தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கல்முனை வடக்கு நகர சபை கோரிக்கை என்பது கல்முனை முஸ்லிம்களை உசுப்பேற்றி முஸ்லிம் காங்கிரசை கல்முனையில் தக்க வைத்துக்கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரசும் அதன் சம்பந்திக்கட்சியான தமிழ் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் நாடகமாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சி தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபைக்கோரிக்கை வலுப்பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசிய கட்சியும் தம்மை ஏமாற்றிவிட்டனர் என்பதை சாய்ந்தமருது மக்கள் புரிந்து அக்கட்சிகள் ஊருக்குள் வரக்கூடாது என்று பிரகடனம் செய்திருக்கும் நிலையில் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதற்கிணங்க கல்முனை வடக்கு நகர சபை கோரிக்கையை அதுவும் காலாகாலமாக இருக்கும் கல்முனையை கல்முனைக்குடி வேறாகவும் கல்முனையை வேறாகவும் பிரிக்கும் சூழ்ச்சியை தமிழ் கூட்டமைப்பினர் முன் வைத்து இனங்களுக்கிடையில் முறுகலை உருவாக்குகிறார்கள் என்றால் இதன் மூலம் அதிக நன்மையடையப்போவது முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் கூட்டமைப்பும்தான்.
கூட்டமைப்பின் இவ்வாறான கருத்தின் மூலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கு புத்துணர்வை பெற்றுக்கொடுக்கும் நன்றிக்கடனை தமிழ் கூட்டமைப்பு செய்கின்றது.
அண்மைக்காலமாக கல்முனையில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சி அமோக வரவேற்பை பெற்றுக்கொண்டு வரும் சூழ்நிலையில் அதனை வீழ்த்தி முஸ்லிம் காங்கிரசின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் மு. காவும் தமிழ் கூட்டமைப்பும் இணைந்து இத்தகைய நாடகத்தை நடத்துகின்றன. அ.இ. மக்கள் காங்கிரஸ் வடக்கு கிழக்கு இணைப்புக்கெதிரான கட்சி என்பதாலும் முஸ்லிம் காங்கிரஸ் இணைப்புக்கு சம்மதம் தெரிவித்திருப்பதாலும் கல்முனையில் முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்த வைப்பதன் மூலமே அக்கட்சி மூலம் தமது இணைப்பை சாதகமாக்கலாம் என்ற தந்திரத்தின் வெளிப்பாடே கல்முனை வடக்கு நகர சபை கோரிக்கையாகும்.
இதன் மூலம் கல்முனையை தமிழர்கள் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தி மீண்டும் முஸ்லிம் காங்கிரசின் பக்கம் கல்முனை மக்களை உசார் படுத்துவதற்கான முயற்சியே இதுவாகும்.
கடந்த பொதுத்தேர்தலின் போதும் கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் தோற்கும் என்ற நிலையில் த. கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரனின் முட்டாள்த்தனமான கொந்தராத்து இனவாத செயற்பாட்டின் காரணமாக கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் வென்றது.
இத்தகைய கோரிக்கைகள் மூலம் கிழக்கு மாகாண சபையில் தமக்கு ஆட்சியமைக்க உதவியதுடன் அமைச்சுப்பதவிகளையும் பெற உதவிய முஸ்லிம் காங்கிரசுக்குரிய நன்றிக்கடனை தமிழ் கூட்டமைப்பு செய்கிறது. இவ்வாறான இனவாத உசுப்பேத்தல் மூலம் தமிழ் கூட்டமைப்பு தமிழர் மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்கள் மத்தியிலும் தமது வாக்குகளை அதிகரித்து அதற்கு நன்றிக்கடனாக வடக்கு கிழக்கை இணைக்கும் துரோகத்தை முஸ்லிம் காங்கிரஸ் மூலம் சாதித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
உண்மையில் தமிழ் கூட்டமைப்பினருக்கு தமிழ் முஸ்லிம் ஒற்றுமையில் அக்கறை இருந்தால் அவர்கள் கிழக்கு மாகாண சபையில் இணைந்து ஆட்சி செய்தது போன்று கல்முனையிலும் கூட்டமைப்பொன்றை ஏற்படுத்தி போட்டியிட முடியும். மேயராக முஸ்லிமும் பிரதி மேயராக தமிழரும் வரக்கூடிய வகையில் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாது என கேட்கிறோம்.
ஆகவே கல்முனைக்குடியும் கல்முனையும் இணைந்ததாகவே கல்முனை வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது என்பதால் கல்முனை ஸாஹிரா முதல் தாள வட்டுவான் வரையான எல்லையே கல்முனையின் எல்லையாக கொள்வதன் மூலம் கல்முனையில் இன ஒற்றுமையை தக்க வைக்க முடியும் என்பதை உலமா கட்சி ஆழமாக வலியுறுத்துகிறது.
0 commentaires :
Post a Comment