விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் துணைப் பேராசிரியர் ஒருவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறான செயல்களுக்குத் தூண்டுவது போன்ற தொலைபேசி உரையாடலின் பதிவு சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, அந்தப் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டி உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.
இந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.
0 commentaires :
Post a Comment