வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி தமிழீழத்துக்காக ஆயுதமேந்துமாறு அழைப்பு விடுத்தவர்கள் தமிழரசு கட்சியினர் என்பது வரலாற்று உண்மை. அந்த வகையில் இளைஞர்களின் கைகளிலே ஆயுத கலாசாரத்தை திணித்தவர்கள் இன்று மிஸ்டர் கிளீன் வேசமிடும் வெள்ளை வேட்டி அரசியல் வாதிகளேயாகும். அதேபோல அவர்களின் கோரிக்கைக்கிணங்க வன்முறை வழியில் பயணித்து ஜனநாயக வழிக்கு திரும்பிய இயக்கங்களே இன்று தமிழர் தம் அரசியலில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெலோ,புளட் ,ஈபிஆர் எல் எப்(அனைத்து கிளைகளும்) ஈபிடிபி,ஈரோஸ் என்று இன்று வலம்வரும் அனைத்து தலைவர்களினதும் கரங்களும் இரத்தத்தால் தோய்ந்தவைதான். இதில் ஒருவருக்கொருவர் சற்றேறக்குறைய வித்தியாசங்கள் இருக்கலாமேயன்றி யாரும் இக்குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப முடியாது.
இந்த நாட்டிலே ஒரு லட்ஷம் கொலைகள் நடந்திருக்கின்றது. ஆனால் பேச்சு வார்த்தைகள், தீர்வுகள், ஒப்பந்தங்கள் ,ஜனநாயக பாதை, தேர்தல் அரசியல் என்று வந்தபின்னர். அனைவரும் மக்களிடம் சென்றனர்..மக்களின் ஆணையை பெற்றுத்தான் அவர்கள் அனைவரும் இன்று அரசியல் செய்கின்றனர். பலர் அரசியல் தலைவர்களாக இருக்கின்றனர். இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும், ஜனநாயக போராளிகளும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினரும் உள்ளடக்கம்.துரோகி துரோகி என்று காலமெல்லாம் தமிழரசு கட்சியினர் வடக்கில் ஈபிடிபி யுடனும், கிழக்கில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடனும் இன்று தோழமை கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் மக்கள் அனுபவிக்க நேர்ந்த அனைத்துவிதமான இன்னல்களுக்கும் தத்தமது சார்பிலான பரிகாரமாக கிடைக்கின்ற அரசியல் அதிகாரங்களுடாக சேவையாற்றி வருகின்றனர் எமது அரசியல் தலைவர்கள். அந்தவகையில் பிள்ளையான் தனக்கு கிடைத்த பதவிகளை வைத்து யாரும் குறைத்து மதிப்பிட முடியாத மக்கள் பணி ஆற்றியுள்ளார். தமிழரசு கட்சியினரின் 60-70 வருட கால வரலாற்றிலே அதற்கு மாற்றான தனியொரு கட்சியாக கிழக்கில் யாரும் எழுந்து நிற்கவில்லை. எனவேதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவரை சிறையிலே தள்ளிவிட்டோம் என்று தமிழரசு கட்சியினர் நின்மதி பெரும் மூச்சு விட்டனர்.
பிள்ளையான வெளியில் இல்லாத மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபை தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்துவிதமான அரசியல் அதிகாரங்களும் அதி உச்ச பட்சமாக தேர்தல் பிரச்சாரங்களுக்காக துஸ்பிரயோகம் செய்யப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்கு கோரி கோழிக்குஞ்சுகள்,தென்னம்பிள்ளைகள் என்று லஞ்சம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்புக்கான வாக்குறுதிகள் கூட்டமைப்பு எம்பிக்களை முன்வைத்து வழங்கப்பட்டன. இறுதி நேரத்தில் பண விநியோகம் கூட பட்டிருப்பு தொகுதியில் இடம்பெற்றது.
ஆனால் வெறும் மோட்டார் சைக்கிளிலும் பஸ்களிலும் பயணித்தே தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. பிள்ளையானின் கடந்தகால "மக்கள் பணிகள்"மட்டுமே தேர்தலுக்கான மூலதனமானது.பிரசுர செலவுகளுக்கு கூட வேட்பாளர்கள் திண்டாடினர்.இத்தோடு ஒழிந்தான் பிள்ளையான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் மேடைகளில் கொக்கரித்து திரிந்தனர்.
ஆனால் தமிழரசு கட்சியினரின் இந்த தகிடுதத்த கணிப்புகளை பிள்ளையான் சிறைக்கம்பிகளுக்கு பின்னாலிருந்து கச்சிதமாக தகத்தெறிந்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்42613 வாக்குகளை பெற்று 39 ஆசனங்களை வென்றுள்ளது . இது கடந்த பொது தேர்தலில் சந்திரகாந்தன் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும்போது இரண்டுமடங்கான வளர்ச்சியாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுகட்சி, டெலோ,புளொட் என்கின்ற மூன்று கட்சிகள் இணைந்து தேசிய கூட்டமைப்பு சார்பில் 79740வாக்குகளை பெற்று 79 ஆசனங்களை வென்றுள்ளனர். இந்நிலையில் எலிவளையானாலும் தனி வலையென்று தனித்து நின்ற பிள்ளையானின் வெற்றி அபரீதமானதாகும்.
அதிலும் தமிழரசுகட்சியின் செயலாளர் துரைராசா சிங்கம்,எம்பிக்களான ஸ்ரீநேசன்,அமல்,யோகேஸ்வரன் போன்றோரின் சொந்த தொகுதியான கல்குடா தொகுதியில் தமிழரசுகட்சியின் வாக்கு வங்கியில் வெகுவான சரிவை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஏற்படுத்தி உள்ளனர்.கல்குடாவின் எந்த ஒரு சபையையும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.செங்கலடியில் முன்னிலையிலும் வாழைச்சேனையிலும் வாகரையிலும் சரிக்கு சமனாகவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி ஈட்டியுள்ளனர். செங்கலடியில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆட்சியமைத்து விடாமல் . தமிழரசு கட்சியானது தமது ஆதரவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கி சந்தோசப்பட்டுக்கொண்டாலும் வாழைச்சேனையில் பிள்ளையானை அசைக்க முடியவில்லை. நாளைஇடம்பெறவுள்ள தவிசாளர் தெரிவில் வாகரை பிரதேச சபையும் தமிழ் மக்கள் வசப்படுவதை தமிழரசுகட்சியால் தடுக்க முடியாது.
இந்த நிலையில்தான் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வளர்ச்சியை எப்படி எதிர்கொள்வது என்று புரியாது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர். பிள்ளையான் மீதான வன்னி புலிகள் கால பிரச்சாரங்களை அடியொற்றிய சேறடிப்புக்களை சுமந்து கொண்டு ஊடக மாஃபியாக்கள் மீண்டும் முருங்கை மரங்களில் ஏறுகின்றன. தமிழ் வின், தமிழ் சிஎன்என், தமிழ் நாதம் என்று தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்த மாபியாக்களின் நயவஞ்சக அரசியலை கிழக்கு மாகாண மக்கள் நன்கே புரிந்து கொள்வர்.
மீன் பாடும் தேனாடான்
0 commentaires :
Post a Comment