3/30/2017

வரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தின் கந்தன் கருணைப் படுகொலை 30 வது வருட நினைவுதினம்

March 30, 1987 ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஓர் கரிய நாள்.Image may contain: 7 people, people standing, text and outdoor போராளிகளின் இரத்தத்தினால் எழுதப்பட்டு ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை கேள்விக்குட்படுத்திய நாள்.
Image may contain: plant, tree and outdoor

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் யாழ். இந்துக் கல்லூரிக்கும் யாழ். மகளிர் கல்லூரிக்கும் இடையே அமைந்திருந்தது ஒரு வீடு. அது பல அறைகளைக் கொண்ட பிரமாண்ட மாடி வீடு. இந்த வீட்டில் 64 ஈழ விடுதலைப் போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் அநேகர் ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள்.
இவர்களை சிறை வைத்தவர்கள் இலங்கைப் படைகள் அல்ல. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகிறோம் எனக் கூறிக்கொண்ட விடுதலைப் புலிகள். இந்த முகாம் சத்தியா என்ற புலிகளின் பொறுப்பாளர் ஒருவனின் கீழ் இருந்தது.

இங்கே நடந்த படுகொலைகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவன் பெயர் அருணா. இவன் 1986 இல் நடந்த கைதிகள் பரிமாற்றத்தினூடாக புலிகளின் தளபதி கிட்டுவினால் அரச சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்.
இந்த அருணா என்பவன் பின்னர் இந்தியப்படை காலத்தில் நடந்த சுற்றிவளைப்பின் போது யாழ் குருசோ விதியில் வைத்து கொல்லப்பட்டான்.
சத்தியா தான் செய்த கொலைகளினால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் புலிகளிலிலிருந்து ஒதுங்கி போதைப் பொருட்களுக்கு தன்னை அடிமையாகிக் கொண்டான்.

ஆம் .. அது ஒரு இரவு. கடிகாரத்தின் முற்கள் மணி 9தைத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. தங்கள் உயிர்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் பறிக்கப்படப்போவதை அறியாது அந்தப் போராளிகள் தங்கள் கடைசி உணவை உண்டு கொண்டிருந்தனர்.


தீடீரென அம்முகாமை நோக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன. முதலில் அது 'மிஸ் பயர்' என்றுதான் போராளிகளில் ஒருவன் எண்ணினான். அம்முகாமில் நீண்ட நாட்கள் இருந்ததில் தாம் கொல்லப்படுவோம் என்று அவர்கள். எண்ணியிருக்கவில்லை. ஆனாலும் எதோ ஒரு உள்ளுணர்வால் உந்தப்பட்ட அந்தப் போராளி சமையல் அறையை அண்டிய முடுக்கொன்றில் மறைந்து கொண்டார்.
அவ்வேளை அருணா என்பவன் தனது உதவியாளர்கள் சகிதம் மூர்க்காவேசத்துடன் உள்ளே புகுந்தான். அவன் வந்த வேகத்தில் வலதுபுற மூலையிலிருந்த அறையில் அடைத்து வைத்திருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டான்.
அருகில் இருந்த மாடிப் படிகளால் ஏறி மேல் மாடிக்குச் சென்றான். மேல் மாடிக்குச் சென்ற அருணா அங்கிருந்தவர்கள் நோக்கி வெடிகளைத் தீர்த்துவிட்டு திரும்பி இறங்கி வந்து இடதுபுற அறைக்குள் இருந்தவர்களை நோக்கிச் சுட்டான். சிறிது நேரம் மேலும் கீழுமாக தொடர்ந்து சுட்டுவிட்டு அங்கிருந்து செல்கின்றான்.
குண்டடிபட்ட போராளி அஜித் என்பவருக்கு வயிறு பிரிந்து குடல் வெளியே தள்ளவும் பயங்கரம்மாக அலறத் தொடங்கினார். வலப்புற அறையில் இருந்த ரெஜி என்ற போராளி நிலையும் அதுதான். யாருக்கும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. யார் யார் சுடுபட்டனர். யார் யார் கொல்லப்பட்டனர் என்பதும் தெரியவில்லை.

அந்தப் போராளியும் வேறு ஒரு சில போராளிகளும் வெளிக்கதவால் தப்புவதற்காக ஓடினார்கள். காவலுக்கு நின்ற புலிகள் 'யாரடா' என்று கத்தியபடி இவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர். ஓடி வந்தவர்கள் வெடிபட்டு கதவருகே விழுந்தனர். அவர்களோடு சேர்ந்து அந்தப் போராளியும் வெடிப்பட்டவன் போல் விழுந்து கொண்டார்.

அந்தப் போராளி மேல் விழுந்த கங்கா என்ற போராளிக்கு தலையில் சூடுபட்டு மூளை சிதறி இருந்தது. இரத்தம் வெள்ளம் போல் படர்ந்தது. அந்தப் போராளி அப்படியே இறந்தவர்களோடு இறந்தவர்போல் சரிந்து கிடந்தார். காவலுக்கு நின்ற புலிகள் எஞ்சியவர்களையும் இஷ்டப்படி சுட்டுக் கொலை செய்தனர். அந்தப் போராளியின் மேலே இருந்த மற்றைய போராளிகளின் இறந்த உடல்களும் இரத்தமும் அந்தப் போராளியை அவர்களிடம் இருந்தது மறைத்துக் கொண்டது.

அப்படிச் சடலங்களின் கீழ் புதைந்து கிடந்த அந்தப் போராளிக்கு வெடிப்பட்டவர்களின் ஓலங்களும் முனங்கல் சத்தமும் கேட்டபடி இருந்தது. உயிர் பிரிகையில் ஒவ்வொருவரது மரண ஓசையும் அடங்கிச் செல்வது கேட்டது. அந்த ஓசை, குரல்வளை அறுபட்ட ஒரு ஆட்டின் கதறல் போல், மனிதக் குரலேயற்ற வேறோர் பயங்கர குரலாக ஒலித்தது. மூச்சிழுத்து ஓய்வதைக் கேட்கும்போது அவர் உடல் அச்சத்தால் சில்லிட்டு நடுங்கிப் போனது.
போராளி கதிரும் வேறு ஒரு போராளியும் மலசல கூடத்தின் மேல் இருந்த தட்டு ஒன்றுக்குள் ஏறிப் பதுங்கிக் கொண்டனர். அருணா சுட்டு, அதன்பின் காவலுக்கு நின்றவர்களும் சுட்டு ஓய்ந்திருக்க சத்தியா என்பவன் வந்தான். அவன் அரை குறையாய் உயிரோடு இருந்தவர்களை சுட்டுக் கொன்றான். பின்னர் மலசல கூடத்திற்கு சென்று அங்கே ஒளிந்திருந்தவர்களையும் கண்டு பிடித்து 'இறங்குங்கடா கீழ' என்று கத்தியபடி சுட்டுக் கொன்றான்.
இவ்வேளையில் வாகனச் சத்தம் கேட்கின்றது. வெளியே சென்ற அருணா திரும்பி வந்தான். அவன் வேறொரு முகாமில் வைத்திருந்த போராளிகள் ராசிக், பாப்பா ஆகிய இருவரையும் இழுத்து வந்தான். வழமையாக இவ்விருவரையும் அருணாவும் சத்தியாவும் இம்முகாமுக்கு கொண்டு வந்து மிக மோசமாகத் தாக்கி விசாரணை செய்து விட்டு திரும்ப கூட்டிச் செல்வது வழக்கம்.
இவர்களில் போராளி ராசிக் மிகவும் நெஞ்சுறுதி கொண்டவர். எவ்வளவு அடித்தாலும் "நானும் ஆம்பிளைதாண்ட, போராட்டத்தாண்டா வந்தவன், சாவுக்கு பயப்படமாட்டன், நீ கொல்லுறதெண்டா கொல்லு" என்று கத்துவார். அவரை இனியில்லை என்றளவுக்கு அடித்து நொருக்குவார்கள்.
இத்தடவை அழைத்து வரப்பட்டபோது முகாமில் இருந்த நிலைமையைப் பார்த்ததும் தமக்கு என்ன நேரப்போகின்றது என்பது அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும் "உங்களால் என்ன செய்ய முடியும் சுடத்தாண்டா முடியும், நீங்கள் அழிஞ்சுதாண்டா போவியல் எங்கள அவிழ்த்து விட்டுப் பாருங்கடா" என்று கத்தி இழுபறிப்படுகின்றபோது வெடிச் சத்தமும் கேட்கின்றது அவர்கள் சத்தமும் அடங்கிப் போகின்றது.
அதையடுத்து அங்கு மெளனம் நிலவியது. அநேகமாக அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இரத்தம் அந்தப் போராளியின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பரந்து இருந்தது. இரத்த வாடையும் வெடிமருந்து நாற்றமும் எங்கும் நிறைந்திருந்தது.
அருணாவும் சத்தியாவும் இறந்த உடல்களை ஏற்றிச் செய்வதற்காக வாகனம் எடுத்துவர வெளியே சென்றிருக்க வேண்டும். சிறுது நேரத்தில் தலை நிமிர்ந்து பார்த்த அந்தப் போராளி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்து, பதுங்கியபடி சமையல் அறைப்பக்கமாகச் சென்று பின்புறமாக இருந்த சிறிய வாசல் கதவால் வெளியேறி அடுத்த வீட்டு வளவுக்குள் ஏறி விழுந்து ஊர்ந்து தப்பிச் செல்கின்றான்.
சில வருடங்களின் பின்னர் இந்தப் போராளிகள் கொலை செய்யப்பட்ட வீட்டில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் வசித்து வந்துள்ளார். அவர் சிலரிடம் "இன்னும் எனக்கு இங்கே நடந்த படுகொலைகள் பற்றிய பிரமை இருக்கிறது. இறந்தவர்களெல்லாம் இங்கே உலாவுவது போன்று உணர்கின்றேன். நான் சாந்தி - பரிகார பூசை செய்துவிட்டு குடியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அந்தப் போராளியின் மனக் குமுறலில் இருந்து வெளியே சிதறிய அழிக்க முடியா அவன் நினைவுகளின் ஒரு சிறு துளியே இப்பதிவாகும்.

நன்றி தோழர் நரேஸ்

0 commentaires :

Post a Comment