ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி விடுத்துள்ள அறிக்கை
--------------------
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 20 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான தொழிற்சாலை எவ்வித சமரசமுமின்றி அகற்றப்பட வேண்டியதொன்றாகும்.
இந்த தொழிற்சாலையையானது டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனத்தின் தலைமைப் பதவியை வகிப்பவர் அர்ஜூன் அலோசியஸ் என்பவராவார்.
இவர் மத்திய வங்கி ஆளுநராக நியமனமாகி ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே நிதி முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனாவார். அந்த வகையில் பெரும் பண முதலைகளின் பலத்துடனும் அரசியல் அதிகார பீடங்களின் முழு ஆதரவுடனுமே இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டு வருகின்றது.
அதன் காரணமாகவே இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்த மதுபான உற்ப
த்தி தொழிற்சாலைக்கு விசேட வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விவசாயிகளுக்கான மானியத்தை குறைத்துவிட்டு சாராய உற்பத்திக்கு மானியம் வழங்குவதுதான் நல்லாட்சியா? என்று கேட்ககூடிய ஒரு பிரதிநிதி நம்மிடையே இல்லாமை மட்டக்களப்பு மக்கள் விட்ட தேர்தல்கால தவறுகளில் ஒன்று.
மது ஒரு மனிதனது வாழ்வில் ஏற்படுத்தும் தீய விளைவுகளை இங்கே பட்டியலிட தேவையில்லை. குடி குடியை கெடுக்கும் என்கின்ற முதுமொழிக்குள் அவையனைத்தும் அடங்கும்.
இதன் காரணமாகத்தான் பல்லின சமூக மட்டங்களில் இந்த மதுபான தொழிற்சாலை தொடர்பாக பலவித எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. சமூக ஆர்வலர்கள் பலரும் இதுகுறித்து தமது கண்டனங்களை ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லீம் மக்களில் யாரும் தமது பிரதேசத்தில் ஒரு மதுபான தொழிற்சாலை உருவாகுவதை விரும்பப்போவதில்லை.
பல கிராமிய அமைப்புக்கள், மீனவர் சங்கங்கள்,வேலைகேட்டு போராடிவரும் பட்டதாரிகள் சங்கத்தினர் போன்றோரும் பல்வேறு இந்த தொழிற்சாலை உருவாக்கத்துக்கு எதிராக கண்டனப்பேரணிகளை நடத்தியுள்ளனர். அதேபோன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரும் மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளனர்.
கிழக்குமாகாண முன்னாள் முதல்வரும் மாகாண சபை உறுப்பினருமான திரு. சந்திரகாந்தன் தடுப்புக்காவலில் இருக்கும் வேளையிலும் வீடியோ பதிவு ஒன்றினுடாக இந்த மதுபான தொழிற்சாலை நிறுவப்படக்கூடாது என்பதற்கான தமது ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ந்த மதுபான தொழிற்சாலைக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும்,அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டுவருகின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை. (விதிவிலக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.யோகேஸ்வரன், திரு. வியாழேந்திரன் போன்றோர் தமது கடுமையான எதிர்ப்புக்களை பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளனர்)
இந்த மதுபான உற்பத்தி தொழிற்சாலையை தடுக்குமாறு கோரி கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் 63வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கோரளைப்பற்று பிரதேச சபை செயலாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்தோடு தமது கண்துடைப்பு நாடகத்தை முடித்துவிட்டனர் தமிழரசுக்கட்சி-முஸ்லிம்காங்கிரஸ் சந்தர்ப்பவாதிகள். மறுபுறம் இந்த மதுபான உற்பத்திசாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட நிலையில் அதுதொடர்பான வழக்கு ஒன்றும் பதிவாகி விசாரணை இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தனை எதிர்ப்புகளுக்கும்,எமது சமூகம் எதிர்கொள்ளபோகின்ற அவலங்களுக்கும் மத்தியில் இந்த மதுபான தொழிற்சாலை நிறுவுவதை ஆதரிக்கும் இரகசிய கூட்டம் ஒன்று 28 ஏப்ரல் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. புத்திஜீவிகள் அமைப்பு என்னும் பெயரில் இடம்பெற்ற இந்த கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆளும் ஐக்கியதேசிய கட்சி போன்றவற்றின் முக்கியஸ்தர்களே முன்னின்று நடத்தியுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
இந்த கூட்டத்தின் பின்னர் இந்த தொழிற்சாலைக்கு ஆதரவான கருத்துக்களை அவர்கள் திட்டமிட்டவாறு பரப்பி வருகின்றனர். மதுபான தொழிற்சாலை உருவானால் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும், மூலப்பொருட்கள் விநியோகத்தினால் அரிசி சோளம் போன்றவற்றின் விற்பனை பெருகும், தொழிற்சாலையை ஒட்டி தேநீர் கடைகள் போன்ற தெருவியாபாரங்கள் வளர்ச்சியடையும், என்னும் நியாயப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. முன்னாள் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போன்றோர் இத்தகைய பரப்புரைகளை முன்னின்று செய்து வருகின்றனர். இத்தகைய நியாயப்படுத்தல்கள் கண்களை விற்று ஓவியம் வாங்குவதற்கு சமமானதாகும்.
இந்த அற்பமான நியாயங்களுக்காக எமது எதிர்கால சமூகம் குடித்து அழியப்போவதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் என்கின்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலான இறுமாப்பே இந்த தொழிற்சாலைக்காக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படைகளில் ஒன்றாகும்.மேற்கத்திய நாடுகளிலேதான் அதிகளவான மதுபான சாலைகள் உள்ளதாகவும் அங்கெல்லாம் அவர்கள் குடித்து குட்டிசுவராக போகவில்லையே என்றும் கூட போலியான நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியானால் மேற்கத்தேய நாடுகளில் உள்ளதை போல விபச்சார விடுதிகளையும் கசினோ கிளப்புகளையும் நமது நாடுகளில் திறந்துவிடலாமா? இல்லையென்றால் என்ன காரணம்? உதாரணங்களை எங்கிருந்தும் எடுத்து வீசலாம் ஆனால் அவற்றின் பொருத்தப்பாடு முக்கியமானது.
இரத்தக்கண்ணீர் படத்தில் பகுத்தறிவாளன் எம்.ஆர்.ராதா "கேடு கெட்ட இந்தியர்களுக்கு கலியாணம் பண்ணுவதே ஏனென்று தெரியா"தென்பார். அதுபோல மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கு ஏன் குடிப்பது எப்படி குடிப்பதென்றெல்லாம் நன்கே தெரியும்? கல்வியறிவு,மனித உரிமை, தனிநபர் சுதந்திரம், அயலவரை மதித்தல் என்பவை பற்றி மேற்குலகம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளுக்கும் அதைக்குறித்து எம்மவர்கள் கொண்டிருக்கும் பார்வைகளையும் ஒப்பிட முடியுமா?
ரணில் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துவிட்டதால் கேவலம் இந்த மதுபான தொழிற்சாலையை கைநீட்டி வரவேற்கும் இழிநிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வந்துள்ளனர். பிழையான பாதையில் சென்றால் சரியான இடத்தை எப்படி அடைய முடியும்? ஐக்கிய தேசிய கட்சியின் "மக்களை பலிகொடுத்தேனும் முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும்" அரசியலில் இதுவே நடக்கும்.
"முஸ்லிம்கள் மதுபான தொழிற்சாலையில் வேலைசெய்வதை பாவமாக கருதுவார்கள் எனவே தமிழர்களுக்குத்தான் வேலைவாய்ப்புக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும்" அதனால்தான் அதனை முஸ்லீம் கட்சிகள் எதிர்க்கின்றன. எனவே இதை நாம் ஆதரிக்க வேண்டும் என்கின்ற புழுத்துப்போன நியாயங்களையெல்லாம் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இதைவிட அரசியல் வங்குரோத்துத்தனம் இப்பூவுலகில் வேறெங்கே குடிகொண்டிருக்க முடியும்? இனவாதத்தை மட்டுமே அரசியல் மூலதனமாக கொண்டியங்கும் தமிழரசு கட்சி இதை விட என்ன பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும்? ஒரு மனிதனது இன உணர்வினை அவனையே அடிமைகொள்ள பயன்படுத்தும் இந்த கெட்டித்தனங்களை கற்றுக்கொள்ள சர்வதேச அரசியல் கட்சிகள் இலங்கைக்கு வரவேண்டும்.
மது அருந்துவது நமது கலாசாரம் என்றும் பைரவருக்கு படைக்காத கள்ளுண்டா? ஒளவையார் அடிக்காத கள்ளுண்டா,? என்று கேட்டு அதுவே நமது கலாச்சாரமாகும்?அதுவே தமிழர் பண்பாடாகும் எனவே பிரதமர் ரணிலின் ஆசியுடன் கல்குடா தொகுதியில் அமைக்கப்பட்டுவருகின்ற மதுபான தொழிற்சாலையை ஆதரிப்பது தமிழ் தேசிய கடமைகளில் ஒன்றாகும் என்று அரியேந்திரன் தரவளிகள் முழங்காத குறை மட்டுமே இன்னுமுண்டு.
இத்தகைய மேலோட்டமான பூசி மெழுகல்களை பல இளம் சமூகத்தினர் நம்பும் வாய்ப்புக்களும் உண்டு. அரசியல் விழிப்புணர்வோ,சமூகம் பற்றிய உளப்பூர்வமான பார்வைகளோ சூழலியல் பற்றிய விஞ்ஞான பூர்வமான புரிதல்களோ இன்றி யுத்தத்துக்குள் இடுக்கு பிடிக்குள் தப்பி பிழைத்து கிடக்கும் எமது இளம் சமூகத்தை இத்தகைய செய்திகள் மிக இலகுவாக வசப்படுத்திவிடும் ஆபத்துக்கள் உண்டு.
எனவே இந்த அதிகார வர்க்கம் சார்பான நியாயங்கள் எல்லாம் எப்போதும் பொய்களும் புரட்டுக்களும் நிறைந்தவையாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
*ஒருசிலருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கின்ற அதேவேளை ஆயிரமாயிரம் மக்கள் அன்றாட ஜீவனோபாய தொழில்களை இழப்பர்.
தொழிற்சாலை உருவானால் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கின்ற செய்திக்கு பின்னால் மறைந்திருக்கும் செய்திகள் என்ன ?
எத்தனை பேரின் வாழ்வாதாரத்தை இந்த தொழிற்சாலை பாதிக்கப்போகின்றது? என்பதையெல்லாம் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த தொழிற்சாலை இயங்க தொடங்கினால் அங்கு நாளாந்தம் உற்பத்தியாகும் மதுபானத்துக்காக தினமும் பல்லாயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படப்போகின்றது. இதனால் காலப்போக்கில் கல்குடா தொகுதியிலுள்ள நீர்நிலைகள் வற்றிவிடும் அபாயங்கள் உண்டு. இதனால் விவசாய நிலங்கள் பாரிய வரட்சியை எதிர்கொள்ளபோவது உறுதியாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு கூட அது இட்டுசெல்லலாம்.
நாளாந்தம் இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுகளை கொட்டுவதற்காக இந்த நிறுவனம் அவற்றை கொழும்புக்கு கொண்டு செல்லப்போவதில்லை. அவை எமது சுற்று சூழலில்தான் அருகிலுள்ள ஆறுகளிலோ குளங்களிலோ கடலிலோதான் கொட்டப்பட போகின்றன. இவற்றால் நீர்வாழ் உயிரினங்கள் பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும். நீர்ப்பறவைகள், நீர்த்தாவரங்கள் போன்றவை இந்த கழிவுகளில் கலந்திருக்கும் நச்சுத்தன்மைகளால் படிப்படியாக அழிந்து போகும் ஆபத்துக்களும் உண்டு.
இதன்காரணமாக மீன்பிடியையும் விவசாயத்தையும் நம்பி வாழும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் தமது அன்றாட தொழிலை இழக்க நேரிடும் மக்கள் வீதிக்கு வந்து பிச்சையெடுக்கும் நிலையே உருவாகும்.
*இந்த எதனோல் என்கின்ற வேதிப்பொருளை தயாரிக்கும் போது வெளிப்படுகிற கரியமிலவாயு காற்றில் கலப்பதால் மிகப்பெரிய ஆபத்துக்கள் உண்டு.
சுற்றுப்புறத்தில் வாழுகின்ற மக்களுக்கு கண்,மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் பீடிக்கும், கண்ணெரிவில் தொடங்கி பார்வைக்குறைபாடுகள் இளம்வயதினரைக்கூட பாதிக்கும். அதுமட்டுமன்றி சூழலில் உள்ள வாயுமண்டலத்தை கடுமையான முறையில் இந்த கரியமிலவாயு வெப்பமாக்குவதனால் வறட்சியும்,வெப்பமும் தலைதூக்கும்.
*அரிசி சோளம் போன்றவற்றை விவசாயிகள் அதிக விலைகளுக்கு விற்கமுடியும் என்பது இரண்டாவது பொய்யாகும்.
யுத்தத்துக்கு முன்னர் மட்/கல்லடியில் இயங்கி வந்த இந்த மதுபான தொழிற்சாலைக்கூட அதன் உருவாக்க காலத்தில் மட்டக்களப்பு விவசாயிகளை நோக்கி இத்தகைய பொய்களையே பரப்பியது. ஆனால் காலப்போக்கில் அது எதனால் தயாரிப்புக்காக ஒரு கிலோ அரிசியைகூட விவசாயிகளிடமிருந்து வாங்கவில்லை. மாறாக உள்நாட்டு உற்பத்தி செலவுக்கும் குறைவாக வெளிநாட்டில் இருந்து எதனோல் எனப்படும் வேதிமத்தை இறக்குமதி செய்தது. அதனை இங்கு கொண்டுவந்து நீருடன்கலந்து மதுபானத்தை பாட்டில்களில் அடைத்து விநியோகம் செய்யும் ஒரு தொழிற்சாலையாகவே செயல்பட்டது.
மாறாக இன்று விளம்பரப்படுத்த படுவதுபோல அரிசினையும் சோளத்தையும் அதிக விலைக்கு விவசாயிகளிடமிருந்து இந்த நிறுவனம் வாங்குவதாயின் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பினை வழங்கியிருக்கலாமே? அங்கும் மட்டக்களப்பைப்போலவே நிறைய விவசாயிகள் பயன் பெறுவார்களே? அங்கும்கூட வேலையற்ற இளம் சமுதாயம் வேலைவாய்ப்பினை பெறக்கூடுமே? தனது சொந்த மாவட்ட மக்களைவிடவா மட்டக்களப்பை அவர் நேசிக்கின்றார்? என்று கேட்க தெரியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம் என்பதை அவர்கள் நன்றே அறிந்திருக்கின்றார்கள்.
அரிசியும் சோளமும் மட்டுமல்ல உலக அளவில் எதனோல் தயாரிப்புக்காக கூடிய அளவில் பயல்படுத்தப்படும் மூலப்பொருட்களில் கரும்பும் ஒன்றாகும். எனவே கரும்பு தோட்டங்களுக்கு பெயர்போன அம்பாறை மாவட்டம் இந்த எத்தனால் தயாரிப்புக்கு சிறந்த இடமாகுமே? அங்குதான் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஐக்கிய தேசிய கட்சியில் தேசிய அமைப்பாளர் கெளரவ.தாயகமகே உள்ளார். அவர் கூட பல தொழில் நிறுவனங்களை (காமன்சு) அங்கே வைத்திருக்கின்றார். இதுபோன்ற தொழிற்சாலையை என் அம்பாறையை மையப்படுத்தி உருவாக்க வழிகோரவில்லை?
மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதுதான் நோக்கமென்றால் வாழைச்சேனை காகித தொழிற்சாலையை, மண்டூர் ஒட்டு தொழிற்சாலையை,பல்வேறு செங்கற்தொழிற்சாலைகளை,ஏன் மீள திறக்க யாரும் முன்வருவதில்லை?
இவற்றையெல்லாம் கடந்து வறுமையிலும் மதுப்பாவனையிலும் முன்னணியில் உள்ள ஒரு மாவட்டமான மட்டக்களப்புக்கு "மதுவற்ற நாடு" என்னும் வேலைத்திட்டத்துடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியின் நல்லாட்சி தந்த பரிசுதான் இந்த மதுபான தொழிற்சாலை என கொண்டு நாம் வாழாதிருப்போம் என நம்பியிருப்பார்கள் போலும்.
இன்னுமொரு கேள்வி இங்கே எழுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தொழில்சாலையை ஆதரிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாயின் இதனை ஏன் வடமாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அவர்கள் வழங்கியிருக்க கூடாது? வடக்கில் மதுபான உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்கி அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர ஏன் தமிழரசுக் கட்சி தயங்குகின்றது? அங்கே இருக்கின்ற தண்ணீர் பஞ்சம் மேலும் அதிகரிக்கும் என்கின்ற அச்சம் அந்த மக்களை பேசாமடந்தைகளாக கிடந்துழல அனுமதிக்கப்போவதில்லை. அவர்களின் எதிர்ப்புக்களை அரசியல்மயப்படுத்த அவர்களிடம் மாற்று அரசியல் கட்சிகளுண்டு.
அன்பார்ந்த பொதுமக்களே இப்போது புரிகின்றதா? ஏன் மட்டக்களப்பு இந்த மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்காக தெரிவு செய்ய பட்டதென்று? நமக்குத்தான் முதுகெலும்புள்ள ஒரு அரசியல் தலைமையில்லை, வழிகாட்டல் இல்லை. இத்தகைய கொடுமைகளை எதிர்க்க நாதியில்லை என்று ஆளும் வர்க்கங்கள் கணக்கு போடுகின்றன என்பதைத்தவிர வேறென்ன?
எனவேதான் அரசியல் குரலற்றவர்களாக உள்ள எமது மக்களின் முதுகிலே சவாரி செய்ய எத்தனிக்கும் மக்கள் விரோத சக்திகளை அடையாளம் காணுவோம். ஆளும் வர்க்கத்தின் இந்த சுரண்டல்கள் அனைத்துக்கும் எதிராக அணிதிரள்வோம். புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி இளம் சமூகத்தினர் அணிதிரளுவோம் என கோருகின்றோம். எமக்கான பாதைகளை நாமே செதுக்கிடுவோம் என அழைக்கின்றோம்.
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலை எவ்வித சமரசமுமின்றி அகற்றப்படும் வரை போராடுவோம்.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி
மட்டக்களப்பு
யூன் /2017