தோழர் வி.ரி.இளங்கோவனின் தலைமையும், ஆரம்ப உரையுமாக தொடங்கியது, 26வது வாசிப்பு மனநிலை விவாதம்- (23-04-2017)
முதலாவது நிகழ்வாக விசுவானந்ததேவனின் நினைவேந்தல் தொகுப்பின் மீதான தனது அனுபவத்தை வி.ரி.இளங்கோவன் கூறினார். அந்நூலிற்கான அனுபவ முன்னோட்டமாக சீனக் கொம்யூனிசக் கட்சியின் தோற்றம், அதன் பின்னணியில் வடபகுபதியில் மேற்கொள்ளப்பட்ட சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் தொடங்கிய வரலாற்றையம் தனது நேரடி அனுபவகங்ளூடாக விபரித்தார். சீனக்கொம்யூனிசக் கட்சிதான் தேசிய விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்ட அக்கால இஞைர்களுக்கு ஒரு ஊக்கசக்தியாக இருந்தது. அதிலும் குறிப்பாக வடமராட்சிப் பிரதேசம் இதில் முதன்மை பாத்திரம் வகித்தது. அது ஒரு எழுச்சிக்காலம். இவ்வாறான சூழலில் உள்வாங்கப்பட்டவர்களில் விசுவானந்ததேவனும் ஒருவர் என ஆரம்பித்து, இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள் என இலங்கையின் அரசியல் வரலாற்று அனுபவங்களுடன் விசுவானந்ததேவனின் அரசியல் நிலைப்பாட்டையும் தனது விமர்சனப்பார்வையில் முன்வைத்தார்.
காங்கேசந்துறை சீமந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட முதல் அனுபவம், அவருடன் இணைந்து மேற்கொண்ட கட்சிவேலைகள் என விசுவானந்ததேவனுடன் தனக்கிருந்த நெருக்கமான உறவின் அறிமுகத்தோடு இரயாகரன் தனது உரையை ஆரம்பித்தார். இந்த நூலை தொகுப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள் மீதே அவரது முதல் விமர்சனமாகவே இருந்தது. இலங்கை அரசை ஆதரிக்காதவர்கள் துரோகிகள் என்கின்ற பொதுவான அளவுகோலை கொண்டிருந்தவர்கள் இந்நூலின் தொகுப்பாளர்கள். விசுவிற்கும் எனக்குமான பல்வேறு முரண்பாடுகள் இருந்தது. இருப்பினும் 80 களின் பிற்பாடு இடதுசாரிய நோக்குநிலையிலான விசுவின் அரசியல் பங்கு மிக முக்கியமானது. இந்த தொகுப்பானது விசுவானந்தன் குறித்த ஒரு மேலோட்டமான தகவல்களால் மட்டுமே நிரப்பப்ட்டிருக்கிறது. விசுவானந்ததேவனுடன் நெருக்கமான பலரது நேரடி அனுபவங்களை தொகுப்பதற்கான ஆர்வத்துடன் இத்தொகுப்பு வெளிவரவில்லை. என்பதோடு விசுவானந்ததேவன் குறித்த இந்த தொகுப்பில் காணப்படாத ஒருதொகை தகவல்களை இரயாகரன் கூறினார். உண்மையில் இரயாகரனிடம் இருக்கும் தகவல்கள் இந்ததொகுப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். இவ்வளவு நேரடி தகவல்களை வைத்திருக்கும் நீங்கள் இவைகளை பதிவு செய்யலாமே என எம்.ஆர்.ஸ்டாலின் கேட்டதற்கு, அவரது வழமையான புன்னகையை சிந்தி பார்ப்பம்… என்றார்.
தமிழ் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய விடுதலைப்போராட்டத்திற்கான இயக்கங்களின் தொகை நிரம்பவே இருந்தது. இருப்பினும் கிழக்குமாகாணத்தை பொறுத்தவகையில் பிரதானமான ஐந்து இயக்கங்களின் பெயர்களே அறிமுகமாகியிருந்தது. இந்த ஐந்து இயக்கம் தவிர்ந்த ஒரு இயக்கமாகவும், அவ்வாறான ஒரு இயக்கத்தின் முக்கியஸ்தராக விசுவானந்ததேவன் இருந்ததை இந்த நூலினூடாகவே அறியக்கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் இந்த தொகுப்பு மிக முக்கியமானதே. மேலும் விசுவானந்ததேவனது தேசிய விடுதலைப்போராட்டத்தின் பங்களிப்பையும் அவரது செயல்பாட்டையும் அவதானிக்கும்போது அவர் தொடர்ச்சியாக ஒரு கட்சியில், விசுவாச மனநிலையில் இயங்கவில்லை. தொடர்ந்து தான் இணைந்துகொண்ட கட்சிகள், இயக்கங்களுடன் முரண்பட்டு, முரண்பட்டு நிலைப்பாடுகளை கடந்து வந்திருக்கிறார். இதை ஒரு வளர்ச்சி நிலையாகவே நான் பார்க்கிறேன் என எம்.ஆர்.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார். அத்தோடு விசுவானந்ததேவனுடன் அவர் சார்ந்த இயக்கத்துடனும் நேரடி அனுபவங்கொண்டிருந்த இரயாகரனுடன் இத்தொகுப்பாளர்கள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை எனும் கேள்வியையும் முன்வைத்தார். இந்த நூல்குறித்த நீண்டநேர கலந்துரையாடலில் வரதன், தேவதாசன். சோபாசக்தி, அசுரா, போன்றோர் கலந்துகொண்டனர்.
பிரான்சிஸ் அமல்ராஜ் அவர்களின் ‘கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்’ எனும் கட்டுரைத்தொகுப்பின் வாசிப்பின் அனுவபத்தை தேவதாசன் பகிர்ந்துகொண்டார். யுத்தம் முடிவடைந்த 2009 க்கு பின்பாக அறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய 38 கட்டுரைகளால் இத்தொகுப்பு நிரம்பியிருக்கின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி அனுபவங்கள் பெறப்பட்டு அதனூடாக அறிந்த தகவல்களையே இதில் தொகுத்திருக்கின்றார். இதில் தகவல் அறிந்து பிரயோகிக்கப்பட்ட மொழிப்பிரயோகம் வாசிப்பிற்கு கொஞ்சம் சிக்கலாகவே எனக்கிருந்தது. தமிழ்நாட்டு மொழியை பயன்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் விடயங்கள் சம்பந்தமாகவும், அதை எதிர்கொள்பர்களுக்கான பயிற்ச்சி ஆலோசனைகளை வழங்கும் விதமான கட்டுரையும் இத்தொகுப்பில் இருக்கின்றதென அறிமுகப்படுத்தினார்.
‘நடு’ சஞ்சிகையில் வெளிவந்த சிசிலி தர்சனின் ‘அசைவம்’: இக்கதையின் தலைப்பின் பொருளை இரண்டுவகையாகப் பார்க்கலாம். உணவு சார்ந்த பொருள்படவும், அசைவது என்பதாக பொருள்படவும் கருதிக்கொள்ளலாம். அந்த
வகையிலேயே இச்சிறுகதையின் உள்ளடக்கமும் இயங்குவதை நாம் காணலாம். என ‘அசைவம்’ சிறுகதை மீதான தனது பார்வையை நெற்கொழுதாசன் முன்வைத்தார். கதையின் கட்டமைப்பு உள்ளடக்கம் சார்ந்த விடயங்களை பகிர்ந்துகொண்டதோடு படைப்பாளியின் மொழிப்பிரயோகத்தை சிலாகித்தும் பேசினார் ‘புலவர்’ நெற்கொழுதாசன்.
இக்கதையானது சாதியத்தை மையமாக கொண்டு இயங்கியதால் இதன் மீதான உரையாடலும் நீண்டுகொண்டே சென்றது. உரையாடலில் கலந்து கொண்டவர்கள்: தர்மினி, தர்மு பிரசாத், தேவதாசன், வரதன், விஜயன், வி.ரி.இளங்கோவன், அசுரா.மற்றும் தோழர்களாகும்.
தொகுப்பு *அசுரா