கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவ. சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதிய சிறைப்பயண குறிப்புக்கள் "வேட்கை " என்னும் பெயரில் நூலுருவாக வெளிவருகின்றது. நாளை சனியன்று (09/09/2017) மாலை மூன்று மணிக்கு மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இந்நூலின் முதலாவது வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது. வேட்கை என்னும் இந்த வாய்மொழி வரலாற்று நூலினை எக்ஸில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் நிஷ்டை,யுத்தத்தின் இரண்டாம் பாகம், மட்டக்களப்பு தமிழகம், தமிழீழ புரட்டு போன்ற நூல்களை எக்ஸில் பதிப்பகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
"வேட்கை" நூலுக்கான பதிப்புரையிலிருந்து .........
"மாகாணத்தின் முதல்வராக அரசியல் அதிகாரத்தில் இருந்தபோது கிழக்கு மாகாணத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. சுதந்திரத்துக்கு பின்னரான சுமார் அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் எந்தவொரு தமிழ் கட்சியாலும் சாதிக்கமுடியாத காரியங்களை வெறும் நான்கே வருடங்களில் சாதித்து மக்கள் மனதில் உறுதியான இடம்பெற்றார். தனது மண்ணின் மீதும் மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள கருசனையே அவருக்கு செயலூக்கத்தை தருகின்றன. எனவேதான் சாமானிய மக்களின் பிரதிநிதியாக, ஒரு கர்மவீரனாக, இந்த மண்ணின் மைந்தனாக அவர் மக்களால் மதிக்கப்படுகின்றார்.
ஆனால் வரலாறு யாரையெல்லாம் தலைவர்கள் என்று கொண்டாடுகின்றது? யாரையெல்லாம் துரோகிகள் என்று தூற்றுகின்றது? ஆம். இலங்கை தமிழர் வரலாற்றெழுதியலில் யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனைகள் வகிக்கின்ற பாத்திரத்தின் விளைவுகள் அவையாகும். இந்த யாழ்ப்பாண ஆதிக்க சிந்தனைகள் பண்ணுகின்ற சட்டாம்பித்தனங்கள் உண்மையான வரலாறுகளை திட்டமிட்டு மறைப்பதிலும் திரிபுபடுத்துவதிலும் வெற்றிகண்டுவருகின்றது. அதிகாரம்மிக்கவர்கள் கட்டமைப்பதே வரலாறுகளாக எதிர்கால சந்ததிக்கு கையளிக்கப்படுகின்ற கொடுமை நிகழ்கின்றது.
இந்நிலையில்தான் தமிழ்த்தேசியம் என்னும் பெயரில் செயல்படும் யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனைகள் கட்டமைத்த வரலாற்றுக்கு வெளியேநின்று கடந்த காலங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களை தரிசிக்க முனைகின்றார் சந்திரகாந்தன்."
0 commentaires :
Post a Comment