1967 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நக்ஸல்பாரி என்ற கிராமத்தில் எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினோரு பேர் போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டம் ' உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற முழக்கத்தை முன்வைத்து நாடெங்கும் ஓர் அரசியல் இயக்கமாகப் பற்றிப் படர்ந்தது.
மேற்கு வங்கத்தில் துவங்கியதென்றாலும் அந்த இயக்கத்தின் அதிர்வுகளைக் கேரளாவிலும் ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும்கூட உணரமுடிந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் முதலில் நக்சல்பாரி அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டிலோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியவர்களோடு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கூர் தீட்டப்பட்ட இளைஞர்களும் இணைந்துகொண்டனர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உள்ளீடாக இருந்த மைய அரசு எதிர்ப்பும், 1967 ல் ஆட்சிக்கு வந்த திமுக, விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனகளைத் தீர்க்கத் தவறியதும் அதற்குக் காரணங்களாய் அமைந்தன.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தி இந்தியாவில் பொதுவுடமையை நிலைநாட்டுவதென்பதே தமது நோக்கம் என நக்ஸல்பாரி இயக்கத்தவர் அறிவித்துக்கொண்டனர். இங்கே நடைமுறையிலிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் 'தேர்தல் பாதை, திருடர் பாதை'என்று விமர்சித்தனர்.
தமிழகத்தில் நக்ஸல்பாரி இயக்கம்
கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதலாளித்துவ கட்சிகளைவிட அதிகமாக நக்ஸல்பாரி இயக்கம் பிளவுகளைச் சந்தித்தது ஒரு முரண் நகை என்றே சொல்லவேண்டும். அந்தப் பிளவுகளால் உருவான இயக்கங்களை தேர்தலில் போட்டியிடுகிறவர்கள், போட்டியிடாதவர்கள் என இரு பிரிவுகளாக நாம் வகைப்படுத்தலாம்.
தேர்தலில் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்ட சிபிஐ எம்எல் என்ற பெயரில் இயங்கும் ஒரு கட்சி இப்போது மைய நீரோட்ட இடதுசாரிக் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையைக்கொண்ட பல்வேறு பிரிவுகள் இப்போது மாவோயிஸ்ட் என்ற பெயரில் ஒரே கட்சியாக உருவெடுத்துள்ளது.
நக்ஸல்பாரி போராட்டம் வெடித்தபோது அது தமிழ்நாட்டில் கோவைப் பகுதியிலும், தஞ்சைப் பகுதியிலும்தான் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவரான அப்புவின் மறைவும், நக்ஸல்பாரி தலைவர்களின் அறைகூவலை ஏற்று அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் அது தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பரவுவதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது.
நக்ஸல் இயக்கத்துக்கு புத்துயிரூட்டிய அவசரநிலை
ஆனால் இந்திராகாந்தி அம்மையாரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையும் அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதும், சிறைச்சாலைகளில் நடைபெற்ற சித்ரவதைகளும் நக்ஸல்பாரி அரசியலுக்கு புத்துயிரூட்டின.
அவசரநிலைக் காலத்துக்குப் பிறகு மீண்டும் தலையெடுத்த நக்ஸல்பாரி இயக்கம் வேலூர், தருமபுரி மாவட்டங்களைக் களமாகக்கொண்டு செயல்படத் தொடங்கியது.
1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜோலார்பேட்டையில் நடந்த நக்ஸல்பாரிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று போலீஸார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆரின் ஆணைப்படி வேலூர், தருமபுரி மாவட்டங்களில் 19 நக்ஸல்பாரிகள் போலீஸாரால் போலி 'என்கவுண்டர்களில்' கொல்லப்பட்டனர்.
நக்ஸல்பாரி இயக்கம் தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்களில் சாதகமானவை எனக் குறிப்பிடவேண்டுமென்றால் மனித உரிமைகள், விவசாயத் தொழிலாளர் பிரச்சனைகள், தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் ஆகியவை குறித்து அது உருவாக்கிய விழிப்புணர்வைக் கூறலாம்.
அவசரநிலைக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மனித உரிமை இயக்கம் ஆரம்பமாகிவிட்டது என்றபோதிலும் தருமபுரி என்கவுண்டர்களுக்குப் பிறகுதான் அது தீவிரமடைந்தது.
இன்று தமிழ்நாட்டில் காவல்நிலைய கற்பழிப்புகளும், லாக் அப் மரணங்களும் குறைந்துள்ளதென்றால் அதற்கு அப்போது ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்களின் செயல்பாடுகளே காரணம்.
'கீழ்வெண்மணி சம்பவத்திற்கு நியாயம் வழங்கிய நக்ஸல்பாரி'
கூலி உயர்வு கேட்டதற்காக கீழ்வெண்மணியில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ, நீதிமன்றமோ நியாயம் வழங்கத் தவறியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையைத் தந்தவர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
அதன் பிறகுதான் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையின்கீழ் ஒடுங்கிக் கிடந்த விவசாயத் தொழிலாளர்கள் சற்றே மூச்சுவிட முடிந்தது.
நக்சல்பாரி அரசியலின் முன்னோடிகளிடையே சாதிப் பிரச்சனை குறித்த புரிதல் அவ்வளவாக இல்லையென்றே சொல்லலாம்.
தத்துவார்த்த ரீதியில் சாதியை மேல் கட்டுமானத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் பார்த்தனர். பொருளாதார அடித்தளத்தை மாற்றிவிட்டால் மேல் கட்டுமானத்தில் உள்ள சாதி பிரச்சனையும் தானாகவே தீர்ந்துவிடும் என்பதுதான் அவர்களது நிலைபாடு. ஆனால் அதில் விதிவிலக்காக இருந்தவர் பாலன்.
நக்ஸல்பாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பாலன் அவர் செயல்பட்டுவந்த தருமபுரி பகுதியில் தேநீர்க் கடைகளில் இருந்த தனிக் குவளைகளை உடைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் புகழ்பெற்றவர்.
தலித் அல்லாதவரான பாலன் தீண்டாமைக்கு எதிராகச் செயல்பட்டதால் அப்பகுதி தலித் மக்களின் ஆதரவைப் பெற்றார். தலித்துகள் மீதான வன்கொடுமைகளை எதிர்க்கும் போராட்டங்களில் தலித் அல்லாதவர்கள் முன்னே நிற்கவேண்டும் என்பதற்கு பாலன் தான் உதாரணம் .
' பாலன் மாடலை' நக்ஸல்பாரி இயக்கம் வேறெங்கும் செயல்படுத்தவில்லை. அது பாலனோடு ஆரம்பித்து பாலனோடு முடிந்துவிட்டது என்றபோதிலும் இன்று மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் நடத்தும் போராட்டங்களுக்கு துவக்கமாக அமைந்தது பாலனே என்பதை மறுக்கமுடியாது.
நக்சல்பாரி இயக்கம் தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களில் பாதகமான ஒன்றை இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம்.
அதுதான் ஆயுதப் போராட்டத்தோடு ஒன்றிணைந்த தமிழ் இனவாதம். வேலூர், தருமபுரி பகுதிகளில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்கரவாதத்தால் செயல்பட முடியாமல் முடங்கிக் கிடந்த நக்ஸல்பாரி இயக்கத்தவர் சிலருக்கு 1980 களின் முற்பகுதியில் இலங்கையில் தமிழர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்திய அரசால் ஈழப் போராளிகளுக்கு அமைத்துத் தரப்பட்ட ஆயுதப் பயிற்சி முகாம்களும் 'நல்வாய்ப்புகளாக' அமைந்தன.
ஈழப் போராளிகளோடு அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் நவீன ஆயுதங்களை மட்டுமின்றி தனிநாடு கோரும் எண்ணத்தையும் அறிமுகப்படுத்தியது. அதையொட்டி நக்ஸல்பாரி அரசியலின் அடுத்த அலை 'தனித் தமிழ்நாடு' கோரும் இனவாதமாக மேலெழுந்தது.
தமிழ்நாட்டில் ஈழப் போராளிகளுக்கான பயிற்சி முகாம்கள் மூடப்பட்டதும் காவல்துறையின் அடக்குமுறையும் தனித் தமிழ்நாடு கோரும் இயக்கங்களை இப்போது கட்டுப்படுத்தியிருந்தாலும், 1980 களின் பிற்பகுதியில் உருவான இனவாத உணர்வு பல்வேறு குழுக்களைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகள் மறுக்கப்படுவதும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் தொடர்வதும் அந்த இனவாதம் தழைக்க நீர் வார்த்துக்கொண்டிருக்கின்றன.
தொகுத்துப் பார்த்தால் நக்சல்பாரி இயக்கத்தின் ஆயுதப் போராட்ட அரசியல் மக்களுக்குக் கேடாகவே முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டின் வேலூர், தருமபுரி மாவட்டங்களில் மட்டுமல்ல, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இப்போது மாவோயிஸ்டுகளுக்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கும் ஆதிவாசி மக்களுக்கும்கூட அது துயரத்தைத்தான் பரிசாகக் கொடுத்திருக்கிறது.
பயங்கரவாதத்துக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு அழிந்துபோய்விட்ட இன்றைய உலகில் ஆயுதப் போராட்டத்தின்மூலம் எந்தவொரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. எனவே நக்சல்பாரி அரசியலிலிருந்து இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது ஆயுதப் போராட்டத்தை அல்ல, மாறாக ஜனநாயக போராட்ட வடிவங்களைத்தான்.
இது நக்சல்பாரி எழுச்சியின் அரை நூற்றாண்டு மட்டுமல்ல, ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டும்கூட. இந்தத் தருணத்தில் பழமை ஏக்கத்தோடான நினைவுக் குறிப்புகளை எழுதுவதோ, மறைந்த தலைவர்களுக்குப் புகழுரைகள் ஆற்றுவதோ முக்கியமல்ல. நாடாளுமன்ற ஜனநாயகம், சோஷலிஸம், புரட்சி ஆகியவை குறித்த புறவயமான விவாதமே இன்றைய தேவை.
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டையொட்டி எழுதப்பட்டுள்ள ' தி டைலமாஸ் ஆஃப் லெனின் ' என்ற தனது நூலில், " லெனினின் உடலைப் புதையுங்கள்; ஏகாதிபத்தியம், சுய நிர்ணய உரிமை, கம்யூனிச அரசு, அரசியலுக்குத் தரவேண்டிய முதன்மை முதலானவை குறித்த அவருடைய சிந்தனைகளை உயிர்ப்பியுங்கள் " என்று ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு தாரிக் அலி கூறியிருப்பது இந்திய நக்ஸல்பாரி இயக்கத்துக்கும்கூடப் பொருந்தக்கூடியதுதான்.
அரசு ஆயுதபாணியாக இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடுகிறவர்கள் மட்டும் எப்படி நிராயுதபாணிகளாக இருப்பது எனக் கேட்கப்படலாம். அதற்கு 1843 ஆம் ஆண்டிலேயே கார்ல் மார்க்ஸ் பதிலளித்திருக்கிறார். "
விமர்சனம் என்ற ஆயுதம், ஆயுதங்களாலான விமர்சனத்தைப் பதிலீடு செய்ய முடியாது என்பது உண்மைதான். ஒரு பருண்மையான சக்தி இன்னொரு பருண்மையான சக்தியால்தான் தூக்கியெறியப்படவேண்டும். ஆனால் ஒரு கோட்பாடானது வெகுமக்களைப் பற்றிக்கொள்ளும்போது அதுவே ஒரு பருண்மையான சக்தியாக மாறிவிடும்" என அவர் குறிப்பிட்டார்.
இன்றைய இளைஞர்கள் சிந்திக்கவேண்டியது ஜனநாயகம் என்ற கோட்பாட்டை எப்படி வெகுமக்களைப் பற்றச் செய்வது, எப்படி அதை ஒரு பருண்மையான சக்தியாக மாற்றுவது என்பதைத்தான்.
(கட்டுரையாளர் - ரவிக்குமார் துரை, எழுத்தாளர், கவிஞர்)

0 commentaires :
Post a Comment