- எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. எனவே சந்திரகாந்தனுக்கும் தனது கதையைச் சொல்வதற்கும் எம் எல்லோரையும் போல வெளி இருக்கின்றது. எமக்கும் எவ்வகையான அரசியல் தெரிவுகள் இருப்பினும், இவ்வாறான விடயங்களை நிதானமாகக் காழ்ப்பின்றி கேட்பதற்கும்/வாசிப்பதற்குமான மனநிலை அவசியம்.
-குழந்தைப் போராளியாக 16 வயதில் புலிகள் இயக்கத்தில் (90?) சேர்ந்தவர், கருணாவின் பிளவோடு 2004 வரை 14 வருடங்கள் புலிகள் அமைப்பில் இருந்திருக்கின்றார். 2008-2012 வரை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆகியிருக்கின்றார்.
சிறையில் தற்போது இருக்கும் சந்திரகாந்தன் மட்டக்களப்பிலிருந்து கைவிலங்கிடப்பட்டு திருகோணமலையிலிருக்கும் மாகாணசபை அமர்வுகளில் பங்குபெறுவதற்காய்ப் போகும்போது அவர் கடந்து செல்லும் இடங்களைப் பற்றிய நினைவுகுறிப்புகள் மட்டுமே இந்த நூல். 'சிறைப் பயணக் குறிப்புகள்' என்றாலும் இதில் சிறை அனுபவங்கள் பற்றிய விபரங்கள் அரிது. ஒருவகையில் இல்லையென்றே சொல்லிவிடலாம்.
-இதில் ஏன் தான் சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார் என்ற குறிப்பு எதுவுமே இல்லை என்பது முக்கிய பலவீனம். ஒருவர் சிறையிலிருந்தால் அவர் எதன் பொருட்டு சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார் என்று தெரிவித்திருக்கவேண்டும். ஒரிடத்தில் மட்டும், தாங்கள் ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்தபோது தமக்கு பொதுமன்னிப்புத் தரப்பட்டதாய் சொன்னார்கள், அதை அவர்கள் பின்பற்றவில்லை என மட்டும் குறிப்பிடுகின்றார்.
-இன்னொரு பலவீனம், அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை என்கின்ற மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியது. அவரது பணிகளும், குறிப்புக்களும் மட்டக்களப்போடு அடங்கிவிடுகின்றது. யாழ்ப்பாணியத்திற்கு எதிராக போராடுவதாய் அலுப்புத்தருமளவிற்கு அடிக்கடி சொல்பவர் அவர். சிலவேளை இதைவாசித்துவிட்டு திருகோணமலைக்காரரோ/அம்பாறைக்காரரோ கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வரமாட்டோமா என்று கேட்டால் சந்திரகாந்தன் என்ன விடை வைத்திருக்கின்றாரோ தெரியாது.
-முஸ்லிம் மக்கள் மீது தான் பரிவுள்ளவர் எனச்சொன்னாலும் அதை மீறி கிழக்கு மாகாணத்து தமிழ்மக்கள் மீது அக்கறை என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம்கள் மிது வெறுப்பு உமிழப்படுகின்றது. முக்கியமாய் இறால் பண்ணைகளை யாழ்ப்பாணக்காரனும், ஓட்டமாவடிக்காரனும் மட்டக்களப்பில் எடுத்துவிட்டான் என்று சொல்வதிலிருந்து, இன்றைய முஸ்லிம் முதலமைச்சர் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் அந்த காழ்ப்பு கண்கூடு. இறுதி அத்தியாயத்தில் தன்னை முஸ்லிம் வெறுப்பாளன் என்று சொல்லிவிடக்கூடும் என்று தற்பாதுகாப்பு எடுத்துக்கொள்வதெல்லாம் சும்மா 'சால்ஜாப்பு'. ஒரு முதலமைச்சராக இருந்தவர்க்கு இது அழகுமல்ல.
-தான் 2004ல் முதலமைச்சராகியபோது தமிழர்கள் பெரும்பான்மையாக மாகாணசபையில் இல்லையென்று சொல்லி தன் மீது முஸ்லிம்கள் எதிர்ப்பைக்காட்டினர் என்று சொல்லும் அதே சந்திரகாந்தன், இன்றைய மாகாணசபையில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தும், முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தற்காய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் திட்டித்தீர்க்கின்றார். இது எவ்வளவு பெரும் முரண் என்பது சந்திரகாந்தனுக்கோ அல்லது அவருக்கு ஆலோசகராக இருந்த (இருக்கும்?) மற்றும் முன்னுரை எழுதிய ஞானம் மாஸ்ரர் என்கின்ற ஸ்ராலினுக்குத் தெரியவில்லையா?
-முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தன் செய்கின்ற அபிவிருத்தி எல்லாம் மக்கள் தேர்ந்தெடுக்கின்ற ஒரு அரசியல்வாதி செய்வதில்லையா? இதில் அவர் சொந்தம் கொண்டாட என்ன இருக்கின்றது என்பதும் எனக்கு விளங்கவில்லை. ஏன் மகிந்த காலத்தில் செய்யப்பட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட அபிவிருத்திகள் எல்லாம், போர்க்காலத்தில் ஏனையநாடுகளால் கொடுக்கப்பட்ட நிதியிலிருந்தே மகிந்தா எடுத்துச் செய்திருந்தார். போர் முடிந்துவிட்டது, பணம் இருந்தது. கொஞ்சத்தை அபிவிருத்தியிற்கு புல்லுக்குத் தேவையானதை எடுத்துவிட்டு நெல்லுக்கு இறைத்தமாதிரியானது. இதை இந்த அபிவிருத்திக்குப் பொறுப்பான உயர்பதவியில் இருப்பவர் ஒருவரே நேரடியாகவே எனக்குச் சொல்லியிருந்தார். ஒரு அரசியல்வாதி இன்று மக்கள் வரிப்பணத்தில்/பிற நாடுகளின் நிதியுதவியில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டாலே ஆஹா அற்புதம், சாதனை செய்துவிட்டீர்கள் என்று பாராட்டவேண்டும் என்ற மனோநிலையை யார் உருவாக்கியது?
-இந்த 'வேட்கை' முழுதும் தமிழ்க் கூட்டமைப்பு (எனக்கும் அவர்களைப் பிடிக்காது என்பது வேறுவிடயம்)மீதும், 'வன்னிப்புலிகள்' மீதும் குற்றச்சாட்டு வாசிக்கப்படுகின்றது. இலங்கை அரசு மீது ஒருதுளி விமர்சனமும் இல்லை. என்ன பெளத்த பேரினவாத அரசு எமக்கு எல்லாவற்றையும் தந்துவிட்டதா? எமக்கு எல்லாம் கிடைத்தபோது நான் தான் இவ்வளவு காலமும் தூங்கிவிட்டேன் போலும்.
-16 வயதில் சந்திரகாந்தன், பிள்ளையான் ஆகப் போய் தன் 14 அருமையான வருடங்களை எதற்காக இழந்தாரோ அதன் சிறுதுளிகூட இன்னமும் நமக்கு எட்டவில்லை என்பதை சந்திரகாந்தன் வெளியில் சொல்லமறுத்தாலும் அவரது மனச்சாட்சி அதையறியும். அதைப் பேசும்போதுதான் ஒரு நேர்மையான சந்திரகாந்தனை நாமறியமுடியும். இனிவரும் காலத்தில் தான் பெற்ற அனுபவங்களை வைத்து அதையும் பேசுவார் என்று நம்புவோமாக.
-கிழக்கு மாகாணத்திற்கு யாழ்ப்பாணிகளாக நாம் செய்யும் அட்டூழியங்களை மறுக்கமுடியாது. நாம் எப்படி முஸ்லிம்களை வடமாகாணத்தில் இருந்து விரட்டினோமோ, அப்படியேதான் நாம் கிழக்கு மாகாணத்தவர்களை எங்களிடமிருந்து விலக்கிவைத்தோம் என்பதும் உண்மை. தமிழர்களாகிய நாம் எனக்குரிய உரிமைகளை சிங்களப் பேரினவாதம் தரவில்லை என்று கூறுகின்றோமோ, அந்தளவிற்கு கிழக்கு மாகாண மக்கள் எங்களை விட்டு விலகிப் போவதற்கும் நாமே காரணம் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும், அவர்களது தனித்துவங்களோடு அவர்கள் தனியே இருக்கவேண்டும் என்று கேட்டால் எந்தக்கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
-ஆனால் என்ன சிக்கலென்றால், சந்திரகாந்தன் வென்ற 2004-2008 தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு போட்டியிட வில்லை. அதற்குப் பிறகு நடந்த எந்தத் தேர்தலிலும் கிழக்கின் தனித்துவத்தை வலியுறுத்தும் சந்திரகாந்தனால் முதலமைச்சராகவோ அவர் சார்ந்தவர்களால் குறிப்பிட்ட ஆசனங்களை வெல்லவோ முடியவில்லை. தமிழ்க்கூட்டமைப்பே தொடர்ந்து பெரும்பான்மையான ஆசனங்களை வென்றுவருகின்றது. அது, இன்றும் வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிடாத ஓர் அரசியல் அமைப்பென்றால் கிழக்கிலிருக்கும் பெரும்பான்மையான தமிழ் மக்கள், வடக்கு மக்களோடு இணைந்து அரசியல் உரிமைகளைப் பெற விரும்புகின்றார்கள் என எடுத்துக்கொள்ளலாமா?
-சந்திரகாந்தன் தொடர்ந்து தமிழரசு கட்சியிலிருந்து, தமிழ்க்கூட்டமைப்பிலிருந்து இன்றைய தமிழ்ப்பேரவை வரை கிழக்கு மாகாணத்தவர் எவரும் தலைமையேற்கவில்லை என்று கூறுகின்றார். அப்படியெனில் சம்பந்தர் எந்த இடத்தைச் சேர்ந்தவர்? இல்லை திருமலை கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிவிட்டதா?
-16 வயதில் விடுதலைப் போருக்காய்ப் போன ஒருவர் 34 வயதில் (?) மாகாண முதலமைச்சராவாது வரவேற்கத்தக்கதே. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இவ்வளவு விமர்சனமும் வைக்கும் ஒருவர், அந்த 'வன்னிப்புலிகள்' நிறைய சந்திரகாந்தனுக்கும் அவரது நண்பர்களுக்கும் செய்ததன்பிறகு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரைக் காவிக்கொண்டிருப்பது எதற்கு? அந்த அரசியலிலிருந்து விடுபட்டு தன்னை புத்துயிர்ப்பாக்க எது தடை செய்கிறது அல்லது பெயரில் விடுதலைப் புலிகள் இருப்பது வாக்குகள் ஏதோ ஒருவகையில் கிடைக்கும் என்பதற்காகத்தான் என்றால் இது அரசியல் வியாபாரம் அல்லவா?
-இத்தனைக்கும் அப்பால் சந்திரகாந்தன் தன்னுடைய அனுபவத்தை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. இதை எழுதுவதன் மூலம் எப்படியெனினும் விமர்சனங்களை பொதுவெளியில் ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் முன்வருவது வரவேற்கத்தக்கது. எனெனில் எமது சூழலில் ஆயுதப்போராட்டம் முடிந்தபின் அரசியல் செய்கின்ற எல்லோரும் தம்மைப் புனிதர்களாக உருவாகித்துக்கொண்டு அரசியல்/செயற்பாட்டுக்களத்தில் இறங்குகின்றார்கள். அவ்வாறு செய்பவர்கள் அனைவரும் முதலில் செய்யவேண்டியது சுயவிமர்சனமே. சந்திரகாந்தன் இதை எழுதினாலும் இதில் எந்த சுயவிமர்சனமும் இல்லை என்பதும் ஒரு குறைபாடு.
-கருணாவின் பிளவோடு 'வன்னிப்புலிகள்' செய்த படுகொலைகள் பதியப்பட்டிருப்பது முக்கியமானது. இன்னமும் வெருகலில் படுகொலைகள் நடைபெறவில்லை என்பதைச் சொல்லிக்கொண்டுதான் நாம் இருக்கின்றோம். ஒரு கொலையா இருந்தாலென்ன, பத்து, நூறு கொலைகளாய் இருந்தாலென்ன? அவை கொலைகள்தான். வெளிப்படையாகவும் உரத்தும் பேசப்படவுந்தான் வேண்டும்.
-அதேகாலத்தில் கருணாவும், சந்திரகாந்தனும் நிகழ்த்திய வேட்டைகளையும் வரலாற்று பார்த்துக்கொண்டல்லவா இருந்தது. சந்திரகாந்தன் அதை எழுதாது தவிர்த்துவிடுவது அதுவும் 'எல்லோருக்குமான' முதலமைச்சராக இருந்த ஒருவர் செய்வது அறமாகாது. வன்னிப்புலிகளுக்கு ஆதரவான ஆயுதம் ஏந்தியவர்களை மட்டுமின்றி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் முதல் ரிஆர்ஓ மனிதாபிமானப் பணியாளர்வரை ஆயுதம் ஏந்தாதவர்களையும் கொன்றது யாரென்பதையும் சந்திரகாந்தனினதும், கருணாவினதும் மனச்சாட்சிகள் அறியும்?
-புலிகள் விலகிப்போகும் தமது உறுப்பினர்க்கே என்ன தண்டனை கொடுப்பார்கள் என்பது சாதாரண மக்களே அறிவார்கள். மாத்தையா போன்றோருக்கு என்ன செய்தார்கள் என்பதையும் நாடே அறியும்.மேலும் தமக்குப் போட்டியென நினைத்த சகோதர இயக்கங்களையும் என்ன செய்தார்கள் என்பதையும் வரலாறு நினைவில் வைத்திருக்கின்றது. இவ்வளவையும் ஒரளவு அறிந்திருக்கக்கூடிய 14 வருடங்கள் அதே அமைப்பில் இருந்த சந்திரகாந்தன், தங்களின் பிளவிற்குள் நடந்த சகோதரப்படுகொலையைப் பேசும்போது, இந்த நீண்டவரலாற்றை மறந்துவிட்டுப் பேசுவது நியாயமில்லையல்லவா? அந்த 14 வருடகால இயக்க வாழ்வில் அவர் சார்ந்திருந்த இயக்கத்தோடு கூட்டுப்பொறுப்பையும், அதில் தனிப்பட்ட ஒருவராக தனிப்பட்ட பொறுப்பையும் கட்டாயம் எடுத்திருக்கவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் கருணாவின் பிளவோடு நடந்ததை மட்டும் எழுதுவது இந்த நூலின் அடிப்படையையே சந்தேகம் கொள்ள வைப்பதாக இருக்கின்றது.
-எந்த இயக்கமாயிருந்தால் என்ன அல்லது ஆயுதம் ஏந்தாமல் இருந்த எங்களைப் போன்றவர்களாய் இருந்தாலென்ன எங்கள் எல்லோருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது. மக்களாக இருந்துகொண்டு எவரையும் கொலைசெய்யாதுவிட்டதால் நாமொன்றும் உயர்வானவர்களும் அல்ல. மற்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்கும் அதிகாரமும் எங்களுக்கு வந்துவிடவும் முடியாது. ஆனால் ஒருவர் அரசியல்தளத்தில் இயங்கப்போகின்றார் என்றால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டியது அவசியம் முக்கியமாய் தன்னை சுயவிமர்சனம் செய்யாதவிடத்து அவரின் அரசியல் பயணம் அவ்வளவு சிறப்பாகப் போவதில்லை என்பதை சந்திரகாந்தன் அறியவேண்டும். ஆகக்குறைந்தது அவரது ஆலோசகர்களாவது அவருக்கு இதை எடுத்துரைக்கவேண்டும்.
-இறுதியாக இன்று சட்டவான்களாக சொகுசாக வாழ்ந்துவிட்டு அரசியல்வாதிகளாகவும், பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு , செயற்பாடாளர்களாகவும்/ஆய்வாளர்களாகவும் இருப்பவர்களையும் விட, சந்திரகாந்தன் போன்று தமது இளமையை தாம் நம்பிய கொள்கையிற்காய் இழந்தவர்களுக்கு அரசியல் செய்வதற்கு பலமடங்கு நியாயங்கள் உள்ளன.
-ஆனால் அதைத் தமது தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வெளியில் வரும்போதே நிச்சயம் ஒரு பெரும் திரள் மக்கள் அவர்கள் பின் வரும். அதை சந்திரகாந்தன் மட்டுமில்லாது, இறுதி யுத்தத்தில் பல துன்பங்களை அனுபவித்த பிற முன்னாள் போராளிகளும் உணரவேண்டும். ஒருவகையில் பார்த்தால், தமது உயிரைக்கூட இழக்கத் தயங்காது, ஒரு போராட்டத்திற்காய்ச் சென்ற அவர்களைத்தான் நாம் உயரிய இடத்தில் வைத்துப் பார்க்கவேண்டும். அதுவே ஒரு பொறுப்பான சமூகத்தின் கடமையாகவும் இருக்கும்.
*நன்றிகள் முகநூல்
0 commentaires :
Post a Comment