12/24/2016

இலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம்

சிங்கள ஜுரர் சபையின் முன் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளார்.
வெள்ளியன்று நள்ளிரவு வரையிலும் இந்த வழக்கின் ஜுரர் சபை நடத்திய நீண்ட ஆலோசனைகளின் பேரில் எதிரிகளை விடுதலை செய்யும் முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.25 மணிக்கு வழங்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறு நள்ளிரவு வேளையில் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் ஆறு பேருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது இறந்துவிட்டார். இதனையடுத்து. எஞ்சிய ஐந்து பேருக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் முன்னாள் கடற்படைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களாவர், ஏனைய மூவரும் கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதமாக நீடித்த ரவிராஜ் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் வெளியிடப்பட்ட பல தகவல்கள் பெரும் பரபரப்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டி, மணிங் டவுண் பகுதியில் அவருடைய இல்லத்திற்கு அருகில் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஆயுததாரிகளினால் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

0 commentaires :

Post a Comment