6/17/2018

பாவப்பட்டது பணமல்ல கிழக்கு பல்கலைக்கழக சமூகமே!

பாவப்பட்டது பணமல்ல  கிழக்கு பல்கலைக்கழக சமூகமே!Résultat de recherche d'images pour "பாவப்பட்டது அந்த பணம் அல்ல  கிழக்கு பல்கலை கழக சமூகமே"


அண்மையில் வடமாகாண சபை விவாதமொன்றில்  ஒன்றில் எதிர்க்கட்சி  தலைவர் தவராஜா முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா நிதியினை மீள வழங்குமாறு கோரிஇருந்தார்.

அந்த நிதியை திரட்டும் போது அதற்கு ஒப்புதல் வழங்கியவர் தவராஜா ஆகும். அதுவும் அவரது பதவி நிலையை பொறுத்தவரை அது மிக சிறியதொரு நிதியாகும்.  இருந்த போதிலும்  அதை அவர் மீள கேட்கின்றார்  என்றால் அது வெறுமனே பணப்பெறுமதியின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்ட பிரச்சனையாக இருக்க முடியாது. அந்த குறித்த நிகழ்வு நடந்தேறிய விதம் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் பிரச்சனையிலிருந்தே அவரது கோரிக்கை எழுந்திருக்க வேண்டும்  என்பது.சாதாரணமாக எல்லோருக்கு புரியக்கூடியதொன்றாகும்.

அந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எனப்படுகின்ற சிலர் தண்டல்காரர்களாக நடந்துகொண்டு அந்நிகழ்வுக்கு ஊறு விளைவித்தமை பலரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வன்னியிலிருந்தும்  கிழக்கிலிருந்தும்  சென்ற பலர் அநாகரிகமாக இந்த பல்கலை கழக மாணவர்களால் நடத்தப்பட விதங்கள் பரவலாக செய்திகளில் வந்தன. 

இத்தகைய தண்டல்காரர்களுக்கு இடமளித்ததன் மூலம் வடமாகாண சபையானது அந்த நிகழ்வை நேர்த்தியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து   தவறியிருந்தது. அதன்காரணமாகவும்  அத்தகைய  பொறுப்பற்ற தன்மையை சுட்டிக்காட்டும் விதமாகவும் கூடவே  வன்னிமக்களுக்கும் கிழக்கு மக்களுக்கும் அந்நிகழ்வில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் அவரது நிலைப்பாட்டை  உறுதி செய்யும் முகமாகவே அவரது நிதிப்பங்களிப்பை மீள வழங்குமாறு அவர் கோரினார்.

மாறாக இங்கே பிரச்சனைக்குரியது  ஏழாயிரம் ரூபாய் நிதியல்ல.

ஆனால் இந்த பிரச்சனையை திரிபு படுத்தி  தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஒரு பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி தலைவராக தனது பணியை ஆற்றிவரும் தவராஜாவை   முள்ளிவாய்க்காலில் அழிந்து போன மக்களுக்கு எதிரானவராக காட்ட முனைகின்றன. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என்னும் ஒரு குழுவினர் அவரை பழி  தீர்க்க எண்ணியே   கிழக்கு பல்கலை கழக மாணவர்களை கொண்டு. இந்த பண வசூலிப்பில் ஈடுபட்டனர்.

 எதிர்க்கட்சி தலைவர்  அந்த பணத்தை அவர் மீள கேட்டது வட மாகாண சபையிடமே  ஆகும். அவருக்கு அதை  மீள தருவதாயின் அது வட மாகாண   சபை நிர்வாகம் சம்பந்தப்பட்டதொன்றாகும். மாறாக பல்கலைக்கழகத்துக்கும் நிதி கொடுக்கல் வாங்கலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அப்படி தங்களது நியாயமற்ற நடவடிக்கைகளே இவ்வித முரண்பாடுகளை தோற்றுவித்தது என்பதாய் உணர்ந்து  யாழ் பல்கலைக்கழக சமூகம் பரிகாரம் தேடுவதானால்  இந்த நிதி சேகரிப்பில் அவர்களே ஈடுபட்டிருக்கவும் முடியும். அல்லது யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்தும் கூட இந்த செயற்பாட்டில் ஈடு பட்டிருக்க முடியும்.

அப்படியுமில்லாமல்  ஆனால் அவசியமற்ற விதத்தில்   அதிலும் கிழக்கு பல்கலைக்கழகம் தனித்து இதில் ஏன் மூக்கை நுழைத்தது என்கின்ற கேள்விகள் எழுகின்றன. இதில் யாருக்காக கிழக்கு பல்கலைக்கழகம் ஈடுபட நேர்ந்தது.

"மட்டக்களப்பானிடம் பணம் சேர்த்து கொடுத்தால்தான் தவராஜாவை அவமதித்ததாகும்" என்றால், அப்போதுதான் அவருக்கு "ரோசம் வரும்"  என்றால் மட்டக்களப்பானை  எந்த இடத்தில் வைத்து இவர்கள் சிந்திக்கின்றார்கள்?  ஏற்கனவே "மட்டக்களப்பான சுத்த தமிழன் இல்லை அல்லது துரோகி" ஆனாலும் அவர்களுக்கிருக்கும் ரோசம் கூட தவராஜாவுக்கு என்பதை காட்டவா? 

யாழ்- மேலாதிக்க- மேட்டுக்குடிகளின் சிந்தனை மையமான யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் தூண்டுதலில் கிழக்கு மாணவர்கள் இதில் பலிக்கடாக்களாக்க பட்டுள்ளனரா? ஏமாற்றப்பட்டுள்ளனரா?

இது பற்றி கிழக்கு பல்கலை கழகம் தான் இதற்கு பதில் தேட வேண்டும்.
இல்லை இந்த விடயத்தில் யாருடைய தூண்டுதலுமின்றி தங்கள் செயற்பாடு அமைந்தது என்று அவர்கள் சொல்ல முனைந்தால் கடந்த காலங்களை பற்றிய அதாவது கிழக்கு பல்கலை கழக சமூகத்தினர் ஏன் ஒரு போதும் கிழக்கு மாகாண சபையில் இது போன்ற பல நிகழ்வுகள் நடந்த போது அதில் தலையிடவில்லை. உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி செய்தபோது முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு நிதி ஒதுக்கீடுகளில் ஒரவஞ்சனை செய்தார் என்கின்ற பலமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறைந்த பட்சம் ஒரு எதிர்ப்பறிக்கையை கூட உங்களால் விட முடிய வில்லையே? ஏன் அந்த ஆட்சி தமிழ் தேசியத்தின் பெயரில் நடை பெற்றதாலா? 

  

கல்குடாவில் மதுபான தொழிற்சாலையை தொடங்கியபோதும் தற்போது மினரல் வாட்டார் கம்பெனி புல்லுமலையில் ஆரம்பிக்கப்படும் போதும் இந்த தொழிற்சாலைகளால் மக்களுக்கு என்ன தீமைகள் என்று ஆராய்ந்து எத்தனை அறிக்கைகளை வெளியிட்டது கிழக்கு பல்கலை கழக சமூகம்? இல்லை நல்லாட்சிக்கு முட்டு கொடுக்கும் தமிழ் தேசியத்துக்கு பங்கம் வந்துவிட கூடாதென்று வாளாதிருக்கின்றீர்களா?   கிழக்கின் சமூக பொருளாதார செயற்பாடுகள் பற்றிய என்ன கரிசனையை இதுவரை உங்களது ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன? அப்படி ஏதும் இருந்தால் அவற்றை தயவுடன் அறியத்தாருங்கள்.

மாறாக யாழ்ப்பாண பல்கலை கழக சமூகத்தில் வழித்தடங்களில் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்க வேண்டாம். பார்த்தீர்களா பாவப்பட்ட பணமென்று ஊரை ஏமாற்றி பிரச்சாரம் செய்து நீங்கள் சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு வட மாகாண சபை முதல்வரிடம் அதனை கையளிக்க சென்ற போது என்ன நடந்தது? அதை ஏற்பது ஏற்காதது வேறு பிரச்சனை.ஆனால் கிழக்கிலிருந்து வந்தீர்களா? உள்ளே வாருங்கள் என்று கூட அழைக்காமல் முதல்வர் உங்களை அவமதித்த விதத்தை.பார்த்தீர்களா?  அவர் வெளியேறும்வரை  நீங்கள் நாய்போல காத்திருந்து வாசற்படியில் வைத்து உங்களுக்கு பதில் சொல்லி அனுப்பியுள்ளார். மதியாதார் தலை வாசல் மிதியாதே என்பது மூதுரை. உங்களுக்கு ஏன் இந்த வம்பு?

எனவேதான் சொல்கின்றேன் தவராஜா மீளக்கேட்டு நீங்கள் சேர்த்து கொண்டு போன பணம் பாவப்பட்டதல்ல.  நீங்களே பாவப்படடவர்கள். பாவப்பட்டது அந்த பணம் அல்ல  கிழக்கு பல்கலை கழக சமூகமே பாவப்பட்டது.






0 commentaires :

Post a Comment