10/29/2017

பிரபாகரன் மூட்டிய தீயால் கண்ட பயனென்ன? யோகேஸ்வரன் வைத்த திரி எத்தனை நாளைக்கு?

பிரபாகரன் மூட்டிய தீயால் கண்ட பயனென்ன? யோகேஸ்வரன் வைத்த திரி எத்தனை நாளைக்கு? தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் பொறுமை காக்க வேண்டும்.L’image contient peut-être : ciel et plein air

"யோகேஸ்வரன் போன்ற   அரசியல்வாதிகள் தமது கையாலாகாத்தனங்களை மறைக்க இனவாதத்தை கையிலெடுக்கின்றனர்". என்று நேற்றைக்கு முன்தினம் வாழைச்சேனை "பஸ் தரிப்பிட முறுகல் நிலை" தொடர்பாக இடப்பட்ட  எனது பதிவு தொடர்பாக நான் பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எப்படியிருப்பினும் மகிழ்ச்சி.

எனது பதிவானது முஸ்லிம்களுக்கு சார்பானது என்கின்ற குற்றச்சாட்டுக்கள் கருத்தூட்டங்களிலும் உள்பெட்டி செய்திகளிலும் நிறையவே வந்தன. குறித்த பஸ்தரிப்பிடம் ( பஸ் நிலையம் அல்ல) அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆனால் அந்த இடத்தை சகோதர இன முஸ்லீம் ஆட்டோக்காரர்கள் உரிமைகொண்டாடுவது ஏற்புடையதல்ல.என்கின்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. சரி அப்படியே எடுத்துக்கொள்வோம்.

ஒரு   பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட  வீதியில் ஆட்டோ வண்டிகள் நிறுத்தப்படுவதற்கு அந்த இடம் பாவிக்கப்பட்டு வந்தால், அது சட்டத்துக்கு முரணாக இருந்தால் அவர்களை அகற்றிவிட்டு புதிதாக அங்கே  பஸ் தரிப்பிடத்தை உருவாக்குவதற்கு முறையான நிர்வாக படிமுறைகள் உள்ளன.  அவற்றை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிந்திருக்க வில்லையா?  அப்படி முறைப்படிஏன் நடைமுறைகளை செயல்படுத்த வில்லை? அப்படி அணுகியிருந்தால் அதற்கெதிராக யார் அடாவடித்தனம் பண்ணினாலும் பிரதேச சபை சட்டரீதியாக அதை எதிர்கொண்டிருக்கும்.போலீசார் தமது (நல்லாட்சி) கடமையை செய்திருப்பார்கள்.

அதை விடுத்து இவர் பெரிய ஹீரோ போல போய் கல்லு வைப்பாராம் பின்னர் முஸ்லீம் ஆட்டோக்காரர்கள் அதை எதிர்ப்பார்களாம்? பிறகு தமிழ் இளைஞர்கள் அவர்களை எதிர்ப்பார்களாம்.பிறகு அடிபிடி வருமாம்.

பிறகு தமிழரின் பூர்வீக நிலத்தை முஸ்லிம்களிடமிருந்து காப்பாற்ற சாமி போராடுகின்றாராம்.என்னய்யா கதை விடுறீங்கள்?

வடக்கு கிழக்கின் நிலபுலங்களை இணைத்து அங்கு வாழும் மக்களனைவரையும் ஆட்சி செய்ய தனிநாட்டு அரசாங்கத்தை  உருவாக்க போராடிய ஒரு இனம் இன்று ஒரு பஸ் தரிப்பிடத்தை உருவாக்க முடியாமல் தள்ளாடுவது இழிநிலைதானே? அது யாருடைய குற்றம்? யாருடைய அரசியல் வாங்குறோட்டுத்தனம்? அதுவும் யோகேஸ்வரன் எம்பியின் தொகுதியில்? அவரது சொந்த ஊரில் ஒரு பஸ் தரிப்பிடத்தை நிறுவ முடியாத நிலையில் அவர் இருப்பது கேவலமாக இல்லையா?  இதற்கு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடி அவர்களின் பெயரால் அரசியல் செய்து வரும் தமிழரசு கட்சியும் அதன் தலைவர்களும்தானே தானே பொறுப்பு சொல்ல வேண்டும்? 

அதைத்தொடர்ந்து இன்று ஞாயிறு தினம் கிரான் சந்தையை முஸ்லிம்களுக்கு மூடிவிட்டு தமிழர்கள் தனியா வியாபாரம் செய்ய போகின்றார்களாம்.   பெரிய வெற்றியாம் கொண்டாட்டம் நடக்கின்றது. இப்படி எத்தனை தடவை கடந்த காலங்களில் இந்த கிரான்,மற்றும் களுவாஞ்சிகுடி சந்தைகளை முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் மூடினோம். ஆனால் காலத்தின் ஓட்டத்தில் அந்த தடைகளுக்கு எல்லாம் என்ன நடந்தது?

 சரி இந்த முஸ்லிம்களுக்கான தடை சில வாரங்கள் நீடித்தால் இதன் எதிரொலியாக நாளை காத்தான்குடி பட்டினத்துக்குள் தினசரி சென்று கூலி தொழில் செய்து பிழைப்பு நடாத்திவரும் பல நூறு தமிழர்களுக்கு முஸ்லிம்கள்  தடை  போட்டால் அந்த ஏழைகளின் குடும்பங்களுக்கு சோறுட்டுவது யார்?


"தம்பிமாரே இதெல்லாம் வேலைக்குதவாது"  என்று சொன்னால் "நீ  சோனிக்கு பிறந்தவன்" என்பீர்கள். மகிழ்ச்சி

ஆனால்  என்ன நடக்கும்.அதன்பிறகு ??  அடுத்த வாரம் --அடுத்த மாதம்--  மீண்டும் பேச்சுவார்த்தை, மீண்டும் சுமூகநிலை, மீண்டும் ஒருமித்த வாழ்வு. அதில்தானே வந்து முடிய வேண்டும். அதன்பின்னர் முஸ்லிம்கள் கிரான் சந்தைக்கு வரத்தான் போகின்றார்கள்.

குறிப்பு உங்கள் சிந்தனைக்கு!

பென்னம்பெரிய படைபலம் கொண்டு வடக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது ஒரு லட்ஷம் முஸ்லிம்களை வடக்கிலிருந்து தென்னிலங்கை நோக்கி துரத்திய பிரபாகரன் இன்றில்லை. ஆனால் முஸ்லிம்கள் இன்று அங்கிருக்கின்றார்கள்.  வரலாற்றில் வென்றது யார்?  

எனவே இனவாதத்தை பரப்பி அரசியல் வியாபாரம் செய்யும் போக்கிரிகளுக்கு பின்னால் இளைஞர்கள் தயவு செய்து அணிதிரள வேண்டாம். வன்முறை வழி அழிவையே தரும் அதிலும் அதிகம் எம்மை நோக்கியே பாயும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்று எம்முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. முரண்பாடுகள் இல்லையென்பதல்ல.அனைத்துக்கும் ஒரே வழி உரையாடல் ஒன்றே.

எம்.ஆர்.ஸ்டாலின்




0 commentaires :

Post a Comment