- கவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயலாத துயரத்தை அளிக்கிறது
- என்னுடைய இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர் இன்குலாப்
- என்னுடைய முதல் நூல் 'எதுகவிதை' யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரை நான் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள் பாரதிக்குப் பின் சம கால அரசியலில்... அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
- அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்.
- சோழர்கால நிலவுடமைக் கொடுமையைத் தோலுரித்த இன்குலாப்பின் ‘ராஜராஜேச்வரீயம்’ எனும் கவிதை அன்றைய தி.மு.க அரசால் பாடநூலிலிருந்து நீக்கப்பட்டபோது கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் ஊடாக நாங்கள் எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தோம்.
- தஞ்சையில் ஏகப் பெரிய விளம்பரங்களுடன் ராஜராஜ சோழன் சிலையை கருணாநிதி அரசு திறந்தபோது இன்குலாப்பின் அந்தக் கவிதையை சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு நானும் மன்னை உ.இராசேந்திரனும் தஞ்சை வீதிகளில் வினியோகித்துத் திரிந்தபோது காவல்துறை எங்களை வலைவீசித் தேடியது.
- எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் இன்குலாப். அப்போது நான் தஞ்சையில் வசித்து வந்தேன். சென்னை வரும்போதெல்லாம் தவறாது ஜாம்பசார் ஜானிஜான் தெருவில் இருந்த அவரது வீட்டிற்குச் செல்வேன். முதல் முறை நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். என்னை நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு அவர் கீழே சென்று குழாயில் நீர் பிடித்துச் சுமந்து வந்த காட்சி இன்னும் நிழலாய் என் மனதில்……
- சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற் பெயரைக்கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
- ஈழப் போராட்டம் மேலெழுந்தபோது அவர் முழுமையாக எந்த விமர்சனகளும் இன்றி அதை ஆதரித்தார். தமிழ்த் தேசிய உணர்வுடன் அவர் செயல்பட்ட காலம் அது.
- கடந்த சுமார் 20 ஆண்டுகளாகவே அவர் நோய்வாய்ப்பட்டு , இறுதிப் பத்தாண்டுகள் அதிக இயக்கமின்றி முடங்க நேரிட்டது. மென்மையும், அன்பும், கனிவும் மிக்க அவரது குரலையும், புன்னகை தவழும் அவரது முகத்தையும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை எல்லோரும் இழக்க நேரிட்டது.
- இனி அவரை என்றென்றும் பார்க்க இயலாது என எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. நெஞ்சம் நெகிழ்கிறது.
- “இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
புதிய பொருள் பெறுகின்றது. - என் காலத்துப் புரட்சிக் கவிஞனுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்
நன்றி முகநூல்
0 commentaires :
Post a Comment