2/08/2018

ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை

ஊழல் குற்றச்சாட்டில் வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் காலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காலிதா ஜியாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தி கலைந்து போகச் செய்த பின்னர் டாக்காவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது. காலிதா ஜியா
குழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சர்வதேச நிதி உதவியை தவறாக பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை 72 வயதாகும் காலிதா ஜியா மறுத்துள்ளார்.
இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இவர் போட்டியிட முடியாமல் போகும்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் ரீதியாகப் புனையப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.
பல தசாப்தங்களாக பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு போட்டியாளராக விளங்கும் காலிதா ஜியாவுக்கு எதிரான டஜன் கணக்கான வழக்குகளில் இது ஒன்றாகும்.
ஜியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதாலும், அவருடைய சமூக மற்றும் உடல் ரீதியான தகுநிலையை கவனத்தில் கொண்டும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் வெள்ளை சேலை அணிந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் காலிதா ஜியா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிடி நியூஸ்24 தகவல் வெளியிட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment