12/16/2016

வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

Résultat de recherche d'images pour "அதாஉல்லாஹ்"நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது. வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றன என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லாஹ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புத்தருடைய சிலை உடைக்கப்பட்டமைக்கு எதிராக வாயைத் திறக்காத பொதுபலசேனாவினர், முஸ்லிம்களை மட்டும் ஏன் திட்டிக் கொண்டு திரிகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்குமாறும், அவர் கோரிக்கை விடுத்தார்.

‘சுதந்திர கிழக்கு’ எனும் தலைப்பில் கிழக்கின் தனித்துவத்துக்காக நடத்தப்பட்டு வரும், விழிப்புணர்வுக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை மூதூரில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
“இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைபெற்றபொழுது நமக்கென்று பலமான ஒரு கட்சி இருக்கவில்லை. நமக்கென்று ஒரு குரல் இருக்கவில்லை. மிக இலகுவாக கிழக்கு முஸ்லிம்களை அவர்கள் வடக்குடன் இணைத்து எமது பலத்தைக் குறைத்தார்கள். அடிமைச் சாசனம் எழுதினார்கள். இதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே நாங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைப் பலப்படுத்தனோம்.
விடுதலைப் புலிகளோடு நோர்வேயும், ரணில் விக்ரமசிங்க வன்னியில் ஒப்பந்தம் செய்து எங்களை அடிமையாக்கினார்கள். அது மிகவும் பாரதூரமான அடிமை சாசனம் என்று எல்லோரும் சொன்னார்கள். அந்த ஒப்பந்தம் முஸ்லிம்களை சிறு குழு என்று குறிப்பிட்டது.
வடக்கிலிருந்து கிழக்கு மாகாணத்தை பிரிக்க வைத்தோம். இப்போதுதான் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். பழைய காலங்களைப்போல் தமிழர்கள் எங்களை பார்க்கின்றார்கள் சந்தேகம் இல்லாமல் வாழ்கின்றோம்.

கிழக்குத் தமிழர்களும் முஸ்லிம்களும் உறவினர்களைப் போல், இரண்டறக் கலந்து உறவோடு வாழ்ந்தோம். இங்குள்ள தமிழ் மக்களிடம் வட மாகாணத்தவர்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தினார்.
வடக்கையும் – கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களை அடிமைகளாக மாற்றியமையினால், கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்குள்ளும் தமிழ் பேரினவாதம் உருவானது. மூதூரில் இருந்த தமிழ் மக்களிடையே இருந்து தமிழ் பேரினவாதம் உருவானது. ஆலையடிவேம்பில் இருந்து உருவானது. பாண்டிருப்பில் இருந்து உருவானது. இவை முதலில் இருக்கவில்லை.
வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் வேறாகப் பிரிக்கப்பட்டால்தான், தமிழர்களும் முஸ்லிம்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூறினோம்.

கிழக்குக்கு  ஒரு மாகாண சபை உருவானது. அந்த சபையில்  முதல் முறையாக, தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு நாங்கள் உடன்பட்டோம். பிள்ளையானை முதலமைச்சராக்கினோம். உரிமை வேண்டும் என்று களத்திலே இருந்து அவர்கள் ஆயுதமேந்திப் போராடியவர்கள். பின்னர், அதிலிருந்து வெளியேறிவந்து அரசியல் நீரோட்டத்திலே கலந்தார்கள். அப்போது, அவர்களுக்கு முன்னுரிமை அவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற நாங்கள் எண்ணினோம். அவர்களை கௌரவித்தோம்.

இரண்டாம் முறை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் ஏ மஜீத் முதலமைச்சரானார். மூன்றாவது முறை முஸ்லிம் காங்கிரசுக்குள் இருக்கின்ற ஒரு சகோதரன் முதலமைச்சராகியுள்ளார். அதைப்பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. முஸ்லிம் சமூகம் விரும்பாத ஒரு விடயத்தை தமிழர் சமூகம் செய்யவோ, தமிழர் சமூகம் விரும்பாத ஒன்றை முஸ்லிம் சமூகம் செய்வதற்கோ முடியாதவாறு ஒரு கூட்டு நிலை – கிழக்கில் உருவாகியுள்ளது.

ஆகவே, ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. உலகம் அழிகின்ற வரைக்கும் இந்த நிலை இருந்தால் மாத்திரம்தான் இங்குவாழ முடியும். வடக்கிலே இருந்து எங்களை அனுப்பிவிட்டார்கள். அந்த மக்களுக்க மீள் குடியேற இப்போது விருப்பமில்லை. அவர்களின் வாழ்விடங்கள் அனைத்தும் காடாகிக் கிடக்கின்றன.

அரசியல் அமைப்பை மாற்றுகின்ற ஒரு சபையாகவும், தேர்தல் முறையை மாற்றுவதற்கான ஒரு சபையாகவும் நாடாளுமன்றம் மாற்றப்பட்டுள்ளது.  இந்த சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படவேண்டியுள்ளது. அதற்காக, முஸ்லிம் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டியுள்ளது.
நாங்கள் இங்கு வாக்கு கேட்டுவரவில்லை. நாளை தேர்தலுமில்லை. நாங்கள் செய்த சேவைகளைச் சொல்லவும் இங்கு வரவில்லை. இது – நாட்டுக்கும் நமக்கும் முக்கியமான ஒரு காலமாகும். சிறுபான்மையினருக்கு மாத்திரமன்றி, சிறுபான்மையிலும் சிறுபான்மையாகவுள்ள முஸ்லிம்களுக்கு ஒரு முக்கியமான காலமாகும். இந்தக் காலத்தில் நாம் அவதானமாக இருக்கவேண்டும். அதற்காக, உங்களை விழிப்பூட்டுவதற்காகவே நாங்கள் இங்குவந்துள்ளோம்.

நாடாளுமன்றில் கட்சிகள் இருக்கின்றன. அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அப்படியிருக்க, நாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்று நீங்கள் நினைக்கலாம். மிகத்தெளிவாக ஓன்றைச் சொல்கின்றேன். அதனை விளக்குவதற்காகவே நோர்வேயினுடைய ஒப்பந்தத்தைப் பற்றிச் சொன்னேன். இப்போதும் நமது பிரதமருடைய ஆலோசகர்களாக நோர்வேகாரர்கள்தான் இருக்கின்றார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக, தேர்தல் முறையிலே மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளனர். இதன் பின்னணியிலும் நோர்வேக்காரர்கள்தான் இருக்கின்றார்கள்.



அண்மையில் யாழ்ப்பாணத்தில் புத்தருடைய சிலையை உடைத்திருக்கிறார்கள். அந்த விடயத்துக்கும் பொதுபலசேனா வாய் திறக்கவில்லை என்றால் இதற்கு அர்த்தம் என்ன?

யாரோ எல்லாம் வந்து நமது உணர்ச்சிகளை அவர்களுக்கு லாபகரமாக பாவித்துவிட்டுச் செல்கின்றார்கள். வெளிநாடுகளும், உள்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களும் அதனைத்தான் செய்கின்றார்கள். புத்தரின் சிலை உடைக்கப்பட்டமைக்கு எதிராக ஏன் பொதுபலசேனா பேசவில்லை என்பதனை சிந்தியுங்கள். அரசியல் மாற்றங்களுக்கும் வேறுவேறு தேவைகளுக்குமாக, வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக  பாவித்திருக்கின்றார்கள்.
நாளை இந்த நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது, வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றனவோ என்கின்ற அச்சம் தோன்றுகின்றது.

0 commentaires :

Post a Comment