6/15/2017

வட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி- சபையினைக் கலைத்துவிட்டு தேர்தல் நடாத்துவதே தீர்வு

Mahendran Thiruvarangan's Profile Photo    தற்போது வட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு ஏற்ற தீர்வு சபையினைக் கலைத்துவிட்டு தேர்தல் நடாத்துவதே. ஊழல் குற்றச்சாட்டுக்கள் பலமாக இருக்கின்றன. மாகாண முதலமைச்சரினதும், அமைச்சர்களினதும் நிருவாகக் குறைபாடுகள் பற்றி மாகாண சபையில் புதிய நிருவாகம் ஆரம்பித்த காலம் முதலே பலராலும் நியாயமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இன்று இந்தப் பிரச்சினைகள் யாவும் முதலமைச்சரினைப் பதவியில் இருந்து நீக்குவதில் முனைப்பாக ஈடுபடுபவர்களாலும், முதலமைச்சருக்கு ஆதரவானவர்களாலும் அரசியல் மய...மாக்கப்பட்டுப் போயிருக்கின்றன. பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் நிலைமை மாறி பிரச்சினைகள் அரசியல் பரிமாணங்களைப் பெற்றுவிட்டன. சுயநலத் தமிழ்த் தேசிய ஊடகங்களும் ஏட்டிக்குப் போட்டியாக‌ மக்களைக் குழப்பி விடுவதிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக முகநூலிலே எழுதப்படும் பதிவுகளிலே பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எமது சமூகத்தில் நிலவும் குறுகிய மனப்பாங்குகளையும், எமது முகநூல் பேச்சாளர்கள் நாகரிகமான முறையில் ஒரு பிரச்சினையினைக் கலந்துரையாடத் தெரியாதவர்கள் என்பதனையும், மக்களை உசுப்பேத்துவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் என்பதனையுமே வெளிக்காட்டுகிறது. மற்றொரு மாகாண சபைத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையோ, தமிழரசுக் கட்சியினையோ சாராமல் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது அரசியல் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வோருடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் ஒன்றினைக் கேட்க வழி செய்யும். அதன் மூலம் அவருக்கும், அவரது நிருவாக ஸ்டைலுக்கும், அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்கும் மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் செல்வாக்கு இருக்கின்றது என்பதனையும் அவரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அறிவதற்கு வழி ஏற்படும். முதலமைச்சர் ஒரு விசாரணைக் குழுவினை அமைத்தமை வரவேற்கத்தக்கது. அதனுடைய பரிந்துரைக்கு அமைய இரண்டு அமைச்சர்களைப் பதவி விலகும்படி நாகரிகமான முறையில் கேட்டமையும் வரவேற்கத்தக்கது. ஆனால் ஏனைய இரண்டு அமைச்சர்களையும் விசாரணைக் காலம் முடியும் வரை விடுமுறையில் இருக்கும்படி கோரியமை சரியல்ல. அவ்வாறு செய்வதாயின் விசாரணைகள் ஆரம்பிக்க முன்னரே அந்த முடிவினை அவர் எடுத்திருக்க வேண்டும். அதனை எல்லா அமைச்சர்களுக்கும் உரிய பொதுவிதியாக அமுல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இது ஒரு சிறிய பிரச்சினை. இதனைப் பேசித் தீர்த்திருக்க முடியும். பேசியும் முதலமைச்சர் அதனை ஏற்க மறுத்தாரா என்பது எனக்குத் தெரியாது.

பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு வேறு மார்க்கங்களை ஆராயாது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பின் அது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். முதலமைச்சருக்கும் அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் இருப்பின் அதனைத் தனியாக விவாதித்து அதனடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதில் தவறில்லை. நிருவாகப் பிரச்சினைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் ஒன்றுடன் ஒன்று போட்டுக் குழப்பும் முயற்சிகளே தற்போது இரு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..

நன்றி -முகநூல் -மகேந்திரன் திருவரங்கன்(எழுத்தாளர்)

0 commentaires :

Post a Comment