வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் பற்றிப் பகிரங்கத்தளத்தில், பரவலான உரையாடல்கள் நடக்கத்தொடங்கியுள்ளன. இதனால் மாகாணசபையின் மந்தமான அல்லது வினைத்திறனற்ற செயற்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன. வடக்கு மாகாணசபையைப் பற்றிய விமர்சனங்களும் கண்டனங்களும் எல்லோருடைய எழுத்திலும் வாயிலும் மிகச் சாதாரணமாகவே புழங்குகின்றன.
மாகாண நிர்வாகத்தைப் பற்றியும் அதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் முகப்புத்தகத்தில் கிழித்துத் தோரணம் கட்டுகிறார்கள். இதெல்லாம் ஏதோ பேக் ஐடியில் நடக்கிறது என்று எண்ண வேண்டாம். சொந்த முகத்தோடுதான் நடக்கிறது. தமிழ் அதிகாரச் சூழலில் இப்படி அதிகார அமைப்பொன்றுக்கு எதிராக, மக்களின் அபிமானத்தைப் பெற்ற தரப்பு ஒன்றை விமர்சித்துச் சொந்த முகத்தைக் காட்டுவது எளிதானதல்ல.
ஆனால், மிக இளைய வயதினர் கூட மாகாணசபையின் கீழிறக்கம்பற்றி துணிச்சலாக எழுதுகிறார்கள். பலர் கடுமையான தொனியில் கேள்விகளை எழுப்புகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இருப்போர் கூட விக்கினேஸ்வரனுடைய நிர்வாகத்தைப் பற்றிச் சோர்வுடனேயே விசாரிக்கிறார்கள்.
வட மாகாணசபையின் பொறுப்பின்மைகளைப் பற்றியும் மந்தத்தனத்தைப்பற்றியும் இந்தப் பத்தியாளர் உள்படச் சிலர் ஏற்கனவே குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா உள்பட வேறு சில உறுப்பினர்களும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். மாகாணசபை அமைச்சர்கள் மீது மாகாணசபையின் உறுப்பினர்களாலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கல்வி, விவசாயம், கூட்டுறவு போன்ற துறைகளில் மிகப் பெரிய சீர்கேடும் ஊழலும் மலிந்திருப்பதாகச் சொல்லப்பட்டது.
இதைப்பற்றியெல்லாம் ஏராளம் ஆதாரங்களை ஊடகங்கள் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைத்தன. இருந்தபோதும் எதைக்குறித்தும் விக்கினேஸ்வரனின் நிர்வாகம் பொருட்படுத்தியதில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவது ஆறுதலாக இருங்கள் என்று உருக்கமாகக் கேட்கப்பட்டது. போரை நடத்திய அரசே அதற்கான நிவாரணத்தைக் கொடுக்க வேணும் என்று, கோரிக்கையை இடம்மாற்றியது வடக்கு மாகாணசபை. முன்னாள் போராளிகளுக்கு உதவி, மாற்றுவலுவுள்ளோருக்கு ஆதரவு என்று பெரிதாக மேளமடித்துச் சொல்லப்பட்ட அளவுக்கு காரியங்கள் எதுவும் சிறப்பாக நடக்கவில்லை.
“ரோம் எரியும்போது நீரோ மன்னல் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப்போல” சனங்கள் அவலப்பட்டுக்கொண்டிருக்கும்போது, முதலமைச்சரும் அமைச்சர்களும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பிரேரணைகள் என்று கலகலப்பாகக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த நாளும் விழா நாயகர்களாகவே காட்சியளிக்கின்றனர்.
மாகாணசபையின் கீழிறக்கம் பற்றி முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனைங்களை அப்போது கவனிக்க விரும்பாதவர்கள், இன்று முன்னிலையில் நின்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அன்று விக்கினேஸ்வரனைப்பற்றி இருந்த மதிப்பும் கீர்த்தியும் இன்று காணாமல் போய் விட்டது. இதற்குக் காரணம் சனங்களின் எதிர்பார்ப்பைக் குறைந்த பட்சமாகவாவது நிறைவேற்றுவார் என்று நம்பப்பட்டு ஏமாந்ததேயாகும். உண்மையில் மாகாண நிர்வாகத்தைத் திறமையாக இயக்கிக் காட்டியிருக்க வேண்டிய விக்கினேஸ்வரன் வழிமாற்றப்பட்டார். அல்லது வழிதவறினார். அதனால் தன்னுடைய ஆட்சியில், நிர்வாகத்தில் விக்கினேஸ்வரன் கோட்டை விட்டார் எனலாம்.
மாகாணசபையைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் தமிழ்ச்சமூகத்தினால் மிக அதிகமாக மதிக்கப்பட்டவர் விக்கினேஸ்வரன். பல நல்ல முன்மாதிரிகளை உருவாக்கக்கூடியவர் எனப் பலரும் நம்பினார்கள். ஆனால், ஆட்சிப்பொறுப்பை ஏற்று நான்கு ஐந்து மாதங்களாக எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த விக்கினேஸ்வரனுக்குச் சக உறுப்பினர்களால் நெருக்கடிகள் உருவாகத்தொடங்கின. இதற்குக் காரணம், தொடக்கத்தில் மாகாணசபையை இயக்குவதற்கு அப்போதைய மகிந்த ராஜபக்ஸ ஆட்சி மந்த நிலையிலான ஆதரவையே வழங்கியது.
இதனால் விக்கினேஸ்வரனுடைய நிர்வாகம் விரைந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமலிருந்தது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட தமிழ்த்தேசிய தீவிர நிலை அரசியலாளர்கள் விக்கினேஸ்வரனுக்கு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக சிவாஜிலிங்கம், அனந்தி போன்றவர்கள். இதனால் ஒரு எல்லைவரையில் பொறுமை காத்த விக்கினேஸ்வரன், வேறு வழியில்லாமல், தானும் எதிர்த்தரப்பின் நின்று முகத்தைத் திருப்பி, அரசாங்கத்தை எதிர்க்கத் தொடங்கினார். இது மாகாணசபையைத் தவிர்க்க முடியாத அளவுக்கு முடக்கியது. பதிலாக விக்கினேஸ்வரனுக்கிருந்த உடன்கால நெருக்கடியைத் தவிர்த்தது.
ஆனால், மாகாண நிர்வாகத்தைச் செயற்படுத்துவதற்கான கரிசனைகளை எடுப்பதற்குப் பதிலாக, மாகாணசபைக்கான அதிகாரத்தைப்பற்றிப் பேசுவது தொடக்கம், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான வியாக்கியானங்களை உரைப்பது என்றொரு திசையில் விக்கினேஸ்வரன் நகர்ந்தார். மாகாணசபையும் கூட அப்படித்தான் செயற்படத்தொடங்கியது. அளவுக்கு அதிகமான பிரேரணைகளை உற்பத்தி செய்யும் ஒரு இயந்திரமாகியது. அது உற்பத்தி செய்யும் பிரேரணைகளின் நடைமுறைச் சாத்தியங்களைப்பற்றி அது ஒரு போதுமே சிந்தித்ததில்லை. இவற்றின் கூட்டு விளைவே இன்று வடக்கு மாகாணசபை மிக மோசமான சீரழிவில் வந்து நிற்கிறது.
கல்வியில் கடைசி மாகாணமாகவும் விவசாயம், மீன்பிடித்துறையில் மிகப் பின்தங்கியதாகவும் வடக்குமாகாணம் உள்ளது. குறைந்த பட்சம் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த, மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வேலைத்திட்டங்களில் கூட மாகாணநிர்வாகம் சரியாகச் செயற்படவில்லை. வடக்கிற்கான பொருளாதார அபிவிருத்தி மைய நிர்மாணம், வவுனியா பேருந்து நிலையம், கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வணிகச் சந்தையை இயங்க வைத்தல், இரணைமடுக்குள நிர்மாணம் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் விநியோகம், மீன்பிடித் துறைமுக விருத்தி என எதிலும் குறிப்பிடத்தக்க வகையில் மாகாணசபை தன்னுடைய வினைத்திறன் மிக்க செயற்பாட்டுத்திறனை வெளிப்படுத்தவில்லை. எல்லாமே பலவீனமான நிலையில்தான் உள்ளன.
பெரும் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து வளாகம் கைவிடப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி மையம் பற்றிய பேச்சையே தற்போது காணவில்லை. கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வணிகச் சந்தை திறக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளாகப் புட்டப்பட்டிருக்கிறது. இரணைமடுவில் மட்டுமல்ல, அக்கராயன் குளம் உள்பட வன்னிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளப்புனரமைப்புகளில் முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் குளப்புனரமைப்புகளை மேற்பார்வை செய்வதற்கான விவசாயிகளையும் துறைசார் வல்லுநர்களையும் கொண்ட கட்டமைப்பு எதையும் மாகாணசபை உருவாக்கியிருக்க வேணும். ஆனால், அப்படி நடக்கவில்லை.
வன்னியின் ஆதாரம் குளங்களே. அங்குள்ள குடியிருப்புகளும் விவசாயத் தொழில்துறையும் குளங்களை ஆதாரமாகக் கொண்டவையே. இருந்தும் குளப்புனரமைப்புகளில் உரியவாறு கவனம் கொள்ளப்படவில்லை. விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பல்வேறு விதமான உள் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் நிச்சயமாகக் குளப்புனரமைப்புகளைப் பாதிப்புக்குட்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இதையிட்டு விவசாயிகள் பெரும் கவலையடைந்திருக்கிறார்கள். இந்த மாதிரிப் பல தரப்பிலும் ஏராளம் கவலைகள் உண்டு. ஆனால், இதையெல்லாம் விக்கினேஸ்வரனோ, மாகாணசபையோ கவனத்தில் எடுப்பதில்லை. என்னதான் வந்தாலும் எதையும் நாம் பொருட்படுத்தவே மாட்டோம் என்ற தீவிரப் பிடிவாதத்தில் இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் யாருக்குமே விளங்கவில்லை.
இதனால்தான் மாகாணசபையைப் பற்றி எல்லோரும் விமர்சிக்கத் தொடங்கியிருப்பதாகும். தமிழ்ச்சூழலில் இப்போது மெல்ல மெல்ல விமர்சனத்துக்கான களச் சூழல் ஒன்று மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. மாகாணசபையைப் பற்றி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளைப்பற்றி, தமிழ்த்தலைமைகளைப்பற்றியெல்லாம் விமர்சனங்கள் பகிரங்கத்தளத்தில் முன்வைக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் தலைவர்களை நோக்கி மக்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். மாகாணசபையின் கல்வி அமைச்சர் இரண்டு தடவை அவருடைய பணிமனையில் வைத்துச் சுற்றி வளைக்கப்பட்டது இந்த அடிப்படையிலான எழுச்சியின் விளைவே. மாகாணசபைக்கு முன்பாகக்கூட பல தடவை தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை பல தரப்பினரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஊடகங்களும் விரும்பியோ விரும்பாமலோ இப்போது மாகாண நிர்வாகத்தைப்பற்றியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் அதனுடைய தலைமையைப் பற்றியும் விமர்சித்து எழுத்தித்தான் ஆக வேணும் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரும்பான்மை பலத்தோடு அதிகாரத்துக்கு வந்த, வடக்கின் முதலாவது மாகாணசபை, தன்னுடைய வரலாற்றுக்காலத்தில் ஏராளமான குற்றச்சாட்டுகளையும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்த ஒரு அமைப்பாகவே இருக்கப்போகிறது. இதை மாற்றியமைப்பதற்கு ஏன் யாருமே முன்வரவில்லை? அல்லது தமிழ்த்தேசியவாதத்தை வலியுறுத்திப் போரிடும் மிதவாதத் தமிழர்களிடம் இப்படியான ஒரு செயலின்மைத்தன்மை தொடர்ச்சியாகவே வளரத்தான் போகிறதா?
அரசியல் தலைமைத்துவம் இல்லாத வெற்றிடம் என்பது மிகப் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். அரசியல் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் இருப்பது வேறு. அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவோராக இருப்பது வேறு.
அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முடியாமல், அரசியல் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அதிகாரத்தைத் தங்களுக்கு இசைவாக வைத்திருப்பார்களே தவிர, அதைச் சமூக முன்னேற்றத்துக்காகவும் வரலாற்றின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தமாட்டார்கள். அதில் அவர்களுக்கு ஆற்றலும் ஆளுமையும் அக்கறையும் இருக்காது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அதிகாரமும் புகழும் வளங்களுமே.
அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவோரின் நிலை இதற்கு முற்றிலும் மாறானது. அவர்களுக்கு மக்களும் சூழலும்தான் முக்கியமானது. தங்களிடமுள்ள அதிகாரத்தை வைத்து பிரதேசத்தையும் மக்களையும் எந்த வகையில் எல்லாம் மேம்படுத்தலாம் என்று பார்ப்பார்கள். வளங்களையும் அதிகாரத்தையும் இணைத்துச் செயல் வடிவமாக்குவதன் மூலமாக, வரலாற்றை முன்னகர்த்தக் கூடியவர்களாக இருப்பர். துரதிருஸ்டவசமாக இவ்வாறானவர்களை தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலில் தெரிவு செய்து கொள்வதில்லை. வினைத்திறனும் செயற்திறனும் இல்லாதவர்களே அரங்கில் ஏற்றப்படுகிறார்கள். அப்படியானவர்களால் சமூகத்தேவைகளை நிறைவேற்ற முடிவதில்லை. இதுதான் வடக்கு மாகாணசபைக்கும் தமிழர் அரசியல் சூழலுக்கும் நேர்ந்துள்ளது.
இதையிட்ட கவலைகளும் கவனமும் தமிழ்ப்பரப்பில் ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. உரையாடல்கள் தொடர்கின்றன. உரையாடல்கள் தொடரும்போது மக்களிடத்திலே அநீதிக்கும் மந்தத்தன்மைக்கும் எதிரான கொதிப்பு உயர்ந்து வரும். கொதிப்பு உயரும்போதே வரலாறு சரியாக உருப்பெறுவதுண்டு. அநீதிக்கும் மந்தத்தன்மைக்கும் தவறுகளுக்கும் எதிரான கொதிப்பு என்பது உருக்கை உருமாற்றி ஆயுதமாக்கும் உலைக்குச் சமமாகும். அதுவே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
நன்றி *தேனீ *
0 commentaires :
Post a Comment