அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இந்தியாவினதும் அதீத தலையீட்டினை கடந்த இரண்டு வருடங்களுக்குள் அதிகரித்துள்ளன.
இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்கள், அந்நிய ஏகாதிபத்தியங்களின் அதிகரித்துவரும் தலையீடுகள் என்பன புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தேசிய நலனில் அக்கறை கொண்டோரை விசனம் கொள்ளச் செய்துள்ளன. பொருளாதார மேம்பாடுகள் குறித்து நல்லாட்சி என்ற மகுடத்துடன் மக்களுக்கு அளிக்கப்பட வாக்குறுதிகளை அரசாங்கத்தால் காப்பாற்ற முடியவில்லை. இலங்கையில் வாழும் பெரும்பான்மையான சாமான்ய உழைக்கும் மக்கள், மத்தியதர அரச உத்தியோகத்தர்கள் இன்றைய அரசின் மீது நாளுக்கு நாள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள். மொத்தத்தில் இலங்கையின் எதிர்க்கலாம் அச்சமூட்டுவதாக மாறி வருகிறது.
புதிய அரசினால் நவீன தாராளவாத பொருளாதார கோட்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற. சமூக நலனை அடிப்படையாகக் கொண்ட பொதுச் சேவை துறைகள் தனியார் மயமாக்கல் மூலம் இழக்கப்பட்டு வருகின்றன. அதிக இலாபமீட்டலை மட்டுமே இலக்காக கொண்ட வெளிநாட்டு வியாபார நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன. இலங்கையின் சமூக அரசியல் பொருளாத நடவடிக்கைககளை பங்கு போடும் இந்திய மேற்கத்தேய நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தேற, மறுபுறம் இலங்கை மக்களின் இறையாண்மையைக் கொண்ட நாடாளுமன்றத்தின் அரசியல் சட்டவாக்கத்திலும் மேற்குலக நாடுகள் ஆலோசனை வழங்குகின்றன. மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றன, பிரித்தானிய, அமெரிக்க சட்ட வல்லுனர்களின் அரச சட்டவாக்கத்தின் மீதான தலையீடு மிக நாசூக்காக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார உதவிகளை வழங்குவதனூடாக இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி புரிந்த சீனாவின் மீதான எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்த மேற்குலக ஏகாதிபத்தியங்களின் தரகு முதலாளிகள் இன்று சீனாவிடம் தவிர்க்க முடியாமல் தஞ்சமடைந்திருக்கிறார்கள். மேற்குலக ஏகாதிபதியங்களே சீனாவின் உதவியை நாடி நிற்கின்ற ஒரு யதார்த்த உலக பொருளாதார யதார்த்தம் இன்று நிலவுகிறது.
உலக வங்கியின் கடன் தொகை பல்வேறு நிபந்தனைகளுடன் அதிகரித்து செல்வதனையும், அதன் பயனாக மீள் செலுத்தும் மக்கள் மீதான வரிச் சுமை யும் அதிகரித்து செல்வதனையும் அவதானிக்க முடிகிறது. நவ தாராளவாத பொருளாதாரம் வெகு சிலரின் வருமானத்தை அதிகரித்து பாரிய வருமான இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் நலனைக் கொண்டு அரசினால் கட்டுப்படுத்தப்படும் முதலாளித்து முறைமைக்கு எதிராக கட்டுப்பாடற்ற இலாப நோக்கம் கொண்ட முதலாளித்துவ முறைமை முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் சாமான்ய உழைக்கும் மத்தியதர இலங்கை மக்களின் எதிர்காலம் அச்சமூட்டுவதாக உள்ளது.
ஆகவேதான் இலங்கையின் மேற்குலக ஏகாதிபத்திய அல்லது அயலில் உள்ள வல்லாதிக்க நாடுகளின் பொருளாதார சமூக, இறையாண்மையில் தலையீடு செய்யும் மேலாண்மையில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு இன்று இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தின், விலை போகாத இடதுசாரி முற்போக்கு சக்திகளின், ஏகாதிபத்திய எதிர்ப்பணியினரின் தேர்வாக உள்ளது. அந்த வகையில் புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் இலங்கை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தலையீடற்ற மக்களின் இறைமையை மதிக்கின்ற ஐரோப்பாவில் வாழ்கின்ற முற்போக்கு சகதிகள், இடதுசாரிகள், ஏகாதிபத்திய எதிப்ப்பாளர்களை ஒருங்கிணைத்து அதையொத்த இலங்கை வாழும் மக்கள் சக்திகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தார்மீகக் கடமை எம்மீதும் உள்ளது என்று உணர்கிறோம்.
இந்த பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு வாத தேசிய நலனில் அக்கறை கொண்ட சிலரின் முயற்சியால் முற்போக்கு புலம்பெயர் இலங்கையர் கூட்டணி (மு.பு.இ.கூ ) உருவாக்கப்பட்டுள்ளது.
எமது கூட்டணிபின்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் தேசங்களிலும் அவ்வாறான கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கையிலும் செயற்படும் சக்திகளுடன், அரசியல் கடசிகளுடன் தேவை ஏற்படின் இணைந்து செயற்படுவது அவசியம் என்று நம்புகிறோம்.
1. இலங்கை ஒரு சுயாதீன இறைமையுள்ள நாடு என்பதும். அமெரிக்க ஏகாதிபத்தியம் உட்பட ஏனைய மேற்குலக ஏகாதிபத்தியங்களின் நவ குடியேற்ற வாத கொள்கைகளை எதிர்த்தல், வெளிநாட்டு இராணுவ தளங்களை இலங்கையில் அமைப்பதை எதிர்த்தல்!
2. அந்நிய நாட்டுக்கு அடிமைப்படாத உண்மையான கூட்டுச் சேரா வெளிநாட்டு உறவினை மேம்படுத்த கோரிக்கை விடுத்தல்.
3.நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கவும், வினைத்திறன் மிகுந்த ஒரு ஜனநாயக மக்கள் வலுமிக்க அரசை உருவாக்க திடம் கொள்ளல், அதிகாரங்களை கிராமிய மட்டங்களில் மக்களை வலுப்படுத்தும் வகையில் பகிர்ந்தளிக்கப்படவும் அதற்கான பொறிமுறையை ஏற்படுத்தவும் வலியுறுத்தல்.
கலப்பு பொருளாதார முறைமையின் ஊடாக அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் பொருளாதார முறைமையை அறிமுக்கப்படுத்தி சோசலிச பொருளாதாரத்தை அதன் விழுமியங்களை மக்கள் நலன் சார்ந்த வகையில் செயற்படுத்த வற்புறுத்தல்.
சமூக அபிவிருத்தி அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி செய்யப்படுவதை உறுதி செய்தல். சுகாதார திட்டங்களை இலவசமாகவும் வினைத்திறன் கொண்டதாகவும் செயற்படுத்த பாடுபடுதல்.
சேவைத்துறையினை மக்கள் நலன் பயக்கும் வகையில், அரச கண்காணிப்பினை உறுதி செய்யும் வகையில், ஊழலை ஒழிக்கும் வகையில் மிகவும் உறுதியான சுயேச்சையான பொறிமுறையை அறிமுகப்படுத்த கோரிக்கை விடுத்தல்.
தொழிலார்கள், அரச ஊழியர்களின் கவுரவத்தையும் நீதியான ஊதியத்தையும் உறுதி செய்யும் விதத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைகளை பின்பற்றும் வகையில் பனியாளர் சட்டங்களை உறுதி செய்வதில் அக்கறை காட்டுதல்.
விவசாயம், கிராமிய அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறைகளை அவை பற்றிய சுதேசிய மக்களை மேம்பாட்டின் அடிப்படையில் முன்னெடுத்தல்.
சமூக நீதியின் அடிப்படையில் சகல மக்களினதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் சட்டவாக்கங்களை உருவாக்க பாடுபடுதல்.
நவீன தொழிநுட்ப பயன்பாட்டினை மக்கள் நலன் சார்ந்த உள்நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தல். விஞ்ஞான ஆய்வுகளை ஊக்குவித்தலும் அவற்றின் மூலம் அடையப்படும் பயன்களை சகல மக்களும் அனுபவிக்கும் வகையில் சமூக நலனோம்புத் திட்டங்களை முன்னெடுப்பதை உறுதி செய்தல்.
எனவேதான் மேற்சொன்ன கருத்தோட்டத்தின் அடிப்படையில் செயற்பட நாங்கள் முன் வந்துள்ளோம். மேலும் ஐரோப்பாவெங்கும் வாழும்,எமையொத்த அரசியல் கருத்துக்களுடன் இலங்கையை தாயகமாகக் கொண்ட தமிழ், சிங்கள, முஸ்லீம், பறங்கிய மக்களை ஒன்றிணைத்து பரந்துபட்ட அளவில் ஒரு கூட்டணி ஒன்றினை நிறுவ முயற்சித்துள்ளோம்.அந்த வகையில் எமது அமைப்பு நேரடியாக இலங்கையின் உள்ள முற்போக்கு சக்திகளுடனும் இடசாரி அமைப்புக்களுடனும், ஏகாதிபத்திய பொருளாதார அரசியல் ஆக்கிரமிப்புக்கும் அடக்கு முறைக்கும் எதிராக செயற்படும் அமைப்புக்களுட னும் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளோம். எனவே இந்த அமைப்பில் இணைவதற்கும் எமது பணியில் உங்களை பங்காளிகளாக ஆக்கிக் கொள்ளவும் இந்த அறிவித்தலை வெளியிடுகிறோம்.
மேற் சொன்ன கொள்கை அடிப்படையில் இந்தக் கூட்டணியில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் முழுப் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம், அவர்கள் சார்ந்த அல்லது ஆதரிக்கின்ற அரசியல் கடசி மற்றும் ஏனைய அரசியல் சார்ந்த மற்றும் சாராத அமைப்புக்களின் பெயர் விபரங்களுடன் admin@pslda.org எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
0 commentaires :
Post a Comment