டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் என நாட்டின் பல்வேறு முதன்மைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு மாணவர்கள் தரப்பு குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் அம்பேத்கரும், சாதிய தீண்டாமைகளுக்கு நிரந்தர எதிர்ப்புக் குரலாகிப் போன பெரியாரின் புத்தகங்களும்தான் இப்பதிப்பகத்தின் முக்கிய அடையாளங்கள்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கருப்புப் பிரதிகள் அரங்கத்தில் உள்ள புத்தகங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார் கருப்புப் பிரதிகள் நிறுவனர் நீலகண்டன்.
"இந்த வருடம் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக ‘அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும், உண்மைகளும்’ என்ற தலைப்பில் கவிஞர் ம. மதிவண்ணன் எழுத்தில் புதிய நூல் வந்துள்ளது. இந்நூல் அம்பேத்கரை இன்னும் எவ்வாறு ஆழமாக வாசிக்க வேண்டும் என்பதை கூறுகிறது.
இதனையடுத்து, இலக்கிய சமூகங்களில் திருநங்கைகள் எழுதும் புத்தகங்கள் சமீப காலமாக வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் லிவிங் ஸ்மைல் வித்யா 'மரணம் மட்டுமா மரணம்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு வந்துள்ளது.
'சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்' – பெரியார் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு அதே வேளையில் தனித்துவமான பெண் அரசியலை பேசியவர்களின் கட்டுரைகள், பேச்சுகள் ஆகியவை முனைவர் மு. வளர்மதியால் தொகுக்கப்பட்டு இரண்டாம் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
குமரன் தாஸ் எழுதிய 'சேது கால்வாய் திட்டமும் ராமேஸ்வரம் தீவு மக்களும்' நூல் முக்கியமானது இந்த நூலில் மீனவ சமூகம் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை பற்றிய முக்கிய நூல் வாசகர்களுக்காக உள்ளது. எழுத்தாளர் தேவாவின் மொழிபெயர்ப்பு நூலான 'குழந்தைப் போராளி' ஆகியவை உள்ளன.
பெண் படைப்பாளிகளில் ஜெயராணியின் 'சாதியற்றவளின் குரல்', தமயந்தியின் 'ஒரு வண்ணத்துப்பூச்சியும் சிறு மார்புகளும்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் அதிகளவில் வாசகர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
இத்துடன் கருப்புப் பிரதிகளின் நிரந்த அடையாளமாக ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் ஷோபா சக்தி எழுதிய 'பாக்ஸ் கதைகள்', 'கண்டி வீரன்' ஆகியவை அரங்கில் இடப்பெற்றுள்ளன.
‘பெரியார் – அறம் அரசியல் அவதூறுகள்’ சாதி எதிர்ப்பு அரசியலையும், அவை சார்ந்த படைப்புகளையும் கருப்புப் பிரதிகள் தங்கள் அடையாளமாக வெளியிட்டு வருகிறது. வெளியிட விரும்புகிறது" என்றார் நீலகண்டன்.
எந்தப் புத்தகம் இந்த முறை வாசகர்களால் அதிகம் வாங்கப்பட்டுள்ளது...
“வாசகர்களால் திரும்பத் திரும்ப அம்பேத்கர் சார்ந்த நூல்களும், பெரியார் சார்ந்த நூல்களும், சாதி ஒழிப்பு நூல்களும் எங்கள் கடையில் அதிகம் வாங்கப்படுகின்றன. புதிதாக வந்த எழுத்தாளர்களை விடவும் அம்பேத்கரின் ‘நான் இந்துவாக சாகமாட்டேன்’, ‘சாதி ஒழிப்பு’ ஆகிய நூல்கள் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக விற்பனையாகி வருகின்றன.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் புத்தகத் தேர்வுகள் இந்த புத்தகக் கண்காட்சியில் எப்படி உள்ளது?
நல்ல மாற்றம் காணப்படுகிறது. குறிப்பாக இவர்கள் பெரியார், அம்பேத்கர் நூல்களை தேடிப் பிடித்து வாங்குகிறார்கள். சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆணவக் கொலைகள், காதல் கலப்புத் திருமணத்தால் எழக்கூடிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரியாரையும், அம்பேத்கரை நோக்கி இளைஞர்கள் நகர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுக்கிறது. இந்த மாற்றம் எங்களுக்கு நம்பிக்கையும் ஆச்சரியத்தையும் தந்துள்ளது"
பெண் வாசகர்கள்......
"பெண் வாசகர்கள் எண்ணிக்கை புத்தகக் கண்காட்சியில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. தற்போது இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட ஒரு இல்லத்தரசியிடம் நீங்கள் என்ன புத்தகம் வாங்க விரும்புகீறிர்கள் என்று கேட்டதுபோது, அதற்கு அவர் 'நான் இந்து வாக சாகமாட்டேன்' என்ற புத்தகத்தை குறிப்பிட்டார். இம்மாதிரியான பதிலை நீங்கள் ஒரு வருடத்துக்கு முன் ப்ரவலாகக் காண முடியாது.
முன்பெல்லாம் குடும்பத் தலைவிகள் சமையல், ஜாதகம், கோலம் புத்தகங்கள் வாங்குவார்கள். தற்போது இது முற்றிலும் மாறி இருக்கிறது. ரமணி சந்திரனை தேடுவர்கள் தற்போது அம்பேத்கரை தேடுகிறார்கள். அவர்கள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்" என்றார் நீலகண்டன்.
நன்றி * த இந்து