11/26/2016

தோழரே -   எம்  சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்

Résultat d’images pour fidel castroகியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90. 


"கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.

ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு கம்யூனிச பாதையில் மக்கள் நல அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.

மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.
அவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலிருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த காஸ்ட்ரோ பெப்ரவரி 24. 2008 ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.
உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ரஷ்யா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஷ்யாவுக்கு சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
15 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய கொலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் வந்த கியூபா, 1895 இல் சுதந்திரமடைந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதிக்கத்துக்குட்பட்ட பொம்மை அரசுகளால் ஆளப்பட்டு வந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவு நாடுகள் 'வாழைப்பழக் குடியரசுகள்' என அழைக்கப்பட்டன. அமெரிக்க வாழைப்பழக் கம்பெனிகள் இந்நாடுகளில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்து வாழைப்பழத் தோட்டங்களைப் பேணி வந்தன. அவ்வரசுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை பொருந்தியதாக இக்கம்பெனிகள் இருந்தன. இந்நாடுகளில் உள்ள மக்கள் மோசமான சுரண்டலுக்கு ஆளாகினார்கள். கியூபாவும் இதற்கு விலக்கல்ல.
1933 இல் கியூப ஜனாதிபதியாக இருந்த ஜெராடோ மச்சாடோவிற்கு எதிரான இராணுவப் புரட்சியில் முக்கிய பங்காற்றிய பல்ஜென்சியோ பட்டீஸ்டா இராணுவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் ஊடாக தொடர்ச்சியாக தெரியப்பட்ட ஜனாதிபதிகளை ஆட்டிப் படைப்பவராக விளங்கினார். 1940 இல் ஜனாதிபதியாகிய பட்டீஸ்டா தனது பதவிக்காலம் முடிந்தவுடன் 1944 இல் அமெரிக்காவிற்குச் சென்றார். 1952 இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய பட்டீஸ்டா, தேர்தல் தனக்கு சாதகமாக அமையாது என்பதைத் தெரிந்து இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். பட்டீஸ்டாவின் கொடுங்கோலாட்சியில் 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1953 ஜுலை 26 இல் பிடல் காஸ்ட்ரோவும் 135 தோழர்களும் கியூபாவின் மொன்கடா இராணுவத் தளத்தை தாக்கி பட்டீஸ்டாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் அத்தாக்குதல் தோல்வி கண்டதுƒ பலர் கொல்லப்பட்டனர். பிடல் காஸ்ட்ரோ, அவர் தம்பி ராகுல் காஸ்ட்ரோ உட்பட ஒன்பது பேர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்பட்டனர். பிடல் நீதிமன்றத்தில் தானே தமக்காக வாதாடினார். அப்போதே அவர் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காஸ்ட்ரோவும் ஏனையோரும் மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக 1955 இல் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் மெக்சிக்கோ சென்ற காஸ்ற்;ரோ, அடுத்த கட்டப் புரட்சிக்குத் தயாரிப்பு செய்தார். அங்கேதான் ஏனஸ்ட் சேகுவேராவின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் தமது இயக்கத்துக்கு 'யூலை 26 இயக்கம்' எனப் பெயரிட்டனர். 1955 இன் டிசெம்பரில் மெக்சிக்கோவிலிருந்து கிரான்மா என்ற படகில் கியூபாவின் சியாரா மெஸ்திரா மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து நாட்டில் மீண்டும் புரட்சிக்கான பன்முகத் தயாரிப்புகள் செய்யப்பட்டது. கெரில்லா யுத்தத்தை ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் மெதுமெதுவாக முன்னேறினர். மக்கள் ஆதரவு பெருகத் தொடங்கியது. 1958 டிசெம்பர் 31 ஆம் திகதி சர்வாதிகாரி பட்டீஸ்டா நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். 1959 ஜனவரி எட்டாம் திகதி 33 வயது நிரம்பிய பிடல் காஸ்ற்ரோவும் அவரது தோழர்களும் கியூபத் தலைநகர் ஹவானாவிற்குள் பிரவேசித்தனர். புரட்சி வெற்றியடைந்தது.
கியூபப் புரட்சி உலக வரலாற்றின் திசைவழியை மாற்றிய முக்கியமான ஒரு நிகழ்வாகும். 1917 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தேறிய ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உலகமே திரும்பிப் பார்த்து, நம்பிக்கை கொண்ட ஒரு நிகழ்வு கியூபப் புரட்சியாகும்.                            

0 commentaires :

Post a Comment