6/10/2018

நீரின்றி அமையாது உலகு

Résultat de recherche d'images pour "mineral water   sri lanka production"

 "நீரின்றி அமையாது உலகு" என்பது முதுமொழி ஆனால் இந்த நவீன உலகில் எமது நிலங்களை நீரற்ற தரிசு நிலங்களாக ஆக்குவதையே நோக்காக கொண்டு மனிதன் செயல்பட்டு வருகின்றான். தற்போது புல்லுமலையில்  மினரல் வாட்டர் கம்பெனி ஒன்று உருவாகி வருகின்றது. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கின்ற குரல்கள் வெளிவருகின்றன. எமது நீர்வளத்தை உறிஞ்சி எமக்கே விற்பனை செய்கின்ற இந்த வியாபாரிகளை நிச்சயம் நமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். எங்கோ இருந்து வரும் காப்ரேட் முதலாளிகளின் பணப்பையை நிரப்பிக்கொண்டு எமது நிலங்களை வறண்ட பூமியாக்கும் திட்டங்களை நம் ஒரு  அனுமதிக்க கூடாது.

 ஏற்கனவே கல்குடாவில் கட்டப்படுகின்ற மதுபான தொழிச்சாலைக்கான எதிர்ப்புக்களும் ஆரம்பத்தில் இப்படித்தான் எழுந்தன. ஆனால் அது நல்லாட்சி அரசின் பெரும்புள்ளிகளால் நடத்தப்படுவதால் தமிழ் தலைவர்களால் பத்திரிக்கை அறிக்கைகளைத்தாண்டி ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதன்காரணமாக அந்த பிரதேச மக்களின்  எதிர்ப்புணர்வுகள் காலப்போக்கில் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

 இந்த பண முதலைகளின் ஆலைகளும் கம்பெனிகளும் எவ்வளவு தூரம் இயற்கை வளங்களை அழிக்கின்றன? அவற்றினால் வெளியேற்றப்படும் இரசாயன கழிவுகளால் எமது காற்றும்,நிலமும் எவ்வாறு மாசு படுகின்றன? அவற்றின் காரணமாக மக்கள் எதிர்கொள்ள நேரும் உடனடி மற்றும் பின்விளைவுகள் யாவை? என்பது பற்றியெல்லாம் பரந்த அறிவை மக்களிடம் யாரும்  கொண்டு செல்வதில்லை. 

 தமிழ் நாட்டு அரசியலை குப்பை என்று தூற்றுகின்ற நாம் அண்மையில் நடைபெற்ற தூத்துக்குடி போராட்டம் போன்ற ஒன்று இலங்கையில் இடம்பெறாமைக்கு என்ன காரணம் என்று யோசிப்பதில்லை. அங்கே  ஆயிரம் குப்பைகள் அரசியலில் வலம் வந்தாலும் சூழல்பற்றியும் சர்வதேச கப்ரேட் நிறுவனங்களின் சுரண்டல்கள் பற்றியும் மக்களுக்கு எடுத்துச்சொல்லும்  ஒரு முற்போக்கான வரலாற்று பாரம்பரியம் தொடர்ச்சியாக உண்டு. அதற்காகவே செயற்படும் தேர்தலுக்கப்பாலான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அங்குண்டு. அதற்காகவே வாழ் நாள் ஊழியர்களாக தம்மை தியாகம் செய்து போராடிவருகின்ற புரட்சிகர தோழர்களும் அங்குள்ளனர்.

அதனால்தான்,ஸ்ரெட்லையிட்டுக்கெதிராகவும்,கொக்கா கோலாவுக்கு  எதிராகவும், டாஸ்மார்க்குக்கு எதிராகவும்,நீட் தேர்வுக்கெதிராகவும்  அணுஉலைக்கெதிராகவும்? ஏன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அவர்களால் போராட முடிகின்றது.


ஆனால் நம்மிடையே இத்தகைய போராட்ட  வரலாறுகள் மிகக்குறைவு. 1960 களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சாதிய விடுதலைப்போராட்டங்களை வழிநடத்திய தலைவர்கள் போன்று இன்று எமக்கு தலைவர்கள் கிடையாது. அந்த அப்போராட்டங்களை கொண்டு நடாத்திய இடதுசாரி அமைப்புக்களும்,எழுத்தாளர்களும் புத்தி ஜீவிகளும் போன்ற சிவில் பிரதிநிதிகள் இன்றைய தமிழ் சூழலில் மிக மிக குறைவு.  இடது சாரி என்றால் என்ன? அதிகம் பேசினால் "அப்ப  நிச்சயம் துரோகியாகத்தான் இருக்கும்" என்று சிந்திக்கின்ற நிலையில்தான் நமது சமூகமும் இருக்கின்றது.

இன்றைய நிலையில் இடது சாரி அமைப்புகளுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமே கிடையாது.  தவிர சமூகம், அரசியல், வர்க்கம்,சூழலியல்  போன்ற அரசியல்  பார்வைகளை எடுத்துச்செல்லும் சங்கங்களோ அமைப்புகளோ எதுவுமே இல்லாத வரட்சியே காணப்படுகின்றது. ஊடகங்களின் கேவலமோ  சொல்லி மாளாது. மக்களுக்கு எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது என்கின்ற கரிசனை இம்மியளவும் இல்லை. கிழக்கு பல்கலைக்கழக சமூகமோ யாழ்-பல்கலைக்கழக சமூகம் காட்டும் வழித்தடத்தை தாண்டி சிந்திக்க இன்றுவரை தயாரில்லை.

இத்தனைக்கும் மத்தியில்  நம்பிக்கை தருகின்ற ஒரே ஒரு விதிவிலக்காக  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினுடைய வேலையுரிமைக்கான போராட்டம் ஒன்று மட்டுமே  உறுதியுடன் போராடி வருகின்றது.

மறுபுறம் இனவிடுதலைப்போராட்டங்களின் பெயரில்  பலியாகிப்போன ஆயிரக்கணக்கான ஏழை இளைஞர்,யுவதிகளின்  விலை கொடுப்புக்கள் அனைத்தும் வீணடிக்கப்படுகின்றன. அவை  காலவாதியாகிப்போன தமிழ்  தலைவர்களின் அரசியல் மூலதனமாகி உள்ளது. மீண்டும் மீண்டும் இனவாதிகளும் சாதிமான்களுமே அரசியலில் கோலோச்ச முடிகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்னர் விட்ட இடத்திலிருந்து மேட்டுக்குடிகளின் அரசியல் பதவிகள் மீண்டும் தொடர்கின்றன.

இந்த நிலையில் மக்கள் எப்படி போராட முடியும்? 

அதனால்தான் கல்குடா மதுபான தொழிற்சாலையை முடக்க முடியவில்லை. திருக்கோவிலில் உருவாகியுள்ள இல்மனைட் தொழில் சாலையை பற்றிய தகவல்கள் கூட மக்களை சென்றடையவில்லை. அதனால்  ஏற்படக்கூடிய  ஆபத்துக்கள் இலங்கையில் வரைபடத்தையே மாற்றிவிடக்கூடிய வல்லமை படைத்தன.
இந்த இல்மனை தொழிற்சாலை தொடர்ந்தால் இன்னும் இருபதோ முப்பதோ வருடத்தில் 
அக்கரைப்பற்றிலிருந்து கடலோரமாக அறுகம்பை வரையிலான  நிலப்பரப்பு அழிந்து கடலும் களப்பும் ஒன்றாகிவிடும் ஆபத்து காத்திருக்கின்றது. வடபுலத்து கடல் வளங்களை சூறையாடும் இந்திய இழுவைப்படகுகளை எதிர்த்து பேசினால் இந்திய தூதரகத்தை விரோதித்துக்கொள்ள வேண்டிவரும் என்று வாழாதிருக்கின்றார்கள் தமிழ் தலைவர்கள். 

இந்நிலையில்தான் இன்று புல்லுமலையில் மினரல் வாட்டார் தொழிற்சாலையும் தொடங்கப்படுகின்றது. இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அமல் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். வரவேற்கத்தக்க விடயம். ஆனால் இந்த தொழிற்சாலையை உருவாக்கும் பின்னணியில் அமைச்சர் ஹிஸ்புல்லா இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் மினரல் வாட்டர் கம்பெனியால் வரக்கூடிய ஆபத்துக்களை விட அதை ஒரு முஸ்லீம் தலைவர் உருவாக்குவது பற்றியே அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.


இந்த விடயத்தில் யார் அதை உருவாக்குகின்றார் என்பதை விட அதனால் ஏற்படும் ஆபத்துக்களையே மக்களிடம் பேசு பொருளாக்க வேண்டும்.  ஒரு தமிழ் தலைவரின் பின்னணியிலோ ஒரு தமிழ் முதலாளியினாலோ இந்த கம்பனி  ஆரம்பிக்கப்பட்டால்  மக்களுக்கு பிரச்சனையில்லையா? இதே அளவு ஆபத்துக்களை அப்போதும் மக்கள் எதிர்கொள்ளத்தானே வேண்டும்? எனவே இது தமிழ் முஸ்லீம் பிரச்சனையல்ல. வர்க்கம் சார்ந்த பிரச்சனையாகும். எனவே நமது சுற்று சூழலை பாதுகாக்க இன,மதம்,மொழி கடந்து போராட முன்வர வேண்டும். அதுவே இன  மதம் கடந்து மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் வாய்ப்பை உருவாக்கும். ஏனெனில் புல்லுமலை பிரதேசத்தில் தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் வாழுகின்றார்கள். 


மாறாக  இது ஒரு ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இனவாத விடயமாக சுருக்கப்படும் ஆபத்து உண்டு. அத்தகைய இனவாத பிரச்சாரங்கள் மேலோங்கினால் அதனுடாக   சில தமிழ் தலைவர்கள் பயன் பெறுவதை தவிர  வேறெதுவும் நடக்காது.

எனவே அரசியல் தலைவர்களுக்கப்பால் சிவில் அமைப்புகளும்,பட்டதாரிகள் சங்கம்,கிழக்கு பல்கலைக்கழக சமூகம் போன்றவையும் இதுகுறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே எடுத்துச்செல்வதில் சிரத்தையுடன் களமிறங்கி செயற்பட முன்வரவேண்டும்.

போராட்டம் ஒன்றே  வாழ்வை நிர்ணயிக்கும்

எம்.ஆர்.ஸ்டாலின்

.








0 commentaires :

Post a Comment