மறவன் புலவையும் மாட்டிறைச்சியையும் முன்வைத்து- பாகம் -இரண்டு
ஒரு குறித்த மதத்தையோ, இனத்தையோ எதிரியாக சித்தரிக்கின்ற வரலாற்றுப்போக்குகளின் பின்னணியில் பொருளாதாரா காரணிகளே அடிப்படையாய் இருப்பதனை உலக வரலாறுகளில் நாம் கண்டு வருகின்றோம். ஜேர்மன் நாசிகளின் பிரச்சாரம் கூட யூதர்களுக்கெதிராக இப்படித்தான் இருந்தது. ஜெர்மானிய மக்களின் ஏழ்மை நிலைக்கு காரணம் யூதர்களின் வியாபார ஆக்கிரமிப்பே என்றுதான் முன்மொழியப்பட்டது. அத்தோடு ஒரு குறித்த இனத்துக்கு மட்டும் உரியதான "பூர்வீக உரிமை" பற்றிய பிரச்சாரங்கள் இணைக்கப்படும் போது ஏனைய இனத்தவர்களும் மதத்தவர்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்,
ஒதுக்கப்படவேண்டியவர்கள், துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள், இறுதியில் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்கின்ற பாசிஸ நிலைக்கு அது இட்டுச்செல்லும். அதுவே ஹிட்லர் போன்றவர்களால் நடத்தப்பட்ட ஆரியர்களே ஆளப்பிறந்தவர்கள்(aryan supremacy theory) என்கின்ற யூத விரோத நிலைப்பாட்டு( Anti-semitism ) படுகொலைகளுக்கு வழிவகுத்தது.
இந்த ஆரிய மேன்மை பேசும் ஹிட்லருடைய நாசி கொடியின் வடிவமும் இந்திய ஆரிய பார்ப்பனர்கள் பயன்படுத்தும் ஸ்வத்திக் எனப்படும் இந்து மத சின்னமும் ஒன்றாகவே இருப்பது இங்கே மேலதிக செய்தியாகும். இந்த ஸ்வத்திக்கொடி இலங்கை சைவ ஆலய சோடனைகளிலும் பயன்படுத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் ஆரிய-பார்ப்பன-பனியாக்களின்-இந்துத்துவ மேலாதிக்கம் இத்தகைய வெறுப்பு அரசியலையே முன்னிறுத்தி வருகின்றது. இந்த ஆரிய-பார்ப்பனர்கள் கூட ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்புக்கு வந்தேறிய குடிகள்தான். ஆனால் அவர்கள்தான் இன்று இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் ஏன் இந்திய மண்ணின் பூர்வீக குடிகளான திராவிட-தமிழர்களையும் கூட மேலாதிக்க சிந்தனையுடன் அணுகி வருகின்றார்கள். இந்தியா கொண்டிருக்கும் பல்லின-பன்மத தன்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற இந்துத்துவ /பாசிஸ அரசியலை எங்கும் எதிலும் திணித்து வருகின்றார்கள். இதன் ஊடாக மக்களை இன, மத, சாதி ரீதியாக பிளவுபடுத்தி தத்தமக்குள் மோதவிட்டு தமது அரசியல் அதிகார கட்டமைப்புக்களை பாதுகாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதில் முன்னின்று செயல்படுகின்றது இன்றைய மோடி அரசாங்கம்.
இதன் தொடர்ச்சியாகவே இலங்கையிலும் இந்த இந்துத்துவ சிவசேனை அமைப்பானது இன்று கால்பதிக்க முற்பட்டுள்ளது. இவர்களது முதலாவது பிரச்சாரமும் இந்த "மாட்டிறைச்சி" எதிர்ப்பிலிருந்தே தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே ஒரு மறவன் புலவு சச்சிதானந்தத்தின் சின்னத்தனமான செயலென்று யாரும் ஒதுக்கி விட முடியாது. மிகவும் கவனமான முறையில் திட்டமிடப்பட்டு மோடி அரசின் முகவராகவே அவர் களமிறங்கியுள்ளார். ஏனெனில் தமிழீழ விடுதலை போராட்ட ஆரம்ப காலங்களில் இடம்பெற்ற தமிழாராட்சி மாநாடு தொடங்கி பல்வேறு விதமான அரசியல் பணிகளில் கருத்தியல், மற்றும் செயல்பாட்டு தளங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் சச்சிதானந்தம் ஆகும். செல்வநாயகம், திருச்செல்வம், அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன் ஈறாக அத்தனை தலைவர்களோடும் பழகி செயற்பட்டு பழம் தின்று கொட்டை போட்டவர். ஒரு காலத்தில் சிங்களவர்களே தமிழர்களின் எதிரிகள் என்றும் அவர்களிடமிருந்து தமிழ் தேசத்தை காப்பதே நமது கடமையென்றும் யுத்தத்துக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர்.
அனைவரையும் ஆயுதமேந்த வைத்து அழித்து முடித்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து தொடங்குகின்றார்கள்.இடையில் எதுவுமே நடைபெறாததுபோல.-- எப்படி முடிகின்றது இவர்களால்? முதல் முப்பத்துவருடமும் இனவாத யுத்தம் அடுத்துவரும் சுற்றுக்கு மதவாத யுத்தமா? இவர் இன்று இலங்கை தமிழர்கள் என்போர் இந்துக்கள் என்றும் இந்துக்களுக்கும் பெளத்தத்துக்கும் சொந்தமான பூர்வீக பூமி இலங்கை என்றும் கூறுகின்றார். மாடுதின்னும் முஸ்லிம்கள் வந்தேறிகள் அவர்கள் இங்கிருப்பது எமது கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்கின்றார்.
இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை, என்பதனால் முஸ்லிம்களை மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாதென்கிற கட்டளை இடுவதற்கு இந்த மறவன்புலவு யார்? அடுத்தவனின் உணவுண்ணும் உரிமையை கூட அங்கீகரிக்க முடியாத ஒரு இனமாக தமிழினம் இருக்கின்றதா? நிச்சயமாக இருக்க முடியாது. மாட்டிறைச்சி உண்ணாமை என்பது இந்துக்களின் ஐயாயிரம் வருட பாரம்பரியம் என்று முழங்குகின்றவருக்கு "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் முழங்கிய கணியன் பூங்குன்றனார் பற்றி ஏன் தெரியாமல் போனது?
பூர்வீக தேடல் என்பது என்னைப்பொறுத்தவரை அபத்தமானது. மனிதன் வாழ்ந்த இடத்தில்தான் தொடர்ந்து வாழ வேண்டுமானால் அவன் நாகரீகம் அடைந்திருக்கவே முடியாது, அவன் இன்றுவரை காட்டுமிராண்டியாகவே இருந்திருப்பான். அதுமட்டுமல்ல மச்சமும் மாமிசமும் கூடவே நரமாமிசமும் மட்டுமே அவனது உணவாக இருந்திருக்கும். மாறாக நாடோடி வாழ்க்கையும் பிரபஞ்சம் பற்றிய தேடலுமே நாகரீகத்தையும் அறிவையும் கற்றுத்தந்தது.
அதனால் தான் இன்று பசு வதை பற்றி பேசுகின்ற மறவன் புலவு சச்சிதானந்தம் போன்றவரை வழிநடத்தும் இந்து-பார்ப்பனர்களின் மூதாதையோராகிய ஆரியர்கள் மாட்டுக்கறியை தாராளமாக உண்ட வரலாறு விரவிக்கிடக்கின்றது. அதுமட்டுமன்றி ஆட்டிறைச்சியும் குதிரை இறைச்சியும் பெரும்தீயிலே வேகவைத்து உண்டும் கூடவே
ஸோமபானமும் குடித்தும் களித்த கேளிக்கைகளுக்கு பெயர்தான் யாகங்கள் ஆகும் என்பதை அவர் அறியாதவரா? ரிக்வேதத்தில் விபரிக்கப்படுகின்ற யாக முறைகளிலே முருங்கைக்காயும் முள்ளங்கியும் உண்பது பற்றியா விபரிக்கப்படுகின்றது. மொடாக்குடியன் இந்திரனுக்கு எத்தனை வகை இறைச்சிகள் படைக்கப்பட்டன என்பது பற்றியதுதான் இந்த வேதங்களின் விபரணைகள்.
இப்போ வந்து பல்லாயிரம் ஆண்டுகளாக பசுவை தெய்வமாக வணங்குகின்றோம் என்கின்ற புலம்பல் எதற்கு? பசுவை தெய்வமென்றால் தெய்வத்தை என்னவென்று சொல்வார்களாம்? ராமனும் சீதையும் நெய்யில் வறுத்தெடுத்த கன்றுக்குட்டி இறைச்சியை ஒருவருக்கொருவர் ஊட்டிமகிழ்ந்து சல்லாபம் செய்திருந்த வர்ணனைகளையெல்லாம் வான்முகி ராமாயணத்திலிருந்து கம்பன் தணிக்கை செய்துவிட்டதனால் நாம் அறியாத செய்திகளாகி விடுமா? அனுமன் சீதையை இலங்கையில் சந்தித்த போது, உங்கள் கவலையால் இராமன் மது மாமிசத்தை விட்டு விட்டார், என்று கூறுவதை வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டத்தில் சர்க்கம் 37 குறிப்பிடுகிறது.
புத்தருக்கு பின்னர் பெளத்தம் கொல்லாமையை வலியுறுத்தி இந்தியாவெங்கும் கால்பரப்பியது. ஜைனமும் ஆசீவகமும் கொல்லாமையை மட்டுமன்றி புலாலுண்ணாமையையும் இறுக்கமாக கடைப்பிடிக்க கோரியது. அசோக மன்னரின் ஆட்சி பிரதேசமெங்கும் பார்ப்பனீயம் புறமுதுகு காட்டி ஓடத்தொடங்கியது. இந்த காலகட்டத்துக்கு பின்னர்தான் இந்த ஆரிய -பார்ப்பனர்கள் மாமிச உணவை மெது மெதுவாக தாமும் கைவிடத்தொடங்கினர். மஹா மாதத்தில் மட்டும் பார்ப்பனர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது. மஹா மாதத்தில் மாட்டிறைச்சி வெட்டுவது பற்றிய வர்ணணை பாரத கதையில் அடிக்கடி வருவதை அவதானிக்கலாம்.
"மகாசு கவோ ஹன்ஜந்தே பல்குணிஷு ச்ச உஹாயதே"
அதாவது "மஹா மாதத்தில் பசுக்கள் கொல்லப்படுகின்றன" "பல்குணி மாதத்தில் அவை எழுப்பப்படுகின்றன".
"அர்ஜுனாஸ்ய இமே பனாஹ் நெமே பனாஹ் சிகண்டினாஹ்,
கிரிந்ததி மம கத்ராணி மகா மஸே கவம் இவா"
இது போரின் இடையே பீஷ்மர் கூறுகின்ற வார்த்தைகள் ஆகும் அதாவது,
"ஒரு சிகண்டி வேடமணிந்து என்னைநோக்கி விடுக்கப்படும் அம்புகள் நிச்சயம் அர்ச்சுனனுடையவையே ஏனெனில் அவை மஹா மாதத்தில் பசுக்களை வெட்டுவதைப்போல என் தசைகளை வெட்டுகின்றன". என்கின்றார்.
எனவே பார்ப்பனர்கள் முற்காலத்தில் தாராளமாக மாட்டிறைச்சி உண்டுள்னர்,பின்னர் படிப்படியாக அதனை குறைத்து இறுதியில் முற்றாக நிறுத்தியுள்ளனர்.
ஆற்றிலே குளிக்கவரும் கிராமத்து பெண்களின் ஆடைகளை திருடி "கொங்கைகள் தெரிய கைகளை உயர்த்திக்கொண்டு வெளியே வாருங்கள் அப்போதுதான் ஆடைகள் கிடைக்கும் என்று சதா காவாலி வேலைசெய்யும் கண்ணனின் கதையை இற்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிசங்கரர் புனிதமாக்கி பரப்பியத்திலிருந்துதான் இந்த கண்ணனோடு சேர்ந்து அவனது மாடுகளும் புனிதமாயின. இவைதான் வரலாறுகள் ஆகும்.
இவை அனைத்தையும் குழி புதைத்து விட்டு ஐயாயிரம் வருடகாலமாக பசுவை தெய்வமாக வழிபட்டு வருகின்றோம் என்கின்ற கதைகள் இனி வேக முடியாது.
0 commentaires :
Post a Comment