1/07/2017

தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள்
ஒற்றையாட்சி முறையை ஏற்க முடியாது. சமஸ்டி முறையே வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முக்கியம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பில் ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கையோடு கருத்து வெளியிட்டு வருகின்றார்.
ஆனால், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முரணான வகையில் அரசியல் தீர்வு தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. .
இதனால் அரசாங்கத்தின் மீதும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மீதும் சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
இது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டபோதே, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வில் முக்கியமாக இடம்பெற வேண்டிய தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து அரசிடம் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதால், புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவில் இருந்து கூட்டமைப்பு விலக வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
ஆயினும், அத்தகைய நடவடிக்கை இன்றைய சூழலில் பொருத்தமற்றதாக இருக்கும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் முஸ்லிம் மக்களிடமிருந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதனால், மாகாண இணைப்பு விடயம் கடினமாக இருக்கின்றது என்பதும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் ஆவலை, அரசியல் தீர்வில் புறந்தள்ளிவிட முடியாது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வுக்கான முயற்சியில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்

0 commentaires :

Post a Comment