2/07/2018

பிரிகேடியரின் இடைநிறுத்தம் ஜனாதிபதியால் வாபஸ்

லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன்னால் இலங்கை சுதந்திர தினத்தன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், ஜனாதிபதி உத்தரவின் பேரில் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.கழுத்தில் கையை வைத்து மிரட்டல் விடுத்து இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்
இவரது நடத்தை குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினம் கடந்த நான்காம் திகதி கொண்டாடப்பட்ட போது, பிரித்தானியா வாழ் தமிழர்கள் சிலர் அங்கு அமைதியான போராட்டம் ஒன்ற நடத்தினார்கள். தமக்கு தமிழீழம் வேண்டும் என்றும், தமது தலைவர் பிரபாகரன் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகின்றது.
அப்போது இலங்கை தூதரக அதிகாரிகள் இவற்றை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அங்கு வீடியோ பதிவில் ஈடுபட்ட ஒரு அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி, தனது கழுத்துக்கு குறுக்காக விரலை அசைத்து கழுத்தை அறுப்பேன் என்று எச்சரிப்பது போல சைகை காட்டியதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
அவர் அவ்வாறு சைகை காண்பிப்பது போன்ற காட்சிகளை கொண்ட வீடியோவும் இணைய தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டிருந்தன.
அந்த அதிகாரியின் நடவடிக்கையை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜாண்சனுக்கு, எண்ட்ஃபீல்ட் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோண் ரயன், மிட்சம் பகுதி உறுப்பினர் ஷிஃபோன் மக்டோனா ஆகியோர் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
தூதரகத்தின் பாதுகாப்புத்துறை அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ என்னும் அந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். 
இதற்கிடையே அந்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்வதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை மிகவும் கடுமையான ஒன்றாக எடுத்துக்கொள்வதாக கூறியுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சு, அந்த அதிகாரியை இடைநீக்கம் செய்யுமாறு லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் லண்டன் தூதரகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்புத்துறை அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆயினும் அவர் குறித்த விசாரணை ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா இதனை அறிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment