான மத விதிமுறைகளின் ஆழ்தள கட்டமைப்பு. உலகின் அனைத்து உடல்களையும் இந்த இரு பாலினத்திற்குள் அடக்க முனைவதால், இந்த எதிர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பே வரலாற்றுரீதியானது, அங்கீகரிக்கப்பட்டது, இயல்பானது, இயற்கையானது என்ற நிலை உருவாகியுள்ளது. பண்டைய காலங்களில் தன்பால்-புணர்ச்சியாளர்கள் ஒரு பாலினவகையாக அல்லது தனிப்பாலுமையாக இருந்தனர். அவர்களை இன்றைய எதிர்பால்-வேட்கை கொண்ட ஆண்-பெண்-இருமை-எதிர்வு-சமூக அமைப்பிற்குள் ஆணாகவும், பெண்ணாகவும் வகைப்படுத்தி, தன்பால்-புணர்ச்சியை குற்றமாக மாற்றியது நவீன சமூகம். மாற்றுப்பாலியளார்களையும், தனியானதொரு பாலுமை கொண்டவர்களாக இல்லாமல், இருமை-பாலினத்திற்குள் அடக்கவே முனைகிறது.
17-ஆம் நூற்றாண்டிற்கு பிறகான கிறத்துவ-விக்டோரியன் அறமதிப்பீடுகள் வழியாக, பாலியல் சொல்லாடல்கள் கட்டப்படுவதையும், பாலியல் ஒழுங்கமைக்கப்படுவதையும் விவரிக்கிறார் பூக்கோ தனது பாலியல் வரலாறு என்கிற நூலில். 200 ஆண்டுகளுக்கு முன்பாக ”கே” எனப்படும் தன்பால் புணர்ச்சியாளர்கள் என்கிற வகைத்திணையே இல்லை, இரண்டு ஆண்களுக்கு இடையிலான பாலுணர்வை ”சோடமி” என்ற சொல்லால்தான் குறித்தனர். அதன்பின் மருத்துவம் மற்றும் உளவியல் சொல்லாடல்கள் வழியாக கட்டப்பட்டதே ”ஹோமோசெக்சுவாலிட்டி” எனப்படும் தன்பால் புணர்ச்சி என்ற சொல். பிறகு அது சிறிது சிறிதாக குற்ற உணர்வாக கட்டமைக்கப்பட்டு, எதிர்பாலின வேட்கை மட்டுமே இயல்பானதாக வடிவமைக்கபட்டது என்கிறார் பூக்கோ.
மாற்றுப்பாலுணர்வாளர்கள் இந்த இரு-பாலின-அமைப்பிற்குள் விடுதலை வேண்டுபவர்களாகவும், மாறியப்பாலினத்தினர் இந்த இரு-பாலின-அமைப்பிலிருந்து விடுதலை வேண்டுபவர்களாகவும் உள்ளனர். உடல்கள் பாலுமை கொண்டவையாக மாற பாலினமாக்கல் என்பது அவசியப்படுகிறது. பாலின அரசியலை ஆராய்ந்த ஜீதித் படலர் பாலினம் என்பது சொல்லாடல்களான மொழி, இயக்கம், மொழியற்ற பரிமாற்றம், நடத்தை, நிறுவன அமைப்புகள், வழக்கப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் போன்றவற்றால் கட்டப்பட்டது என்கிறார். பாலுமை என்பது உடலுக்கு கொடுக்கப்பட்டு அதனால் பாலினம் செயற்கையாக உட்செலுத்தப்பட்டு கட்டப்படுவதல்ல மாறாக பொருளியல் ரீதியாக உடல்கள் ஆளப்படுவதற்கான ஒரு கலாச்சார விதி என்று பட்லர் கருதுகிறார். இதனை அவர் தனது நூல்களில் விரிவாக விளக்கிச் செல்கிறார். L’image contient peut-être : 1 personne
பாலினம் என்கிற அறிதல் சட்டகத்தின் கட்டமைப்பினால் கண்டடையப்படும் உடல்சார்ந்த பாலுமையால்தான், பாலியல் சார்ந்த உடல்கள் (sexed bodies) இருப்படைகின்றன. பாலுமையை அறிவதற்கே பாலினம் என்கிற அடிப்படையான அறிதல் தேவைப்படுகிறது. அதாவது ஆண் பெண் என்கிற பாலினம் கட்டமைக்கப்பட்டு, அதை வைத்து பிறக்கும் உடலை ஆண் பெண் என்கிற பாலுமை கொண்ட உடலாக அடையாளப்படுத்தப்படுகிறது. பாலுமைக்கு முன்பாகவே பாலினம் என்பது உருவாகியுள்ளது. பாலுமையை அடையாளப்படுத்துவது பாலினம்தான். அதாவது பாலினம் என்கிற Gender தான் பாலுமை என்கிற Sex ஐ தீர்மாணிக்கிறது. ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதில்லை. பிறந்தபின் பெண்ணாகவும் ஆணாகவும் சமூகத்தால் பாலினமாக்கப்படுகிறது. அதன் வளர்ப்பில் அப்பாலினம் உணர்வுகளாக, உடலாக வடிவமைகிறது. ஆண் பெண் குறிகளான லிங்கமோ, யோனியோ ஆண் பெண்ணை தீர்மாணிப்பதில்லை. ஆண் பெண் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பே குறிகளை தீர்மாணிப்பதாக உள்ளது.
- "மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல்" என்ற எனது கட்டுரையிலிருந்து சில பத்திகள். கட்டுரை வலசை இரண்டாவது இதழில் (2012) வெளிவந்தது.

நன்றி முகநூல் 

0 commentaires :

Post a Comment