5/30/2017

மூதூர் பாலியல் வன்முறை - சிறப்புக் குழு விசாரணை கோருகிறார் கிழக்கு மாகாண முதல்வர்

இலங்கையில் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளிக் கூட மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவம் தொடர்பாக போலிஸ் சிறப்புக் குழுவின் விசாரணை தேவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மாகாண துணை போலிஸ் மா அதிபரை கேட்டுள்ளார்.மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளிக் கூட மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்


சம்பவம் தொடர்பாக துணை போலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்ட முதலமைச்சர் உண்மையான குற்றவாளி விரைவாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுள்ளதாக முதலமைச்சர் செயலக ஊடகப் பிரிவு கூறுகின்றது .
அந்த பிரதேசத்திலுள்ள அரசு பள்ளிக்கூடமொன்றில் நடைபெறும் அறநெறி வகுப்புக்கு சென்றிருந்த 6 - 8 வயதுடைய மூன்று மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான மூன்று மாணவிகளும் தற்போது திருகோணமலை பிரதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சந்தேகத்தின் பேரில் பள்ளிக்கூட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அயல் பிரதேசத்தை 2 தொழிலாளர்கள் உட்பட 4 பேர் போலிஸாரால் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் விந்து அணு மாதிரிகள் மீட்கப்பட்டதாக போலிஸார் நீதிமன்ற அறிக்கையில் தெரிவித்த நிலையில் அதனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை முன் வைக்குமாறு மூதூர் நீதிமன்றத்தினால் போலிஸாருக்கு கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் தேடபட்டு வருவதாக போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அந்த பிரதேச தமிழ் பள்ளிக் கூட மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

0 commentaires :

Post a Comment