12/04/2017

'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .

கிழக்கிலங்கையிலிருந்து அரைநூற்றாண்டு காலமாக அயர்ச்சியின்றி  இயங்கும் இலக்கியவாதி 'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன்
நீலாவணனின் வேளாண்மை காவியத்தின் தொடர்ச்சியாக 'விளைச்சல்' வழங்கிய கலை, இலக்கிய சமூகப்பணியாளர்.
     



'புதிர்' என்னும் சொல்லுக்கு, எமது தமிழர் வாழ்வில் இரண்டு அர்த்தங்கள். ஒன்று அறிவுபூர்வமாக புரிந்துகொள்ளவோ, விளக்கிக்கூறவோ முடியாத மர்மம் (Mystery). மற்றது  வயலில் அறுவடை முடிந்ததும் முதலில் பெறப்படும் நெல் (Newly harvested paddy).
இந்த இரண்டு அர்த்தங்களும் கலந்த வாழ்வின் விழுமியங்களை சந்தித்திருக்கும் இலக்கிய நண்பராகவே செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களை இனம்காண்கின்றேன்.
இவருடைய அண்மைய வெளியீடு விளைச்சல் (குறுங்காவியம்) நூலின் தொடக்கத்தில் தமது அன்னையார் திருமதி கனகம்மா தம்பியப்பா அவர்களுக்கு கவிதை வரிகளில் சமர்ப்பணம் செய்கையில் ஒரு புதிரான தகவலையும் பதிவுசெய்கிறார்.
அன்னையார் 14-11-2003 ஆம் திகதி மறைந்துவிடுகிறார் ( இம்மாதம் 14 ஆம் திகதியுடன் 14 வருடங்களாகின்றன.) எட்டாம்நாள் சடங்கின்போது ( எங்கள் ஊரில் இதனை எட்டுச்செலவு என்பார்கள்) உணர்வுரீதியாக  செவிப்பறையை ரீங்காரித்துச்செல்லுகிறது மறைந்த  அன்னையாரின் ஏவறைச்சத்தம்.  இத்தகைய பிரமையை நானும் கடந்து வந்திருக்கின்றேன் என்பதனால் அந்த உணர்வோடு கோபாலகிருஸ்ணன்  தமது அன்னையாருக்காக பதிவுசெய்துள்ள  இதய அஞ்சலி சமர்ப்பணத்தை இங்கு தருகின்றேன்.




" எட்டாம் நாள் சடங்கில் என்
செவிகளில் கேட்ட - உங்கள்
ஏவறைச்சத்தம்!
இன்னும்தான் நினைக்கின்றேன் எப்படிச்சாத்தியம்?
புதிய அனுபவமொன்றை - என்னுள்
பூக்கவைத்த அம்மாவே!
மரணம் இயற்கையென மனதை நான் தேற்றுகிறேன்.
என்றோ ஒருநாள் என்னையும் தேடி
இயமன் வருவான்.
அப்பொழுது அம்மா!
ஓடிவருவேன்!
உங்கள் அருகில் துயில்கொள"
இதனை வாசிக்கும் உங்களில் பலருக்கு இதுபோன்று அல்லது வேறு வடிவத்தில் இந்த அனுபவம் கிட்டியிருக்கும். எனக்கும் இந்த வரிகளைப்படிக்கும்போது, பல நினைவுகள்  மறைந்த எனது தாத்தா முதல் அம்மா வரையில் நெஞ்சை தழுவிச்செல்கின்றன.
கோபாலகிருஸ்ணனின் இச்சமர்ப்பணம் இடம்பெற்றிருக்கும் விளைச்சலும் வயல்சார்ந்த முதல் அறுவடை பற்றியதுதான். அந்த நெல்லுக்கும் புதிர் என்றுதான் அர்த்தம்.

ஒரு காலகட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளிருந்த  காரைதீவில் தம்பியப்பா - கனகம்மா தம்பதியருக்கு  1950 ஆண்டில் பிறந்திருக்கும் கோபாலகிருஸ்ணன், இம்மாவட்டத்தின் தென்கோடிக்கிரமமான பொத்துவிலுக்கு பெற்றவர்களுடன் குடிபெயர்ந்து, ஆரம்பக்கல்வியை பொத்துவில் மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் பின்னர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரவகுப்பு வரையிலும் கற்றவர்.
இந்த  வித்தியாலயம்தான் பின்னாளில் கிழக்குப் பல்கலைக்கழகமாகியது. வடக்கில் யாழ். பரமேஸ்வராக்கல்லூரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமாகியதுபோன்று  கிழக்கிலும்  ஒரு பாடசாலை  இவ்வாறு  மாறியிருக்கிறது.
"செங்கதிரோன்" என்னும் புனைபெயருடனும் சமகால ஈழத்து கலை, இலக்கியப்பரப்பில் அறியப்படும் கோபாலகிருஸ்ணனின் ஆரம்பகால இலக்கியப்பிரவேசம் , பல தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களின் இளமைக்காலத்துடன் ஒப்பிடத்தக்கது.
ஏழாம்வகுப்பு பயிலும்போது கலையமுதம், உயர்தர வகுப்பில் தேமதுரம் ஆகிய கையெழுத்து இதழ்களின் ஆசிரியராக தனது ஆற்றல்களுக்கு   ஆரம்பப்புள்ளிகள் இட்டு இலக்கிய கலைக்கோலம் வரைந்திருப்பவர்.
உயர்கல்வியைத்தொடர்ந்து கல்கமுவ நீர்ப்பாசன பயிற்சிக்கல்லூரியில் விவசாயப்பொறியியல் கற்றுத்தேறும்வேளையிலும் இவரது இலக்கியத்தாகம் தணிந்திருக்கவில்லை.
உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் எங்குசென்றாலும் எத்திசையில் வாழநேரிட்டாலும் தமது ஆற்றலை வளர்த்துக்கொள்வது இயல்பு. குறிப்பிட்ட பயிற்சிக்கல்லூரியில் 1969 இல் அச்சுப்பிரதியாக வெளியான அருவி இதழில் இவரது முதல் கவிதை வெளியாகிறது. அதன் பெயர் நற்கவிதை வேண்டும்.
கவிஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். தமிழ் உலகில்  பாரதியின் வழித்தோன்றல்களிடம் இந்த இயல்புகளை காணமுடியும். இவரது நெருங்கிய உறவினர் காசி. ஆனந்தனை  உணர்ச்சிக்கவிஞர் என்றே அழைக்கின்றனர்.


ஆனால், அவருக்கும் இவருக்கும் தமிழ் உணர்ச்சியானது வெவ்வேறு திசையில் என்பதனால் கோபாலகிருஸ்ணன் எனக்கு கருத்தியலில் நெருக்கமானவர்.
ஆரம்பகாலக்கவிதைகளில்  தனது தீவிர தமிழ் உணர்ச்சியை காண்பிப்பதற்கு  இவர் களமாக்கிக்கொண்டது தந்தை செல்வநாயகம் வெளியிட்ட சுதந்திரன் பத்திரிகைதான். இந்தப்பத்திரிகையில் செ. இராசதுரை, எஸ்.டி. சிவநாயகம், பிரேம்ஜி ஞானசுந்தரன், அ.ந. கந்தசாமி ஆகியோரும் பிற்காலத்தில் கோவை மகேசனும் பணியாற்றியிருக்கிறார்கள்.
டானியல், டொமினிக்ஜீவா, எஸ். பொன்னுத்துரை, அ.செ. முருகானந்தன், செம்பியன் செல்வன், செங்கைஆழியான்  உட்பட பல மூத்த எழுத்தாளர்களுக்கும் களம் வழங்கிய பத்திரிகைதான் சுதந்திரன்.  தமிழர் உரிமைப்போராட்ட அரசியலில் கோபாலகிருஸ்ணனுக்கு 1968 முதலே ஈடுபாடு தொடங்கியமையால் தமிழரசுக்கட்சியில் அக்காலப்பகுதியிலேயே இணைந்திருக்கிறார். நீர்ப்பாசன திணைக்களத்தில் உதவிப் பொறியியலாளராக இணைந்துகொண்டபின்னரும் இவரது இலக்கிய அரசியல் பணிகள் நிறுத்தப்படவில்லை.
கலை இலக்கியத்தையும் அரசியல் அறிவியல் துறைகளையும் நாடுபவர்கள் அவற்றை விட்டு மீளுவது அபூர்வம்.  தம்மை அறியாமலேயே Activist ஆகவும்  மாறிவிடுவார்கள்.
 Activist களினால் Activist களுக்கும் பிரச்சினை மற்றவர்களுக்கும் பிரச்சினை என்று ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருக்கும் அசோகமித்திரனின் கூற்று ஏற்புடையதுதான்.
அதனால் கெடுதி இல்லை. பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள்தான் இந்த Activist கள். அவர்களை விமர்சிப்பவர்களும் அதனை எதிர்கொள்வார்கள். பிரச்சினைகள் மலிந்ததுதானே வாழ்க்கை. தப்பிஓடவா முடியும்...?
எழுத்தாளர்கள் எழுதுவதுடன் நின்றுவிடாமல் சமூகம், அரசியல், உரிமைப்போராட்டம் என தமது வாழ்வை விரிவுபடுத்திக்கொள்ளும்போது  Activist ஆக மாறிவிடுகிறார்கள்.
கோபாலகிருஸ்ணனின் வாழ்விலும் இதுதான் நடந்திருக்கிறது. 1983இல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவரும் கைதாகி சுமார் ஏழு மாத காலம் தடுப்புக்காவலில் இருந்திருக்கிறார்.
அதனால் வேலையை இழக்கநேர்ந்திருக்கிறது. பிணையில் வெளிவந்திருந்தாலும் இழந்த வேலையை மீளவும் பெறுவதற்கும் போராட வேண்டியிருந்திருக்கிறது இந்த எழுத்துப்போராளிக்கு. 1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட வேளையில் இழந்த வேலையை மீளப்பெற்றுக்கொள்கிறார்.
அரசியல் சித்தாந்த ரீதியாக தன்னை ஒரு இடதுசாரியாக வளர்த்துக்கொண்டவர், இலக்கியத்துடன் நிற்காமல் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கிறார்.
1989 இல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அம்பாறையில் திகாமடுள்ள தேர்தல் தொகுதியில் போட்டியிடுகிறார். 1990 இல் இலங்கையில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோன்றியதும்  குடும்பத்துடன் தமிழகம் செல்கிறார். மீண்டும் வந்து, இடையில்  விட்டுச்சென்ற  வேலையில் இணைகிறார்.  அத்துடன் நிற்கவில்லை.
எழுத்துத்துறைக்கு அப்பால் சமூகச்சிந்தனைமிக்கவராக இருந்தமையால் விட்டகுறை தொட்டகுறை எனச்சொல்லுமாப்போன்று மீண்டும் 1994 நடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேலையிலிருந்து ஓய்வுபெறுகிறார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளர் மாவை சேனாதிராஜாவை எதிர்த்து மீண்டும்  அம்பாறை மாவட்டத்தில் களம் இறங்குகிறார். அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் சுயேட்சைக் குழுவின் தலைமை வேட்பாளராக மாறிய கோபாலகிருஸ்ணன்,  அந்த அமைப்பின் இணைப்பாளராக இயங்குகிறார்.
2000 ஆம் ஆண்டிலும் அதன்பின்னர் இறுதியாக 2015 இலும் இம்மாவட்டத்தில் தேர்தல் களம் கண்ட இவர் சார்ந்திருக்கும் இயக்கம் தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாகவும் பதிவுபெற்றுள்ளது.
தமது அரசியல் அனுபவங்களின் தொடர்ச்சியாக ' தமிழர் அரசியலில் மாற்றுச்சிந்தனைகள் '  என்ற கட்டுரைத் தொடரை  14 வாரங்கள் கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரலில் எழுதினார். இலங்கைத்தமிழர்களின் அரசியல் இன்றும் ஒரு கேள்விக்குறியாகவே இருப்பதனால், அந்தத்தொடர் 2016 இல் நூலாகத்தொகுக்கப்பட்டு வெளியானபோது அதன் அட்டைப்படத்தையும் கேள்விக்குறியுடன் பதிவுசெய்துள்ளார்.


சேர் பொன். இராமநாதன், சேர்பொன் அருணாசலம்,  ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் படங்கள்தான் அந்தக்கேள்விக்குறியில் இடம்பெற்றிருக்கின்றன.
தமிழர் அரசியலின் எதிர்காலத்தை அங்கதமாகவே சுட்டுகிறது அந்தக்கேள்விக்குறி. இந்நூலில் கோபாலகிருஸ்ணனின் மாற்றுச்சிந்தனைகள் நூலிலுள்ள கட்டுரைகள், தமிழர் அரசியல் பொதுவெளியில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு ஊக்கந்தரக்கூடியதாகவே அமைந்திருக்கின்றன எனத்தெரிவிக்கிறார் முன்னர் தினக்குரலிலும் தற்போது வீரகேசரியிலும்   பணியாற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம்.
இவ்வாறு செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனுக்கு ஒரு  பண்பட்ட அரசியல் முகம் இருக்கின்ற அதேசமயம், பள்ளிப்பருவத்திலிருந்து இவரிடம் ஊற்றெடுத்த கலை, இலக்கிய உணர்வும்  வற்றாமல் இற்றைவரையில்  ஜீவநதியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
எனக்கு இவர் 2010 இல்தான் முதல் முதலில் அறிமுகமானார். அப்பொழுது நான் தரிசித்தது இவரது கலை, இலக்கிய முகம் மாத்திரம்தான். இவர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இலக்கியப்பகுதி செயலாளராக இருந்தவேளையில் எனது பறவைகள் நாவல் வெளியீடும் எனது சமுகம் இன்றியே அங்கு  நடந்திருக்கிறது என்பதையும் தாமதமாகவே தெரிந்துகொண்டேன்.  புகலிடத்திலிருந்தமையால்  இவரது அரசியல் முகம் தெரியாமலேயே உறவைத்தொடர்ந்திருந்தாலும், பின்னாளில் நெருங்கிப்பழகியதும் எனது கருத்தியலுடன் இணையக்கூடிய அரசியலில்  இவரும் ஈடுபட்டிருந்தமையால் அந்த உறவு மேலும் நெருக்கமடைந்தது.
கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், பத்தி எழுத்து, ஆய்வு, இதழியல் முதலான துறைகளில் அயர்ச்சியின்றி தொடர்ந்து எழுதிவரும் கோபாலகிருஸ்ணன், மட்டுநகரிலிருந்து வெளியான வயல் இதழ், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஏடான ஓலை, தேசிய  கலை இலக்கியப்பேரவையின் வெளியீடான தாயகம் முதலானவற்றின் ஆசிரியர் குழாமிலும்   இருப்பவர். 2008 முதல் செங்கதிர் என்னும் இலக்கிய இதழையும் மட்டுநகரிலிருந்து வெளியிட்டுவருகிறார்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பல்வேறு நிலைப்பதவிகளிலுமிருந்த அனுபவம் பெற்றிருக்கின்றமையால் இச்சங்கத்தின் 75 வருட வரலாற்றையும் எழுதும் பாரிய பொறுப்பினையும்  ஏற்றுள்ளார்.
சிற்றிதழ்கள் வெளியிட்ட அனுபவத்தினால், உலகத்தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் இலங்கைக்கான பொருளாளராகவும் இயங்கும் இவர், தமிழ்நாடு குற்றாலத்தில் 2010 இல் நடைபெற்ற உலகத்தமிழ்ச்சிற்றிதழ் சங்கத்தின் 5 ஆவது தேசிய மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.  2011 இல் கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இணைந்து, அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் இயங்கியவர். இம்மாநாட்டில் நடைபெற்ற சிற்றிதழ் அரங்கத்திற்கு பேராசிரியர் சபா. ஜெயராசாவுடன் இணைத்தலைவராகச்  சேர்ந்து அரங்கை நெறிப்படுத்தினார்.
இலங்கை வானொலி இதய சங்கமம், ரூபவாஹினி களம், உதய தரிசனம், லண்டன் தீபம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருப்பவர். இவை தவிர கிழக்கிலங்கையில் பல கலை இலக்கிய அமைப்புகளிலும் அர்ப்பணிப்புள்ள தொண்டனாக வலம்வருபவர்.
கண்ணகி கலை இலக்கிய கூடல், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை, தமிழ்ச்சங்கம்,   நுண்கலைக்கழகம், கிழக்கிலங்கை சிற்றிதழ் சங்கம், சுவாமி விபுலானந்தர், தனிநாயகம் அடிகளார், அமரர் நல்லையா  ஆகியோர் நினைவாக அமையப்பெற்ற  நூற்றாண்டு விழாச்சபைகள், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம், கருத்தாடல் களமான பொதுவெளி அமைப்பு,  முதலானவற்றிலும் இணைந்திருக்கும் இவரது வாழ்வு  எப்பொழுதும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கின்றமையால் ஓய்வு என்பது இவரைவிட்டு தூரத்தில் ஒதுங்கியிருக்கிறது.
இவ்வாறு ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டிருக்கும் இவரை சில வாரங்களாவது ஓய்வுபெற வாருங்கள் என்று அவுஸ்திரேலியாவுக்கு அழைத்திருக்கிறார்கள் இவரது உறவினர்கள். அவர்களில் ஒருவர் கவிஞர் காசி. ஆனந்தனின் புதல்வி மருத்துவ கலாநிதி அமுதநிலா.
 காசி. ஆனந்தனின் துணைவியாரின் தங்கையைத்தான் கோபாலகிருஸ்ணன் மணம்முடித்திருக்கிறார். அவர் ஆசிரியப்பணியிலிருந்தவர். இவ்வருட இலங்கைப்பயணத்தில் மட்டக்களப்பில் தங்கியிருந்த மூன்று நாட்களும் இவருடன்தான் பயணங்கள் மேற்கொண்டிருந்தேன். நீண்ட நெடிய நேரம் உரையாடியிருப்பதனால் இவரது இலக்கியம் மற்றும் சமூகம் அரசியல் சார்ந்த முகங்களையும்  கூடுதலாகத்  தரிசிக்க முடிந்தது.
கலை, இலக்கியத்தில் பல தரப்பட்ட ஆளுமைகளையும் சந்தித்து உறவாடியிருக்கும் கோபாலகிருஸ்ணன், அரசியல் வாழ்வில் பல திகில் அனுபவங்களையும் கடந்து வந்திருப்பவர். கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பிரசித்தம். கண்ணகியை வழிபாட்டுச்சிமிழுக்குள் மாத்திரம் அடக்கிவிடாமல், கண்ணகி கலை, இலக்கிய விழாவை வருடந்தோறும் முன்னின்று நடத்திவருகிறார்கள் இவரும்,  இவருடன் இணைந்திருப்பவர்களும்.
கூடல் என்ற சிறப்பு மலரையும் வெளியிட்டுவருகிறார்கள். கண்ணகி கலை இலக்கியக்கூடல் அமைப்பின் தலைவராகவும் கோபாலகிருஸ்ணன் இயங்கிவருகிறார்.
அவுஸ்திரேலியாவுக்கு ஓய்வுதேடி வந்திருக்கும் இவரை,  மெல்பனில் நானும் நண்பர் மாவை நித்தியானந்தனும் சந்தித்தோம்.  இவர் எமக்கு காசி. ஆனந்தனின் புதல்வியையும் அறிமுகப்படுத்தினார். இவரது வருகை அறிந்து கல்குடா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நல்லையாவின் புதல்வி திருமதி நளினி காசிநாதனும் இவருடைய நீண்ட கால நண்பரான 'பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசாவும் தொடர்புகொண்டு உரையாடினர்.  இவருடனான சந்திப்பு கலந்துரையாடலை எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெல்பனிலும் சிட்னியிலும் ஏற்பாடு செய்துள்ளது.
மெல்பன் -  சிட்னி நிகழ்ச்சிகளில் கோபாலகிருஸ்ணன்
மெல்பனில் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133) மண்டபத்தில்  நடைபெறும் இலக்கியசந்திப்பில்  "கிழக்கிலங்கையின் கலை, இலக்கிய செல்நெறி" என்னும் தலைப்பில் கோபாலகிருஸ்ணன் உரையாற்றுவார்.
சிட்னியில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு Sydwest Multicultural Services ( Level  1,125 Main Street,  Blacktown NSW 2148)   மண்டபத்தில் நடைபெறவிருக்கும்  கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சியில் இவருடைய விளைச்சல் (குறுங்காவியம்) அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர் எழில்வேந்தன் இந்நூலை அறிமுகப்படுத்துவார்.

விளைச்சல் - குறுங்காவியம்
கிழக்கிலங்கையில் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காள விரிகுடா கடலையும் மேற்கே ஊவா மலைக்குன்றுகளையும் எல்லைகளாகக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு பிரதேசத்தின் கலை, இலக்கிய சமூகப்பாரம்பரியங்களையும் விவாசாயத்தொழில் முறைகளையும் பின்னணியாகக்கொண்டு பல வருடங்களுக்கு முன்னர் கவிஞர் நீலாவணன் வேளாண்மை என்னும் காவியத்தை புனைந்திருக்கிறார். வேளாண்மையில் அதன் முற்றிய முழுவிளைச்சலையும் காணும் முன்பே 'கதிர்' பருவத்தில் விடைபெற்றுவிட்டார்.
இக்காவியம் பற்றி மூத்த எழுத்தாளர் வ.அ. இராசரத்தினம் " இக்காவியத்தின் மூலம் இயந்திர நாகரீகத்தாற் கற்பழிந்துவிடாத மட்டக்களப்பின் குமரியழகையும், மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத் தனத்தையும் வெளியுலகிற்கு காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கிறார்" என்று வேளாண்மை காவியத்தின் முதல் பதிப்பில் சொல்லியிருக்கிறார். அவரே இந்த நூலை முதலில் 1982 இல் பதிப்பித்தவர்.   பின்னர் எஸ்.பொன்னுத்துரை சென்னையில் தமது மித்ர வெளியீடாக மற்றும் ஒரு பதிப்பை கொண்டுவந்தார்.
நீலாவணனின் புதல்வர் எழில்வேந்தன் உட்பட பலரும் முற்றுப்பெறாத அந்தக்காவியத்தை தொடர்ந்து எழுதுமாறு கோபாலகிருஸ்ணனை கேட்டிருக்கின்றனர்.
அதனால் தற்பொழுது எமது கைகளில் தவழ்கிறது வேளாண்மையின் தொடர்ச்சியான  விளைச்சல் குறுங்காவியம்.  காசி. ஆனந்தன், சண்முகம் சிவலிங்கம், நுஃமான், மௌனகுரு, ஆகியோர் இந்நூலில் தமது விரிவான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர். இலங்கை, தமிழக படைப்பாளிகள் சிலரும் விளைச்சல் குறுங்காவியம் தொடர்பாக தத்தமது குறிப்புகளை சொல்லியிருக்கிறார்கள்.
"பேச்சோசைப்பாங்கிலான நவீன கவிதைகளின் முன்னோடிகளாகக்கருதப்படும் அமரர்கள் மஹா கவி, நீலாவணன் வரிசையில் வைக்கப்படும் தகுதியைச் செங்கதிரோன் விளைச்சல் காவியத்தின் மூலம் அடைந்துவிட்டார். மட்டக்களப்பு மாநிலத்துக் கிராம மக்களின் குறிப்பாக படுவான்கரைப்பிரதேச மக்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டும் விளைச்சல் குறுங்காவியம் ஈழத்து இலக்கியப்பரப்பில் நின்று நிலைக்கும் என்பது நிச்சயம்" என்று தொல்லியல் மற்றும் இலக்கிய ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி தங்கேஸ்வரி விதந்து பாராட்டியுள்ளார்.
செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் வாழ்வையும் பணிகளையும் இங்கு சுருக்கமாகவே பதிவுசெய்திருக்கின்றேன். இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடும் புதிர், வேளாண்மை விளைச்சலில் பெறப்படும் நெல்மணிகள்.   விவசாய பெருமக்கள் சேற்றில் கால் வைத்தமையால் நாம் சோற்றில் கைவைக்கின்றோம். அவர்களின் காவியத்தை எமக்குத்தந்திருக்கும் நீலாவணனையும் செங்கதிரோனையும் கொண்டாடுவோம். ---0---
நன்றிகள் *தமிழ் முரசு

0 commentaires :

Post a Comment