தோழர் வி.ரி.இளங்கோவனின் தலைமையும், ஆரம்ப உரையுமாக தொடங்கியது, 26வது வாசிப்பு மனநிலை விவாதம்- (23-04-2017)
முதலாவது நிகழ்வாக விசுவானந்ததேவனின் நினைவேந்தல் தொகுப்பின் மீதான தனது அனுபவத்தை வி.ரி.இளங்கோவன் கூறினார். அந்நூலிற்கான அனுபவ முன்னோட்டமாக சீனக் கொம்யூனிசக் கட்சியின் தோற்றம், அதன் பின்னணியில் வடபகுபதியில் மேற்கொள்ளப்பட்ட சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் தொடங்கிய வரலாற்றையம் தனது நேரடி அனுபவகங்ளூடாக விபரித்தார். சீனக்கொம்யூனிசக் கட்சிதான் தேசிய விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்ட அக்கால இஞைர்களுக்கு ஒரு ஊக்கசக்தியாக இருந்தது. அதிலும் குறிப்பாக வடமராட்சிப் பிரதேசம் இதில் முதன்மை பாத்திரம் வகித்தது. அது ஒரு எழுச்சிக்காலம். இவ்வாறான சூழலில் உள்வாங்கப்பட்டவர்களில் விசுவானந்ததேவனும் ஒருவர் என ஆரம்பித்து, இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள் என இலங்கையின் அரசியல் வரலாற்று அனுபவங்களுடன் விசுவானந்ததேவனின் அரசியல் நிலைப்பாட்டையும் தனது விமர்சனப்பார்வையில் முன்வைத்தார்.
காங்கேசந்துறை சீமந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட முதல் அனுபவம், அவருடன் இணைந்து மேற்கொண்ட கட்சிவேலைகள் என விசுவானந்ததேவனுடன் தனக்கிருந்த நெருக்கமான உறவின் அறிமுகத்தோடு இரயாகரன் தனது உரையை ஆரம்பித்தார். இந்த நூலை தொகுப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள் மீதே அவரது முதல் விமர்சனமாகவே இருந்தது. இலங்கை அரசை ஆதரிக்காதவர்கள் துரோகிகள் என்கின்ற பொதுவான அளவுகோலை கொண்டிருந்தவர்கள் இந்நூலின் தொகுப்பாளர்கள். விசுவிற்கும் எனக்குமான பல்வேறு முரண்பாடுகள் இருந்தது. இருப்பினும் 80 களின் பிற்பாடு இடதுசாரிய நோக்குநிலையிலான விசுவின் அரசியல் பங்கு மிக முக்கியமானது. இந்த தொகுப்பானது விசுவானந்தன் குறித்த ஒரு மேலோட்டமான தகவல்களால் மட்டுமே நிரப்பப்ட்டிருக்கிறது. விசுவானந்ததேவனுடன் நெருக்கமான பலரது நேரடி அனுபவங்களை தொகுப்பதற்கான ஆர்வத்துடன் இத்தொகுப்பு வெளிவரவில்லை. என்பதோடு விசுவானந்ததேவன் குறித்த இந்த தொகுப்பில் காணப்படாத ஒருதொகை தகவல்களை இரயாகரன் கூறினார். உண்மையில் இரயாகரனிடம் இருக்கும் தகவல்கள் இந்ததொகுப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். இவ்வளவு நேரடி தகவல்களை வைத்திருக்கும் நீங்கள் இவைகளை பதிவு செய்யலாமே என எம்.ஆர்.ஸ்டாலின் கேட்டதற்கு, அவரது வழமையான புன்னகையை சிந்தி பார்ப்பம்… என்றார்.
தமிழ் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய விடுதலைப்போராட்டத்திற்கான இயக்கங்களின் தொகை நிரம்பவே இருந்தது. இருப்பினும் கிழக்குமாகாணத்தை பொறுத்தவகையில் பிரதானமான ஐந்து இயக்கங்களின் பெயர்களே அறிமுகமாகியிருந்தது. இந்த ஐந்து இயக்கம் தவிர்ந்த ஒரு இயக்கமாகவும், அவ்வாறான ஒரு இயக்கத்தின் முக்கியஸ்தராக விசுவானந்ததேவன் இருந்ததை இந்த நூலினூடாகவே அறியக்கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் இந்த தொகுப்பு மிக முக்கியமானதே. மேலும் விசுவானந்ததேவனது தேசிய விடுதலைப்போராட்டத்தின் பங்களிப்பையும் அவரது செயல்பாட்டையும் அவதானிக்கும்போது அவர் தொடர்ச்சியாக ஒரு கட்சியில், விசுவாச மனநிலையில் இயங்கவில்லை. தொடர்ந்து தான் இணைந்துகொண்ட கட்சிகள், இயக்கங்களுடன் முரண்பட்டு, முரண்பட்டு நிலைப்பாடுகளை கடந்து வந்திருக்கிறார். இதை ஒரு வளர்ச்சி நிலையாகவே நான் பார்க்கிறேன் என எம்.ஆர்.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார். அத்தோடு விசுவானந்ததேவனுடன் அவர் சார்ந்த இயக்கத்துடனும் நேரடி அனுபவங்கொண்டிருந்த இரயாகரனுடன் இத்தொகுப்பாளர்கள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை எனும் கேள்வியையும் முன்வைத்தார். இந்த நூல்குறித்த நீண்டநேர கலந்துரையாடலில் வரதன், தேவதாசன். சோபாசக்தி, அசுரா, போன்றோர் கலந்துகொண்டனர்.
பிரான்சிஸ் அமல்ராஜ் அவர்களின் ‘கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்’ எனும் கட்டுரைத்தொகுப்பின் வாசிப்பின் அனுவபத்தை தேவதாசன் பகிர்ந்துகொண்டார். யுத்தம் முடிவடைந்த 2009 க்கு பின்பாக அறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய 38 கட்டுரைகளால் இத்தொகுப்பு நிரம்பியிருக்கின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி அனுபவங்கள் பெறப்பட்டு அதனூடாக அறிந்த தகவல்களையே இதில் தொகுத்திருக்கின்றார். இதில் தகவல் அறிந்து பிரயோகிக்கப்பட்ட மொழிப்பிரயோகம் வாசிப்பிற்கு கொஞ்சம் சிக்கலாகவே எனக்கிருந்தது. தமிழ்நாட்டு மொழியை பயன்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் விடயங்கள் சம்பந்தமாகவும், அதை எதிர்கொள்பர்களுக்கான பயிற்ச்சி ஆலோசனைகளை வழங்கும் விதமான கட்டுரையும் இத்தொகுப்பில் இருக்கின்றதென அறிமுகப்படுத்தினார்.
‘நடு’ சஞ்சிகையில் வெளிவந்த சிசிலி தர்சனின் ‘அசைவம்’: இக்கதையின் தலைப்பின் பொருளை இரண்டுவகையாகப் பார்க்கலாம். உணவு சார்ந்த பொருள்படவும், அசைவது என்பதாக பொருள்படவும் கருதிக்கொள்ளலாம். அந்த
வகையிலேயே இச்சிறுகதையின் உள்ளடக்கமும் இயங்குவதை நாம் காணலாம். என ‘அசைவம்’ சிறுகதை மீதான தனது பார்வையை நெற்கொழுதாசன் முன்வைத்தார். கதையின் கட்டமைப்பு உள்ளடக்கம் சார்ந்த விடயங்களை பகிர்ந்துகொண்டதோடு படைப்பாளியின் மொழிப்பிரயோகத்தை சிலாகித்தும் பேசினார் ‘புலவர்’ நெற்கொழுதாசன்.
இக்கதையானது சாதியத்தை மையமாக கொண்டு இயங்கியதால் இதன் மீதான உரையாடலும் நீண்டுகொண்டே சென்றது. உரையாடலில் கலந்து கொண்டவர்கள்: தர்மினி, தர்மு பிரசாத், தேவதாசன், வரதன், விஜயன், வி.ரி.இளங்கோவன், அசுரா.மற்றும் தோழர்களாகும்.
தொகுப்பு *அசுரா
2 commentaires :
தோழர் விசுவானந்ததேவன் மீதான
கௌரவமும் அகௌரவமும்!
– தோழர் மணியம்
இலங்கையின் வடமராட்சி கல்லுவம் கிராமத்தைத் தமது பிறப்பிடமாகக் கொண்டவரும், ஆனால் அதேநேரத்தில் இலங்கைத் தேசியவாதியாகவும், கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரிய சர்வதேசியவாதியாகவும் வாழ்ந்து, சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் நோக்கிய பயணத்தை தமது சக தோழருடனும் சில பொதுமக்களுடனும் மேற்கொண்டிருக்கையில் காணாமல் போன தோழர் விசுவலிங்கம் விசுவானந்ததேவன் அவர்களை நினைவு கூருமுகமாக 290 பக்கங்களில் நூல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த நூலில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முதல் பாமர மகன் வரையிலான 25 பேர் தோழர் விசுவானந்ததேவன் பற்றிய தமது அனுபவங்களையும், பார்வைகளையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் தமது கட்டுரைகளின் ஊடாக கடந்தகால, நிகழ்கால அரசியல் நிகழ்வுகளையும், போக்குகளையும், கருத்துகளையும் கூட முன்வைத்திருக்கிறார்கள்.
காலம் பிந்தியாயினும் ஒரு தனிமனிதனின் புகழ்பாடும் வரலாறாக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்று ஆவணமாக இந்த நூல் வந்திருப்பது அண்மைக்கால தமிழரின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்றுதான் கூற வேண்டும். இந்த முயற்சியை சாத்தியமாக்குவதில் இந்த நூல் வெளியீட்டுக்குழு பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறது. சுமார் ஒரு வருட காலத்துக்கும் மேலாக அயராது உழைத்தே இது சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நூல் வெளியீட்டுக்குழு சார்பாக அயராது உழைத்த நெதர்லாந்தில் வதியும் தோழர் பா.பாலசூரியன் அவர்களின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் இந்த நூல் வெளிவந்திருக்கச் சாத்தியமில்லை என்று துணிந்து கூறலாம். அவர் தனது நேரம் முழுவதையும் அர்ப்பணித்துச் செயற்பட்டதுமல்லாமல், தனது சொந்தப் பணத்தையும் போட்டு இந்த நூலை வெளிக் கொணர்ந்துள்ளார்.
நூல் வெளிவந்துவிட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே அதைப் பார்த்துப் படித்துவிடத் துடித்த நெஞ்சங்களின் தொகையும், துடிப்பும் அளவிட முடியாதது. அதன் காரணமாக சொற்ப நாட்களிலேயே பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததுடன், பிரதி கிடைக்காத பலர் இன்றும் அதற்காக முயன்று கொண்டிருப்பதையும் காண முடிகிறது. அதன் காரணமாக இரண்டாவது பதிப்பு ஒன்றை வெளியிடுவது பற்றிய ஆலோசனையும் வெளியீட்டுக்குழுவின் சிந்தனையில் உள்ளது.
தோழர் விசுவானந்ததேவன் குறித்த இந்த நினைவு நூலின் வெளியீட்டு விழாக்களும் சில நடந்து முடிந்துள்ளன. முதலாவது வெளியீட்டு விழா தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் முளை விடுவதற்கு முன்னர் புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகளின் ‘கோட்டை’யாகத் திகழ்ந்த கிளிநொச்சி மண்ணில் நடைபெற்றது. இரண்டாவது வெளியீட்டு விழா புலம்பெயர் தமிழர்கள் ஆகக்கூடுதலாக வாழும் கனடிய மண்ணில் நிகழ்ந்தது. இந்த விழாவில் அண்மைக்கால கனடிய வரலாற்றில் காண முடியாத அளவு பெருந்தொகையான மாற்றுக் கருத்துள்ள மக்கள் கருத்து வேறுபாடுகளைக் கடந்து கலந்து கொண்டதன் மூலம், தோழர் விசுவானந்ததேவன் மீதான பற்றுதலை வெளிப்படுத்தியதுடன், புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றையும் வெளிப்படுத்தினர். மூன்றாவது வெளியீட்டு விழா யாழ்ப்பாண நகரத்தில் நடைபெற்றது. இன்னும் சில வெளியீட்டு விழாக்கள் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் நடைபெறவுள்ளன.
இந்த வெளியீட்டு விழாக்கள் ஒரு உண்மையை எடுத்துக் காட்டியுள்ளன. அதாவது ஒரு மனிதன் மரணித்து எவ்வளவு காலமானாலும், அவன் மக்களுக்காக வாழ்ந்து மரணித்திருந்தால் அவனை மக்கள் ஒருபோதும் மறக்கார் என்ற உண்மையே அது. அந்த உண்மையை ஒரு உண்மைக் கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மரணித்த தோழர் விசுவானந்ததேவனின் நினைவு நூல் வெளியீட்டு விழாக்களில் அவதானிக்க முடிந்தது.
மறுபக்கத்தில் தோழர் விசுவானந்ததேவன் அவர்களின் கீர்த்தியை மக்கள் இவ்வளவு தூரம் மதித்த அதேவேளையில், வழமைபோல சில அரசியல் சந்தர்பவாதிகள் அவருக்கு சேறு பூசவும் தவறவில்லை. தாமும் எதனையும் செய்யார், மற்றவர்கள் செய்வதிலும் ஏதாவது நொட்டை சொல்வார் என்ற ஒரு குற்றச்சாட்டு நமது தமிழ் சமூகம் மீது நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருவதை பலரும் அறிவர்.
அந்த வகையில் இத்தகையவர்களால் இன்னும் பலரின் கட்டுரைகளை இந்த நூலில் இடம்பெற வைத்திருக்கலாம் என்ற விமர்சனம் இந்த நூல் வெளியீட்டாளர்கள் மீது வைக்கப்படுகிறது. எனவே இது பற்றிய உண்மைகளை தெரிவிப்பது அவசியம்.
Thanks to Vaanavil
தோழர் விசுவானந்ததேவன் மீதான
கௌரவமும் அகௌரவமும்!
– தோழர் மணியம்
முதலாவது விடயம் கட்டுரை கேட்டு அணுகப்பட்டவர்களின் தொகை ஏறத்தாழ 50 பேர். இவர்களில் சிலர் கட்டுரை தருவதாக கடைசி வரை வாக்குறுதி அளித்துவிட்டு தராமலேயே இருந்துவிட்டனர். ஒரு சிலர் நேர்மையாக கட்டுரை தர விரும்பவில்லை எனத் தெரிவித்துவிட்டனர். வேறு சிலர் கட்டுரை கேட்டு எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்காமலே பூடகமாக இருந்து கொண்டனர். வேறு சிலரிடம் கட்டுரை வாங்குவதில்லை என வெளியீட்டுக்குழுவே தீரமானித்துக் கொண்டது. வேறு சிலர் தவறுதலாக விடப்பட்டும் உள்ளனர் என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.
ஒரு சிலரிடம் கட்டுரை கேட்காததிற்குக் காரணத்தையும் சொல்லிவிட வேண்டும். அத்தகையவர்கள் ஒரு காலத்தில் தோழர் விசுவானந்ததேவனுடன் இணைந்து வேலை செய்தவர்கள்தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அத்தகையவர்கள் தோழர் விசுவானந்ததேவன் என்ன நோக்கத்துக்காக தமிழீழ தேசிய விடுதலை முன்னணியை (NLFT) உருவாக்கினாரோ அந்த நோக்கத்தை இரு தடவைகள் தடம் புரளச் செய்தவர்கள். முதலில் அவர்கள் அதிதீவிர இடதுசாரித்துவம் பேசி தமிழ் தேசிய இனப் பிரச்சினையிலிருந்து இயக்கத்தை திசை திருப்பிவிட முயன்றனர். பின்னர் 180 பாகை பல்டி அடித்து மார்க்சிய நோக்கிலிருந்து விலகிய வெறும் தமிழ் தேசியவாத இயக்கமாக அதை மாற்ற முயன்றனர். அதன் உச்சக் கட்டமாக பாசிச புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும் என்ற மிக மோசமான வலது சந்தர்ப்பவாதம் வரை சறுக்கியவர்கள். இன்றும்கூட அதே நிலைப்பாட்டிலேயே உள்ளவர்கள்.
இவையெல்லாவற்றையும் விட தோழர் விசுவானந்ததேவனையும், அவருடன் இணைந்து பணியாற்றிய சில தோழர்களையும் ஒழித்துக்கட்டுவதற்கான சதி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள். இன்று நல்ல பிள்ளைகள் போல வேசமிடும் இவர்களிடம் கட்டுரை பெற்றிருந்தால் அது தோழர் விசுவானந்ததேவனுக்கு செய்யும் அவமரியாதையாகவும், துரோகமாகவும் அமைந்திருக்கும். அதன் காரணமாகவே இத்தகையவர்களிடம் கட்டுரை பெறுவதில்லை என வெளியீட்டுக்குழு திட்டவட்டமாகத் தீர்மானித்திருந்தது.
இத்தகையவர்களே “விசுவானந்ததேவனின் நினைவு நூல் வெளியீட்டாளர்கள் உள் நோக்கத்துடன் அவரிடம் கட்டுரை பெறவில்லை, இவரிடம் கட்டுரை பெறவில்லை” என முகநூல்களிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் புலம்பினர்.
இன்னும் சிலர் விசுவானந்ததேவனுடன் ஒன்றாகச் சாப்பிட்டேன், ஒன்றாகப் படுத்தேன், அவரை சைக்கிளில் ஏற்றித் திரிந்தேன், அவரது கலியாணத்துக்கு முன் நின்றேன், எனவே எனக்குத்தான் அவர் கூடுதலான உரிமை என்ற கணக்கில் முதுசம் கொண்டாடுகின்றனர். ஆனால் இவர்கள் யாருமே தோழர் விசுவானந்ததேவன் சம்பந்தமாக இந்த 30 வருட காலத்தில் எந்தவொரு நினைவு முயற்சியையும் செய்ய முயற்சிக்கவில்லை என்பதைப் பார்த்தாலே இவர்கள் தோழர் விசுவானந்ததேவன் மீது எத்தகைய பற்றுப்பாசம் கொண்டிருந்தார்கள் என்பது புரியும்.
இது தவிர வேறு சிலர் தோழர் விசுவானந்ததேவனின் ஆத்ம தோழர்கள் என்று கூறிக்கொண்டு அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கத்தையும், அவர் அசையாது உறுதியுடன் பின்பற்றிய மார்க்சியக் கொள்கைகளையும், மிகவும் கீழ்த்தரமான முறையில் வசைபாடியதையும் கூடக் கண்டோம்.
தோழர் விசுவானந்ததேவன் எங்காவது உயிருடன் வாழ்ந்திருந்து, இத்தகைய வகையில் தன்னைப் பற்றி பெருமை பேசியவர்களையும், சிறுமை பேசியவர்களையும் கண்டிருந்தால், அவருக்கேயுரிய பெருந்தன்மையுடன் தனக்குள் சிரித்துவிட்டு, அவர்கள் எல்லோருடனும் கள்ளம் கபடம் இன்றி அளவளாவியிருப்பாரோ என்னவோ?
Thanks to Vaanavil
Post a Comment