சாதிய-சமூகத்தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி மறைந்த, சமூகப் போராளிகளை நினைவேந்தும் நிகழ்வை கடந்த 30-07-2016 ல் நாம் முதல்முறையாக நடத்தியிருந்தோம்.
சாதியம் உட்பட, சமூக அரசியல் தளங்களில் நிலவும் பல்வேறுதரப்பட்ட ஒடுக்குமுறைகளை பேசுவதற்கும், கலந்துரையாடுவதற்குமான ஒரு தளமாகவே நாம் ‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கத்தை’ பயன்படுத்த முனைகின்றோம்.எனவேதான் சாதியம், தலித்தியம், மார்க்சியம், முதலாளித்துவம் என ஒன்றை ஒன்று மறுதலிக்கும் சிந்தனைகளோடும், சிந்தனை உடையவர்களோடும் நட்போடு இணைந்து, எம்மையும் உரசிப்பார்க்கும் ஒரு எத்தனமே ‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம்’.
நாம் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி எனும் அமைப்பினூடாக செயல்படுபவர்கள் என்பதற்காக சாதியம் குறித்த விடயத்தில் மட்டுமே தேங்கிக் கிடப்பவர்களாக கருதும் சிலரின் ‘பொதுக் கருத்துநிலையை’ நாம் மறுக்கின்றோம்.
மீண்டும் அதை வலுப்படுத்துமுகமாக கடந்த 25-03-2018ல் ‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கத்தை’ ஒழுங்கு செய்திருந்தோம். இதிலும் சாதியம் உட்பட, மாற்றுப்பாலின விவகாரம், இலங்கையின் இனவாத அரசியல் விவகாரம் என பன்முக உரையாடலுக்கான ஒரு ‘களவாசலை’ திறந்து வைத்தோம். எமது இம்முயற்சிக்கு வழமைபோலவே இலக்கிய நண்பர்கள். அரசியல் கட்சி சாரந்தவர்கள், சமூக அமைப்பு சார்ந்தவர்கள் என பலரும் சமூகமளித்திருந்தனர். இக்கலந்துரையாடலானது எமது திட்டமிடுதலையும், செயல்பாட்டையும் கடந்து, இதில் சமூகமளித்த அனைவரதும் கூட்டு முயற்சியாக நிலைமாறிய தருணத்தையும் இறுதியில் எம்மால் உணரக்கூடியதாக இருந்தது.
இந்நிகழ்விற்கு பிரான்ஸ்வாழ் தோழர்கள், தோழியர்கள் உட்பட, லண்டன், ஹொலண்ட், டென்மார்க், ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு சிரமங்களையும் பாராது சமூகமளித்த நண்பர்கள், தோழர்கள், தோழியர்களோடு தொடர்ந்தும் கைகோர்த்து பயணிக்கவே ஆவலுள்ளவர்களாக இருக்கின்றோம்.
இந்நிகழ்வின் தொகுப்பை நண்பன் கே.கே. ராஜா மிக அழகாக விபரித்து ‘வரைந்திருக்கிறார்’, உங்கள் ‘வாசிப்பிற்காக’.
0 commentaires :
Post a Comment