அனோஜன் பாலகிருஷ்ணனின் “சதைகள்” சிறுகதைகள்: என் வாசிப்பனுபவம் - ஜிப்ரி ஹஸன்
ஈழத்தின் புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் கவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழுந்து வருபவர் அனோஜன் பாலகிருஷ்ணன்(annogen balakrishnan) அவர் 1992 ல் பிறந்திருக்கிறார். எனவே அவர் ஒரு மிக இள வயதுப்படைப்பாளி. அவரது வயதை ஒத்தவர்களின் இலக்கியப் பிரதிநிதி அவர். அவரது சதைகள் சிறுகதைத் தொகுப்பு தமிழ்ச்சிறுகதை வெளியில் அவரது பெயரை பதிவு செய்கிறது. ஒரு ஆழமான வாசிப்பில் சில பலவீனங்களைக் கொண்ட பிரதியாகவும், பலவீனங்களைக் கடந்துசெல்ல எத்தனிக்கும் பிரதியாகவும், நம்பிக்கை தரும் பிரதியாகவும் சதைகள் தோற்றங்கொள்கிறது.
அனோஜனின் கதைசொல்லும் நுட்பமும் அதற்கான மொழியும் அவரை ஈழத்தின் புதிய தலைமுறைப்படைப்பாளிகளில் நம்பிக்கை தரும் ஒருவராக அறிவிக்கிறது. எனினும் கதைசொல்வதற்கு ஒரு கவித்துவமான மொழிவெளிப்பாட்டை மட்டுமே அவர் சார்ந்திருப்பாரேயானால் அடுத்த கட்டத்தை நோக்கிய அவரது நகர்வு மிகவும் சவாலானதாகவே இருக்கும்.
ஈழத்துச்சிறுகதை வரலாற்று வழி நோக்கும்போது, ஒரு காலத்தில் முற்போக்கு அணி கோலோச்சியிருந்த காலம் இருந்தது. தனிமனித அகம்சார்ந்த படைப்புகளைப் புறக்கணித்த அமைப்புசார்ந்த ஒரு படைப்பியக்கத்தை ஈழத்து இலக்கியத்தில் அது பெரிதும் ஊக்கப்படுத்தி இருந்தது. அந்த நிலையை உடைத்துக்கொண்டு எஸ்.பொ. வெளிப்பட்டார். அதனை நற்போக்கு என்று சொன்னார். முற்போக்குக்கு எதிரான இலக்கிய இயக்கமாக அதனை அறிவித்தார். இந்தப் பாதை நமது இலக்கிய மரபில் ரகுநாதனால்தான் முதன் முதலில் இடப்பட்டது. இந்தப் பாதையில் தீவிரமாக எஸ்.பொ. தொடர்ந்து இயங்கினார். இந்த இரு தொடர்ச்சிகளுமே சரிவர இல்லாத ஒரு தேக்கநிலையில்தான் இன்று ஈழத்து இலக்கியம் உள்ளது.
ஈழத்தின் இன்றைய இளம் தலைமுறைப்படைப்பாளிகள் குறிப்பாக வடபுலப் படைப்பாளிகளில் அநேகமானோர் இந்த எஸ்.பொ.வின் அணிசார்ந்த படைப்புகளை படைப்பது போல் ஒரு தோற்றம் உள்ளது. இது எந்தளவு உண்மையானது என்பது விரிவான ஆய்வுக்குரியது.
அனோஜனின் “சதைகள்“ தொகுப்பும் தனிமனித அகம்சார்ந்த படைப்புகள்தான். ஒரு தனிமனிதன் சமூகத்தோடும், தன் சுயத்தோடும் கொள்ளும் உறவும் முரணுமே அவரது கதைகளைத் தீர்மானிக்கும் மையப்புள்ளியாகவுள்ளது. இந்தப்புள்ளியிலிருந்து வெகுசிலவான மீறல்களும் நடந்தே இருக்கிறது.
சதைகள் தொகுப்பிலுள்ள முக்கால்வாசிக் கதைகள் இளைஞர்களின் அகவுலகையும் அவர்களின் பாலியல்சார்ந்த மனக்கொந்தளிப்புகளையும் பேசுபவைதான். அவர் உருவாக்கும் இளைஞர்கள் நமக்கு அந்நியமில்லாத நமக்குள்ளே இருப்பவர்கள்தான். இளைஞர்களின் அந்தரங்க அனுபவங்களையும், உணர்வுகளையும் அவற்றின் எல்லைகளை மீறி ஒரு பொதுத்தளத்தில் காட்சிப்படுத்துகின்றன அனோஜனின் கதைகள். அவை மிக மலினமான பால்வேட்கைசார்ந்த உணர்வுகளாக இருந்தாலும் அந்த உணர்ச்சி பூர்த்தியானதன் பின் அவர்கள் அடையும் மனவிடுதலை மனிதர்களை ஒரு உன்னத தரிசனத்தை நோக்கி நகர்த்தக்கூடியது.
ஃப்ராய்ட் வகுத்த நனவு மனதுக்கும்-நனவிலி மனதுக்குமிடையிலான மனப்போராட்டங்கள்-சஞ்சலங்கள். உள்மனவெழுச்சியும், எதையும் எளிதில் உணர்ந்துகொள்ள முடியாத வெறுமையும் என மனித மனத்தின் கதையாகவும் உடல்சார்ந்த வேட்கையின் கதைகளாகவும் ஒரு சமச்சீரான தளத்தில் சதைகளின் கதைகள் பின்னப்பட்டுள்ளது.
ஃப்ராய்ட் சொன்ன நனவிலி மனதில் நாம் அமுக்கி வைத்த பால்வேட்கைகளின் கட்டற்ற வெளிப்பாடுகள் இவரது கதாபாத்திரங்களை எப்போதும் ஒரு சீரான மனநிலையிலன்றி பரபரப்பானவர்களாகவே அலையவைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி அவர்களை அந்த வேட்கையிலிருந்து மிக எளிதாகவும் விரைவாகவும் வெளியேற்றி விடுகிறது. அதற்குப்பின் அவர்கள் அடையும் மனவிடுதலையுடன் கதைகளும் நிறைவுபெறுகின்றன. இந்தவகையில் பார்க்கும் போது அனோஜன் எஸ்.பொ. வின் நற்போக்கு அணியின் தொடர்ச்சியாகத் தெரிகிறார்.
அவரது ‘வேறயாக்கள்’ எனும் கதை சாதி, காதல், இரத்த உறவுத் திருமணம் எனும் மூன்று தளங்களையும் ஒரே புள்ளியில் இணைத்துச் செல்கிறது. எடுத்துரைப்பு முறையில் ஒரு புதுமையான முயற்சி கதைக்குள் தெரிகிறது. ராஜேந்திரன், மகிழினி எனும் இரு கதாபாத்திரங்கள் தங்கள் காதல் உறவை வெளிப்படுத்தும் நுட்பம் இதுவரை நாம் தமிழ்ச் சிறுகதைகளில் கண்டிராத ஒன்றுதான். ஆனால் தமிழ் திரைப்படங்களில் இது போன்ற உத்திகளைக் காண முடியும். அதேநேரம் இக்கதையின் மொழி வாசகனை பிரதியோடு பிணைத்துவிடும் ஒரு மர்ம அழகியலைக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு கதைக்கு இப்படியான ஒரு மொழி அமைவது தமிழ்ச் சிறுகதைக்கு புதுமையானதுமல்ல. இவரது கதைமொழியின், நடையின் அழகியல் இந்தக் கதையில் உக்கிரம் பெறுமளவுக்கு ஏனைய கதைகளில் அதேயளவு உயர்ச்சி கொள்வதில்லை.
“அசங்கா“ சுற்றிவளைப்புகள் அதிகமள்ள ஒரு கதை. மையச்சம்பவமோ அல்லது சிதைவான சம்பவங்களோ என எதுமற்று அலையும் அழகியல் மட்டுமே இந்தக்கதைக்குள் உள்ளது.
காமம் சார்ந்த சித்தரிப்புகள் கதையை ஆக்கிரமித்திருக்கிறது. அசங்கா எனும் சிங்களப்பெண்ணுடன் கதைசொல்லி கொண்டிருக்கும் உறவு காமம் எனும் இழையால் பிண்ணப்பட்டுள்ளது. காமத்துக்கு அப்பால் அந்த உறவில் எந்த அர்த்தமும் இல்லை. அசங்காவை விட்டுவிலகிவிட வேண்டும் என்ற மனத்தத்தளிப்பு கதைசொல்லிக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆயினும் இந்தப்பதட்டம் அவனுக்குள் காதலின் வழியாகவன்றி காமத்தின் வழியே வந்ததுதான்.
அசங்காவின் மகளான நிமினியின் பூனை கதைசொல்லியின் மனச்சாட்சியினதும் குற்றவுணர்ச்சியினதும் குறியீடாகவே வருகிறது. காமம் இங்கு ஒரு மிருகமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கதைசொல்லியின் கார்ச் சக்கரத்துக்குள் அகப்பட்டு இறந்து போகும் பூனையுடன் கதைசொல்லிக்கும் அசங்காவுக்குமிடையிலான உறவில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அசங்கா மீதான அவனது காமம் அடங்கி அவளிலிருந்தும் அவன் ஒதுங்கிச் செல்கிறான். இந்த உளமாற்றம் பூனையின் இறப்போடுதான் நிகழ்கிறது. கதையில் பூனையின் இறப்பும் கதைசொல்லியின் மனமாற்றமும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. இதுவொன்றே காமம் எனும் ஒரு தீவிர உணர்ச்சியால் மட்டுமே அவன் இயக்கப்பட்டிருக்கிறான் என்பதை வாசகன் உணர்ந்துகொள்ளப் போதுமானது.
கதையில் பூனையின் இறப்பை கதைசொல்லிக்கு அசங்கா மீதிருந்த தீவிரகாமத்தின் இறப்பாக காண்கிறான் வாசகன். நிமினியின் பூனை இறக்கும் அதே கணத்திலிருந்து அவன் தனக்குள்ளிருந்த சிக்கலான காம உணர்ச்சியிலிருந்து முற்றாக விடுதலைபெறுகிறான். இந்த விடுதலை அவனை ஒரு மனிதனாக்கிவிடுகிறது. அதன் பின்னர் அவன் அன்பின் ஆழத்தையும், உறவின் தரிசனத்தையும் அடைந்துகொள்கிறான். கதைசொல்லி வந்தடையும் இந்தப் புள்ளிதான் இந்தக்கதையும் கூட. அதற்குமேல் இந்தக் கதை வாசகனுக்கு வேறொன்றையும் சொல்வதில்லை என்றே நினைக்கிறேன்.
இக்கதையை இயக்கிச் செல்லும் “உணர்ச்சி“ தொடக்கத்தில் “காமம்“ என்ற கடுமமையான உணர்ச்சியிலிருந்து மீண்டு ஒரு விடுதலை உணர்ச்சியடையும் ஒருவன் பற்றியது. கதைசொல்லியின் வெறும் பிரமைதான் கதையை முழுவதும் பரவியிருப்பது.
“அசங்கா“, “சதைகள்“, “பேஸ்புக் காதலி,“இதம் போன்ற முக்கால்வாசிக் கதைகள பெண்ணின் உடலைக் கொண்டாடும் கதைகளாகவே உள்ளன. பெண் உடல் இக்கதைகளில் வெறும் சதையாகவே நோக்கப்படுகிறது. எனினும் சில கதைகளில் கதை சொல்லி அடையும் ஒரு தரிசனத்தின் மூலம் பெண்ணுடல் சதை எனும் பால்வேட்கைசார்ந்த நோக்கிலிருந்து வேறொரு நோக்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.
“அசங்கா“ கதையில் வரும் ரப்பர் தோட்டம் பற்றிய மிகையான விபரணங்கள் கதையின் விசையான நகர்வுக்கு எந்தவித பங்களிப்பையும் ஆற்றாது ஒரு தட்டையான அந்நியமான விபரணமாக எஞ்சுகிறது. அசங்காவில் மட்டுமல்ல ஏனைய கதைகளிலும் இதுதான் நிகழ்ந்துள்ளது. அனோஜன் தனது கவித்துவமான நடை மேல் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டதன் விளைவுதான் இது. ஒரு கவிஞனுக்கு அது அசாதாரண வெற்றிகளை ஈட்டிக்கொடுக்கலாம். ஒரு எழுத்தாளன் கதை மீது அல்லது கதைகள் மீதுதான் கூடுதல் கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அனோஜன் கதைகளைவிட கவிதைகள் சிறப்பாக எழுதக்கூடும் என அனுமானிக்கிறேன்.
ஈழத்தின் புதிய தலைமுறைப்டைப்பாளிகளின் படைப்புகளில் சிங்களப் பெண்கள் காமத்தின் பிரநிதிகளாகவும் சதைப் பிண்டங்களாகவுமே அதிகம் சித்தரிக்கப்படுகின்றனர். இளங்கோ, ராகவன், அனோஜன் என அந்தப்பட்டியல் நீள்கிறது. இளங்கோவின் “கொட்டியா” கதையிலும் சிங்களப்பெண்ணின் “சதையும் உடலுமே“ மையங்கொள்கின்றன. அதன் பின்னால் மிகவும் மெளனமாகவே காதல் நெளிந்து வருகிறது.
2
மனித வாழ்வு சார்ந்த தமிழ்ச் சிறுகதைகளின் மரபார்ந்த சித்தரிப்புகளான கதைகள் அனோஜனுடையவை. ஈழத்தமிழ்ச்சிறுகதைகளில் 80களுக்குப் பின்னர் உக்கிரமாக வெளிப்பட்ட அரசியல் பரிமாணத்திலிருந்து கிட்டத்தட்ட முற்றாகவே விலகி நிற்கின்னறன அனோஜனின் கதைகள். “அண்ணா“ எனும் கதையில் மெல்லிதாக தமிழ் விடுதலை இயக்கமொன்றின் மீதான விமர்னம் வருகிறது.
மையமாக வட இலங்கையின் புதிய தலைமுறைப்படைப்பாளிகளின் கதைகளில் வெளிப்படும் பாலியல்சார்ந்த சித்தரிப்புகளே அனோஜனின் கதைகளிலும் விரவி இருக்கிறது. இந்த பாலியல் விபரிப்புகள் கதையின் தவிர்க்க முடியாத விபரணங்களன்றி மிக மேலோட்டமான வெறும் வாசக ஈர்ப்புக்கான உத்தியாக மட்டுமே படுகிறது. மனித வாழ்வின் நுண்மையான அனுபவங்களின் ஒரு அந்தரங்கப்பக்கமாக அது வெளிப்படும் இடங்களில் மட்டுமே பாலியல் விபரணங்கள் உயிர்ப்புள்ளவையாக அமையும் என்பதே என் அனுமானம். வாசகனைக் கவர்வதற்கான பாலியல் விபரிப்புகள் ஒரு தேய்வழக்கு உத்தியாக இன்று மாறியுள்ளது. வடபுலத்தின் புதிய தலைமுறைப் படைப்பாளிகளிடம் இந்தப் பாலியல் விபரிப்புகள் தாராளமாகி இருக்கின்றன. இந்தத் தேய் வழக்கு உத்தியிலிருந்து அவர்களின் படைப்புகள் அடுத்தகட்டத்தை நோக்கி எழுச்சியுற வேண்டும்.
தொகுதியின் அதிகமான கதைகள் ஒரு மையப்புள்ளியில் சுழல்தல் எனும் நவீனத்துவப் போக்கை மீற முனைபவை. “ஜூட்“, “அண்ணா“ போன்ற கதைகளில் இந்த குணாம்சம் உள்ளது. “ஜூட்“ எனும் கதை “ஜூட்“ என்ற நாயின் கதையாகவும், போஸ்ட்மாஸ்டர் ராஜரத்தினத்தின் கதையாகவும், கீர்த்தனா-சியாமளன் கதையாகவும் திரிநிலை வடிவங்கொள்கிறது.
அனோஜனின் சில கதைகளில் காலம் ஒரு சமநிலையானதாக, ஒரு சீரானதாக நகர்வதில்லை. ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு தொலைதூரக் கட்டத்துக்கு ஒரு நொடியில் தாவிச்சென்று விடுகிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்த இயல்பு அவரால் பின்பற்றப்படுவதில்லை.
“சிவப்புமழை“ ஒரு அறிவியல் சிறுகதை. ஈழத்துச் சிறுகதைவெளியில் அறிவியல்கதைகளுக்கான முயற்சிகள் மிகவும் அபூர்வமாக நிகழ்பவை. நவீன அறிவியல் முன்னேற்றத்தின் பின்னுள்ள சூழ்ச்சிகளும், போலித்தனங்களும், தன்னகங்காரங்களும் சிவப்புமழையில் பேசப்படுகிறது.
3
தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பில் இன்றைய அதன் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது அனோஜன் மேலும் முன்னகர வேண்டிய படைப்பாளியாகவே தெரிகிறார். அதற்கான ஆற்றலும், காலமும், களமும் அவருக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது.
நன்றி முகநூல் *ஜிப்ரி ஹஸன்

0 commentaires :
Post a Comment