5/10/2018

மலேசியா: 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி

மலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹாடீர் மொஹமத் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார். 
மஹாடீர் முகமத்
92 வயதாகும் அவர், 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பேரீஸான் நேஷ்னல் கூட்டணியை அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடித்தார்.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும், மலேசிய பிரதமருமான நஜிப் ரசாக்கை எதிர்த்து இந்த தேர்தலில் போட்டியிட தனது அரசியல் ஓய்வை விலக்கி கொண்டு மஹாடீர் முகமத் தேர்தல் களமிறங்கினார்.
மஹாடீர் மொஹமதின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவையாகும்.
தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹாடீர் மொஹமத், ''நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை; நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்'' என்று கூறினார்.
வியாழக்கிழமையன்று தனது பதவியேற்பு நடக்கும் என்று மஹாடீர் மொஹமத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment