- பாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான சிங்களத்திலான நேற்றைய உரையை பல தடவைகள் கேட்டேன். உண்மையில் சிங்கள மக்களுக்குப் புரியும் வகையில் மிகத் தெளிவாக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்திருந்தார்.
உரையின் மிகச் சுருக்கமான பதிவு இது.
"மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு காலத்தில் கொள்கையொன்று இருந்தது. ஐந்து அம்சப் பிரிவினை அது. அதில் ஐந்தாவது பிரிவாகவே நாங்கள் இருந்தோம். எங்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்த கட்சியொன்றின் தலைவர் எமது மக்களுக்காக பாராளுமன்றத்தில் பேசுவதையிட்டு மதிப்பளிக்கிறோம். அந்த கொள்கைகளை மாற்றிக்கொண்டு எமது மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் பேசுகின்றமை வரவேற்கத்தக்கது.
எமது மக்களின் பிரச்சினைகளை பேசும் போது இருக்கும் உணர்வு, அந்தப் பிரச்சினைகளை தீர்க்கும்போது இல்லை என்பதே கவலையான விடயமாக இருக்கிறது.
இலங்கையில் ஆகக்குறைந்த சம்பளமாக 10ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் பெருந்தோட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு மட்டும் வெறும் 6ஆயிரம் வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்?
பெருந்தோட்டங்களில் மாத்திரம் தோட்டப்புற வைத்தியசாலைகள் என்ற பெயரில் வைத்தியசாலைகள் இயங்குகின்றன. அங்கு எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள் இல்லை. உலகத்தில் எந்த இடத்திலும் இல்லாத வகையில் பெருந்தோட்ட வைத்திய உதவியாளர்களே வைத்தியம் செய்கிறார்கள். இந்த வைத்தியசாலைகளுக்கு ஒரு சதமேனும் அரசாங்கம் பணம் வழங்குவதில்லை. ஏன் இந்த வேறுபாடு?
எங்களுக்கு என்று தனியான குடிநீர் திட்டம் இல்லை. நாம் எப்போதும் சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்தியது கிடையாது.
தோட்டப் பாதைகள் என தனியாக இருக்கின்றன. அவை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டவை அல்ல. மாகாண சபைகளுக்கு உட்பட்டவையும் அல்ல. அந்த தோட்டப்பாதைகளை தோட்ட நிர்வாகமே கண்காணிக்க வேண்டும். அதனால் மிக மோசமான நிலையில் பாதைகள் உள்ளன.
ஏனைய ஊழியர்களை போல அரசாங்கத்தினால் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தமிடப்படுகிறது. அதுவும் வீதிக்கு இறங்கி, கோஷமிட்டு, போராட்டம் நடத்தியே ஒரு ரூபாவோ, இரண்டு ரூபாவோ அதிகரிப்பை தொழிலாளர்கள் பெறுகிறார்கள்.
இதற்கு காரணம் என்ன? தேசிய நீரோட்டத்தில் நாம் இணைத்துக்கொள்ளப்படவில்லை. எமக்கு பல்வேறு தடைகள் உள்ளன. அவற்றை தாண்டியே நாம் வெளியில் வர வேண்டியிருக்கிறது. எம்மால் முடியும். இங்கு பாராளுமன்றத்தில் தமிழில், சிங்களத்தில், ஆங்கிலத்தில் எமது மக்களின் குறைகளை எடுத்துச் சொல்கிறேன். இதுபோல என்னுடைய தம்பி, தங்கையர்கள் ஏராளமானோர் மலையத்தில் இருக்கிறார்கள்"
0 commentaires :
Post a Comment