3/16/2018

டெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு 1260 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் சனத்தொகையின் அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார். டெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு அறிவிப்பு (படங்கள்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று (15) காலை மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. டெங்கு அதிகளவில் காணப்படுகின்றன. அதனை தவிர அம்மை நோய் மற்றும் தொழுநோய் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் நிலையுள்ளது. நோய்களை அடையாளம் காண்போரின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்லும் நிலை காணப்படுகின்றது. அவற்றிக்கான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்றுவரையில் 1985 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்றுவரையில் 1260 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். சனத்தொகை ரீதியாக பார்க்கும்போது டெங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவானோரைக் கொண்ட இலங்கையில் முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மண்முனை வடக்கு பிரதேசத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். 248 பேர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஏறாவூர், ஆரையம்பதி பகுதிகளிலும் அதிகளவானோர் இனங்காணப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் மண்முனை வடக்கிலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

டெங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் மண்முனை வடக்கு பிரதேசத்தில் எந்த மரணச்சம்பவங்களும் இடம்பெறவில்லை.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கல்லடி திருச்செந்தூர், கல்லடி வேலூர், நொச்சிமுனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


0 commentaires :

Post a Comment