3/10/2018

மதவாத -இனவாத அசம்பாவிதங்கள் ஏற்படாத ஒரு கட்டமைப்பை கொண்ட அரசியல் சாசனத்தை தாங்கி நிற்கும் தேசம் அல்ல இலங்கை

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி –பிரான்ஸ்

இலங்கையின் தற்போதைய இஸ்லாமிய சிங்கள சமூகங்களுக்கிடையே ‘தோற்றுவிக்கப்பட்ட’ முரண்பாடுகளும் அதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுவரும் வன்முறை நடவடிக்கைகளும் தற்செயலான ஒரு சம்பவமாக எவரும் கருதிவிடமுடியாது.
சிங்கள மக்கள் தவிர்ந்த இலங்கையில் வாழும் பிற இனமக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் வகையிலேயே இலங்கையின் அரசியல் நிர்ணய அதிகாரம் பேணப்பட்டு வருகிறது. இந்த மத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலங்கையின் அதிகார பாதுகாப்பை விமர்சிப்பதும் கண்டிப்பதன் ஊடாகவும், சாதாரண சிங்கள மக்கள் மீது நாம் விரோதம் பாராட்டமுடியாது. இந்த இஸ்லாமிய சிங்கள இனவாத வன்முறை செயல்பாடுகளால் பாதிக்ப்படுபவர்கள் சாதாரண சிங்கள மக்களாகவும் இருப்பதை நாம் அவதானிக்கவேண்டும்.
தற்போதைய இந்த நெருக்கடியான சூழலுக்கு ஆளும்தரப்பின் மீது மட்டுமே நாம் குற்றம் சாட்டும் ஆதாரங்களை குவித்துவிட்டு கடந்துவிடமுடியாது. சிங்கள கட்சிகள் சார்ந்த எந்த தரப்பினர் வந்தாலும் இந்த இனவாத, மதவாத அடிப்படைக் கருத்து நிலையில் தோன்றும் வன்முறைகளை முன்கூட்டியோ, உடனடியாகவோ தடுத்துவிடும் ஆற்றல் இருக்கமுடியாது.   எல்லாம் எரிந்து கொன்று குவித்து நாசமாக்கிய பின்புதான் உலக அரங்கத்திற்கு தனது ‘அரிதாரம் பூசிய’ முகத்தை காட்டும்.
இவ்வாறான இந்த இஸ்லாமிய இன விரோத நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் இலங்கை அரசியலில் ஈடுபட்டுவரும் அனைத்து தரப்பிரும் முன்வந்து இணைந்து செயல்படவேண்டும்.
இவை ஒருபுறம் இருக்க இலங்கையின் தற்போதைய இஸ்லாமிய சிங்கள நெருக்கடி நிலையை எமது ‘தமிழ் தேசிய பொதுப்புத்தி’ தாம் கண்குளிரக் காண்பதாக கொண்டாடி மகிழ்வதையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த இனவாத வன்முறையினால் பாதிக்கப்பட்டுவரும் இஸ்லாமி, சிங்கள மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்வாறான இன-மத அடிப்படைவாத வன்முறை நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

0 commentaires :

Post a Comment