இரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக மேற்குலக நாடுகள் கூறியுள்ளன.
தற்போது மீதமுள்ள அனைத்து நாடுகளுடன் தொடர்ந்து செயல்படப் போவதாக பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூறியுள்ளது. தங்களது செயல்பாடுகளை தடுக்க வேண்டாம் எனவும் இந்நாடுகள் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளன.
2015 இரான் அணு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ரஷ்யா மற்றும் சீனாவும் தங்களது ஆதரவைத் தொடரவுள்ளதாக கூறியுள்ளது.
முன்னதாக, இரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனை உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
0 commentaires :
Post a Comment