4/19/2017

பிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது ?


L’image contient peut-être : texte


உலகமும் மானிடமும் தனது வரலாற்றுத் திருப்புமுனையில் தடுமாற்றத்துடன் வந்து நிற்கிறது. நமக்கும், நாளைய சந்ததிக்குமான சரியான தீர்மானங்களை எடுக்காவிடத்து, நாம் மாத்திரமல்லாது நமக்குப் பின்னால் வரவிருப்பவர்களையும் நடுக்கடலில் தள்ளிவிட்ட பொறுப்புக்கு உள்ளாகுவோம்.
உலகை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்து மானிடத்தை அடிமைப்படுத்தும் திட்டம் நீண்ட காலமாவே ஒரு சில குழுக்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. அத்திட்டத்தின் முன்னேறிய பகுதியே உலகமயமாக்கலாகும். ஐரோப்பியக் கட்டமைப்பும் உலகமயமாக்கலின் ஒரு பகுதியே என்பதை பலரும் இப்போது புரிந்துகொண்டுவிட்டார்கள்.
*
உலகமயமாக்குதலால் ஐரோப்பியர்களுக்குச் சாதகமான பொருளாதார விளைவுகளே ஏற்படும் என்ற கோசத்தை பெருநிதியங்களின் ஊடகங்கள் தாராளமாகவே ஊட்டிவிட்டன. ஆனால், அதன் பாதகமான விளைவுகளை ஐரோப்பியர்கள் தாராளமாகவே இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியக் கட்டமைப்பும், ஈரோ நாணய உருவாக்கமும் பெருநிதியங்களுக்கு மட்டுமே பலாபலன்களைக் கொடுத்துள்ளன. ஐரோப்பிய மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விளைவாகப் பாசிசப் போக்குகள் வலுத்துக்கொண்டேயிருக்கின்றன. தற்போதைய ஐரோப்பியக் கட்டமைப்பு இன்னமும் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஐரோப்பியக் கட்டமைப்பின் மூலக்கற்களில் ஒன்றாகிய பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைமைக்கான தேர்தல் இந்தப் பின்னணியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
*
பதினொருவர் வேட்பாளர்களாகப் போட்டியிடும் இத்தேர்தலில் நான்கு கட்சிகள் நெருக்கமான இடைவெளிகளுடன் செல்வாக்குச் செலுத்துவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மரின் லூ-பென், எம்மானுவெல் மக்ரோண், பிரான்சுவா பிய்யோன் மற்றும் ஜோன்-லுயிக் மெலோன்ஷோன் ஆகிய நான்கு வேட்பாளர்களும் முன்னணியில் நிற்கின்றனர்.
*
யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்பதை ஆய்வு செய்வதன் மூலம் யாருக்கு வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டுவது இன்றை சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்கும் எனும் உந்ததல் என்னுள் எழுகிறது.
********************************
1)........................Résultat de recherche d'images pour "marie le pen"
பச்சையாக இனவாதத்தை உமிழ்ந்து உருவாகி, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாதுகாப்புக்கரிசனைகளை ஊதிப்பெருக்கி வளர்ச்சி பெற்ற கட்சி லூ-பென் குடும்பத்தின் தேசிய முன்னணிக் கட்சியாகும். அப்பாவின் கட்சிக்கு மகளும், பேத்தியும் வெள்ளையடித்து துலக்கித் தேர்தலுக்கு வெளிக்கிட்டுள்ளார்கள். ஆபத்தான வகையில் பாரிய வளர்ச்சியும் அடைந்துள்ளார்கள்.
மரின் லூ-பென் வெற்றிபெற்றால், வெள்ளைப் பணக்காரர்களுக்கும், இனவாதிகளுக்கும் கிடைத்த வெற்றியாக அது அமையும். பிரான்சில் அரசியல் ஸ்திர நிலை குலைந்து நாடு பிளவுண்டு தடுமாறும். பெண்களின் பல உரிமைகள் பறிபோகும். தொழிலாளர் உரிமைகள் பறிபோகும். சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள். வெளிநாட்டுக்காரர்கள் மோசமான முறையில் பாதிக்கப்படுவார்கள். பிரஞ்சுத் தேசிய உரிமைபெற்ற வெளிநாட்டவர்களும் இவர்களுள் அடங்குவார்கள். இறுதியில், உள்நாட்டு யுத்தம் ஒன்று உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இராணுவச் செலவுகளை பல மடங்காக அதிகரிப்பதாக மரின் அறிவித்திருப்பது ஒரு நல்ல அறிகுறியல்ல.
*
மரின் லூ-பென் க்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்குச் சமமானதாகும்.
******
2)--------------Résultat de recherche d'images pour "macron"
யார் இந்த எம்மானுவல் மக்றோன் ? பிரஞ்சு அரசியற் பரப்பில் பின்கதவால் பெருநிதியக் காரர்களால் கொண்டுவரப்பட்டவர்தான் இந்த மக்றோன். அரசாங்கத்திற்கும் பெருநிதியக் கும்பல்களுக்கும் இடையில் உள்ள "கள்ள உறவு" இப்போதெல்லாம் ஒரு இரகசியமான விடயமேயல்ல. சனநாயகம் என்பது பெருநிதியங்களின் விளையாட்டுப் பொருளேயன்றி வேறில்லை. நவீன ஐரோப்பாவில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பற்றிய தீர்மானத்தை முதலில் பெருநிதியங்களே தீர்மானிக்கின்றன. அதையடுத்து அவர்களின் சேவை நாய்களான மீடியாக்கள் தீர்மானத்தை நிறைவு செய்யும் வண்ணம் குடிமக்களின் கருத்தை வடிவமைக்கின்றன.
*
பேச்சு வன்மையுடனான புத்திஜீவிதம், இளமைத்துடிதுடிப்பு மற்றும் தோற்றம் போன்ற விடயங்கள் பெருநிதியக் கும்பல் மக்றோனைத் தெரிவு செய்யும் முக்கிய காரணிகளாகின. ஏற்கெனவே றோச்ஷீல்ட் வங்கியில் பணிபுரிந்து உயர்மட்ட நிதியர்களுடன் மக்றோன் தொடர்புகளை ஏற்படுத்தி அங்கு தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டது மட்டுமல்லாது அவர்களுக்கு ஏற்ற விதத்தில் செயற்பட்டு பல மில்லியன்களை உழைத்துக் கொண்ட விடயம் பிரஞ்சுக்காரர்களுக்கு இரகசியமாக விடயமொன்றல்ல.
**
சோசலிஸ்ட் என்ற போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றிய தற்போதைய பிரான்சுவா ஹொலண்ட் பெருநிதியங்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவர் நடாத்திய ஆட்சியும் லிபரல் தன்மையானதாகும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களும் இவர் தலைமையில் நிறைவேற்றப்பட்டன. இவையனைத்திற்கும் இதே அரசாங்கத்தில் அமைச்சராவிருந்து மக்றோன் முண்டு கொடுத்தவர். தற்போது பிரான்சுவா ஹொலண்ட் ன் செல்வாக்கு மக்களிடத்தில் பாரிய அளவில் சரிந்து போனதையடுத்து மக்றோன் தூசிதட்டப்பட்டு மீடியாக்களால் அரசியல் அரங்கில் தூக்கிப் பிடிக்கப்படுபவர்.
**
மக்றோன் உலகமயமாதலின் கைக்கூலி. இவர் ஆட்சியைக் கைப்பற்றினால் தொழிலாளர் உரிமைகள் மேலும் சரிவடையும், ஒய்வூதியத் திட்டமும், சுகாதாரப் பாதுகாப்பும் சிறிது சிறிதாக தனியார் மயமாக்கப்படும். பெருநிதியங்களும், பெருந்தொழிலாளர்களும் நன்மை பெறுவார்கள். சம்பளம் குறைக்கப்பட்டு வேலை நேரம் அதிகமாக்கப்படும். தொழிலாளர் போரட்டங்கள் வெடிக்கும். சமூக அமைதி சீரளியும். பொருளாதாரம் மந்த கதியடையும். ஆக மொதத்தில் பிரான்ஸ் மேலும் சீரளிவை நோக்கி நகரும்.
***
மக்றோனுக்கு வாக்களிப்பதும் ஆபத்தானது.
**
3)-----------------------------Résultat de recherche d'images pour "fillon"
பிரான்சுவா பிய்யோன் ஒரு பிற்போக்குவாதி. பொருளாதாரக் கொள்ளையில் இவரும் ஒரு லிபரல் போக்குடையவர். மத்திய மற்றும் கீழ்மட்டத்தினருக்கு இவர் ஆட்சியைப் பிடித்தால் எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதற்கப்பால் அவர்களின் நிலை மேலும் மோசமடையும் வாய்ப்புகளே மிக அதிகம்.
சார்க்கோஸி குடியரசுத் தலைவராக இருந்த வேளையில், அவரின் முதலமைச்சாராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தைக் குட்டிச் சுவராக்கியவர்களில் இவரும் ஒருவர். இனிவருங்காலங்களில் இவரால் உருப்படியாக நாட்டுக்கு ஏதும் செய்யமுடியுமா என்பது மாபெருங்கேள்வி மாத்திமல்ல அதுவே மாபெரும் சந்தேகமுமாகும். வழமையான "சிஸ்ரத்தின்" எடுபிடியே இவரும் என்பது இவரது கடந்த கால அரசியலை அறிந்தவர்கள் அறிவார்கள். பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் இவரைச் சுற்றியிருப்பவர்களும் ஏற்கெனவே ஆட்சியிருந்து சுயலாபங்களைப் பெற்றுக்கொண்டவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தை தற்போதுள்ள நிலையிலே பலப்படுத்த வேண்டும் என்பதும் இவரது நிலைப்பாடு. தற்போதைய ஐரோப்பியக் கட்டமைப்பு நிச்சமாக உலமயமாக்கல் சூத்திரதாரிகளின் நன்மை கருதிச் செய்யப்பட்டதே தவிர ஐரோப்பியக் குடிமக்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்டதல்ல.
****
பிய்யோனுக்கு வாக்களிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதிலை. நிலைமை இன்னமும் சீரளியவே செய்யும்.
*****
4)------------------Résultat de recherche d'images pour "mélenchon"
எஞ்சியிருப்பது, மெலோன்ஷோண்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் மெலோண்ஷோண் எல்லாவற்றிற்கும் முதலில் ஒரு நேர்மையான மனிதன். அரசியலில் தான் கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை தவறுகள் என்று பகிரங்கமாக ஒத்துக்கொண்டவர்.
ஒரு த்ரொட்சிய வாதியாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தபோதும், கம்யூனிஸ்டாக இருந்தபோதும் மற்றயவர்கள்போல் ஒரு கோட்பாட்டைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறாமல் மக்கள் சேவைக்காக தொடர்ந்து குரலெழுப்பி வந்தவர்.
இவர் பிரான்சுக்கு முன்வைக்கும் திட்டங்கள் பாரிய, மனிதத்தை முன்னிறுத்திய ஒரு பாய்ச்சலுக்கானவை என்பதை அவரது எதிரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். குறிப்பாக தற்போதுள்ள ஐந்தாவது குடியரசு அரசியலமைப்பு சீரமைக்கப்படவேண்டும் என்பதும், மனிதரையும் வாழ்க்கையயும் மையப்படுத்தி உற்பத்தி முறையில் மாசுபடல் பற்றிய அக்கறையை எவ்வாறு முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தனது திட்டமாகக் கொண்டுள்ளார்.
இயற்கைக்கு மனிதர்களால் திருப்பித்தரமுடியாததை இயற்கையிடமிருந்து எடுக்கக்கூடாது என்பதை பொருளாதாரக் கொள்கையில் நுழைக்கவேண்டும் என்பது அவரின் கொள்கைகளில் ஒன்றாகும்.
அநீதியான, பெருநிதியங்களின் நன்மை கருதி மாத்திரமே உருவாக்கப்பட்ட ஐரோப்பியக் கட்டுமானம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவான ஒரு பார்வையையும் அவர் முன்வைக்கிறார்.
அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல், அரச ஊழியத்திற்கு பாரிய அளவில் ஆட்களைச் சேகரித்தல், பொதுச் சேவையை மேன்மைப்படுத்தல், சூழலை மாசுபடுத்தாத சக்தி உற்பத்திக்கான களங்களைத் திறத்தல், படிப்படியாக நியூக்கிளியர் நிலையங்களை மூடுதல் என்பன இவரின் திட்டங்களில் முக்கியமானவையாகும்.
*
இவற்றை நிறைவேற்றும் செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு பெருநியங்களுக்கு எதிராகப் பாரிய அளவில் வரிச்சட்டம் கொண்டுவருதல், வரி ஏய்ப்புச் செய்யும் உள்நாட்டு வெளிநாட்டுக் கம்பனிகளை நெருக்கி வரியிறுக்கவைத்தல் போன்ற தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், பாரிய அளவில் நிதியையும், செல்வங்களையும் குவித்து வைத்திருப்பவர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் நியாயமாகச் செலுத்த வேண்டிய வரியை அறவிட்டு பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல் இவரின் பாரதையாகும். "பொதுமையான எதிர்காலம்" எனத் தொகுக்கப்பட்ட இவரின் தேர்தல் விஞ்ஞாபனம் வரவு-செலவு விபரங்கள் அடங்கிய முழுமையான திட்டமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
*
மிகப்பெரும்பான்மையான மீடியாக்கள் பெருநிதியங்களின் கைகளில் உள்ளதால் இவரின் திட்ங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன அல்லது நடைமுறைக்குச் சாத்தியப்படாதவையாக வர்ணிக்கப் படுகின்றன. எது எவ்வாறிருப்பினும், திரு மெலோன்ஷோண் அவர்கள் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால், நிச்சயமாக அது ஐரோப்பாவிற்கு ஒரு சிறந்து உதாரணமாக இருக்கும் என்பது மறுக்க முடியாததாகும்.
**
18.04.2017
நன்றி முகநூல் *வாசுதேவன் (பிரான்ஸ் )

0 commentaires :

Post a Comment