4/07/2017

ஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் அமையக்கூடாது?

-நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)Image may contain: text
நல்லாட்சி அரசாங்கத்தில் மதுவும் போதைப் பொருட்களும் இல்லாத ஒரு நாட்டினை அடையப் போகிறோம் என்று நாமெல்லோரும் எதிர்பார்த்தோம். ஜனாதிபதி அவர்கள் கூட தமது தேர்தல்கால உரைகளில் போதைப் பொருள் இல்லாத நாடு பற்றி பிரலாகித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 வாரங்களுக்குள் நம் கண் முன் ஒரு மது உற்பத்தித் தொழிற்சாலையே உருவாவதற்கான அனுமதி கொடுக்கப்படப்போகிறது என நம்மில் யாரும் கனவு கூடக் கண்டிருக்கவில்லை. இந்த தொழிற்சாலை தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்:
1. கல்குடா, கும்புறுமூலையில் அமைக்கப்படுகின்ற இத்தொழிற்சாலைக்கு அரசு வரி விலக்கு அளிப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தியடைந்துள்ளன. மிகவுமே இலாபம் நிறைந்த மது உற்பத்தி வர்த்தகத்திற்கு அரசு வரிவிலக்கு அளித்து ஊக்குவிப்பது ஒரு விசித்திரமான விடயம்.
2. பொருளாதார அமைச்சுடைய பாரிய அனுசரணையோடு தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டு ஒரு சில தினங்களிலேயே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது அரசின் உயர் பீடம் இத்தொழிற்சாலை அமைப்பிற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய தேர்தல் கால கதைகள் காற்றோடு சங்கமித்திருக்கின்றன.
3. இத்தொழிற்சாலை அமையப் பெற்றிருக்கின்ற கோறளைப் பற்று பிரதேச சபையிலிருந்து கட்டடத்திற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லை.
4. கிழக்கு மாகாண சபைக்கு தமது ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற இப்பாரிய தொழிற்சாலை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
இத் தொழிற்சாலையால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்ன?
1. மதுப்பாவனையில் ஏற்கனவே முன்னணியில் மட்டக்களப்பு மாவட்டம் இருக்கிறது. இரண்டு மதுபானச் சாலைகள் மாத்திரமே இருக்க வேண்டிய நிலையில் 68 மது விற்பனை நிலையங்கள் இப்போது இயங்குகின்றன. அதுதவிர சட்டபூர்வமற்ற மது உற்பத்தி நிலையங்கள் பற்றியும் நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.
இந்நிலையில் கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற பாரிய மதுபான உற்பத்தித் தொழிற்சாலை இப்பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்களின் வாழ்வியலில் வேண்டத்தகாத மாற்றங்களை உண்டு பண்ணுவது மட்டுமின்றி ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கையிலும் சமூக, பொருளாதார ரீதியான சீரழிவுகளை உண்டு பண்ணும். ஏற்கனவே மதுபானத்திற்கு அடிமையான கூடுதல் எண்ணிக்கையுள்ளவர்களைக் கொண்ட மாவட்டமென்ற அவப்பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டம் இன்னுமின்னும் சீரழிய இத் தொழிற்சாலை வழிவகுக்கும்.
2. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வேண்டுமென பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இச்சூழலில் இவ்வாறான நடவடிக்கைகள் எமது எதிர்கால சந்ததியினரை திட்டமிட்டு நெறிபிறழச் செய்து அழித்து விடுகின்ற சந்தர்ப்பங்களை உருவாக்கும்.
3. மதுப்பாவனையின் விளைவால் ஏற்படுகின்ற வாகன விபத்துக்கள், சண்டை சச்சரவுகள், ஒழுக்கம் தொடர்பான சீரழிவுகள் அதிகரிக்கும்.
4. கல்குடாவில் அமைக்கப்படுகின்ற தொழிற்சாலை Grain based Extra Neutral Alcohol (ENA) என்று அழைக்கப்படுகின்ற மதுபானத்தை உற்பத்தி செய்யும் என்று அறியப்படுகிறது. இவ்வுற்பத்தியால் வெளியேறுகின்ற கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் குறித்த பிரதேச நீர்நிலைகளிலுள்ள மீன்கள் இறத்தல் போன்ற விளைவுகளோடு விவசாயமும் பாதிப்படையும்.
5. ENA எனப்படுவது அதிகூடிய எரிபற்றுநிலை உடையது. எனவே, களஞ்சியப்படுத்தப்படும் இடங்களிலும் சுற்றயல் பிரதேசங்களிலும் தீப்பற்றக்கூடிய அபாயங்கள் இருக்கின்றன. மட்டுமின்றி இங்கு வேலை செய்ய எதிர்பார்க்கப்படுபவர்கள் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
6. இங்கிருக்கின்ற மிகப்பாரிய பிரச்சினைகள் இரண்டு. மது உற்பத்திக்காக பாவிக்கப்படுகின்ற மூலப்பொருள் அரிசியாகும். தொன் கணக்கிலான அரிசியினை இத்தொழிற்சாலை கொள்வனவு செய்யும். இந்நிலைமை அரிசியினது விலையினை அதிகளவில் உயர்வடையச் செய்யும். அரிசியின் விலை உயர்வு எம் அனைவரது வாழ்விலும் தாக்கத்தைச் செலுத்தும். ஏழைகளின் வாழ்வு இன்னுமின்னும் அதளபாதாளத்தை நோக்கிச் செல்லும்.
7. அடுத்த விடயம், இந்நிறுவனத்தின் வருடாந்த மதுபான உற்பத்தி 1.3 பில்லியன் லீட்டர்களாகும். இவ்வுற்பத்தியை மேற்கொள்ள இதன் மூன்று மடங்கு லீட்டர் தண்ணீர் தேவைப்படும். கல்குடா தொழிற்சாலையில் அந்தளவிற்கு உற்பத்தி செய்யப்படவில்லை என்று எடுத்துக் கொண்டாலும் கூட பில்லியன் கணக்கிலான லீட்டர்கள் நீர் இத்தொழிற்சாலைக்குத் தேவைப்படும். இந்நிலைமை இப்பிரதேசத்தில் வரட்சி காலங்களின்போது குடி தண்ணீருக்கான பாரிய பிரச்சினைகளை உண்டுபண்ணும்.
8. சொல்லப்படுகின்ற 250 தொழில்வாய்ப்புக்கள் என்பதற்கப்பால் இத்தொழிற்சாலையால் ஏற்படப்போகின்ற சமூக, பொருளாதார, சுகாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகளே மிக அதிகமானவை.
மதுபான உற்பத்தி நிலையத்தினை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பது என்பதும் மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கக் கூடிய நிலைமைகளைக் கண்டும் காணாமல் இருப்பதும் கமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகளில் மிகப்பாரிய வேண்டத்தகாத தாக்கங்களை உண்டுபண்ணி மனிதகுல வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும். இப்பிரச்சினை ஒரு சமூகத்திற்கு மாத்திரமோ அல்லது ஒரு இனத்திற்கு மாத்திரமோ மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை கிடையாது.
எனவே, எம்மால் இயன்றவரை கல்குடாவில் அமைக்கப்படுகின்ற மது உற்பத்தி நிலையத்தை நிறுத்துமாறு அரசினைக் கோரி அழுத்தம் கொடுத்து எமது சமூகங்களின் நிம்மதியான வாழ்வுக்காக வழிசமைப்போம்.
- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

0 commentaires :

Post a Comment