11/27/2016

வீரவணக்கம்! மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்பு தேவராஜிற்கும், அஜிதாவிற்கும் வீரவணக்கம்!

எழுத்தாளர்: துரை சிங்கவேல்  *நன்றி -கீற்று maoist encounter
24-11-2016 இரவு பாலிமர் தொலைக்காடசியில் வந்த செய்தி என் தூக்கத்தைக் கலைத்தது. எந்த மூர்த்தி, எந்த அஜிதா என்று குழப்பம் காலை வரை நீடித்தது. காலையில் உறுதி செய்து கொண்டேன்.
வீரமரணம் அடைந்த இருவரும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். தோழர் மூர்த்தி [தமிழகத்தில் 1986 வரை இப்பெயரிலேயே வெளிப்படையாக அறியப்பட்டார்] தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைமைத் தோழர் ஆவார். இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக மாவோயிஸ்ட் [மக்கள் யுத்தம் உடபட] தலைமைத் தோழராகவும், கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா மாநில பொறுப்பாளராகவும் இருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் கட்சியின் மையக் குழு உறுப்பினராக இருந்தார்.
தோழர் அஜிதா தமிழகத்தில் வீரமரணம் அடைந்த முதல் பெண் போராளி ஆவார். [நான் இங்கு வீரமரணம் என்று குறிப்பிடுவது அரசு படைகளுடன் சண்டையிட்டு மரணம் அடைவதையே குறிப்பிடுகிறேன்] தியாகி தோழர்கள் ரவீந்திரன், சிவா என்ற பார்த்திபன், நவீன் பிராசாத் வரிசையில் தோழர் அஜிதாவும் இணைந்துள்ளார்.
தோழர் மூர்த்தி என்ற குப்பு தேவராஜ்
தோழர் மூர்த்தி கிருஷ்ணகிரியில் பிறந்தார். ஆனால், பெருநகரமான பெங்களுருவில் படித்து வளர்ந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். அவருடைய தாய் அம்மணி அம்மாள் மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலில் வரும் தாயைப் போன்றவர். எங்கள் அனைவரையும் மகனாக பாவித்து பாசம் காட்டியவர். [இதனால் அம்மணி அம்மாளும், அவரது மகள் தரணியும் 1988ல் மதுரை வங்கி கொள்ளை வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட்னர். சிறைப்படுத்தப்படட நாங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் இவர்களை விடுவிக்க வைத்தோம். ]. இவர் நகர்புறத்து அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பப் பின்னணியையும், பாட்டாளி வர்க்கப் பின்னணியையும் கொண்டவர்.
என்னைவிட 5வயது மூத்தவர். இருப்பினும், தோழர் மூர்த்தியின் அரசியல் வாழ்க்கையும், என்னுடைய அரசியல் வாழ்க்கையும் ஒரே காலகட்டத்தில் [80களின் தொடக்கத்தில்] தொடங்கியது. எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் பலமான கட்சி [மக்கள் யுத்தம்] உருவானது. ஆனால், கர்நாடகாவில் அப்பொழுதுதான் தொடங்கியது. தியாகி தோழர் ஆசாத் [ராஜ்குமார்], தோழர் வீரமணி [கோவை சிறையில் உள்ளார்] போன்றவர்கள் அமைப்பு கட்டிட முனைந்தனர். தொடக்கத்தில் காந்தியவாதியாக இருந்த மூர்த்தியை தொடர்ந்த விவாதத்தின் மூலம் கம்யூனிஸ்ட்டாக மாற்றினர்.
இவரது அறிவுஜீவித்தனமும், களப்பணித்திறனும் இவரை வளரும் இயக்கத்தின் முக்கிய தலைமைத் தோழராக மாற்றியது. இதனால், வேலையை விட்டு முழுநேர அரசியல் பணியை மேற்கொண்டார்.
1985ல் கட்சிக்குள் உருவான நெருக்கடியில், தமிழ்நாட்டில் எ.எம்.கே. மற்றும் தமிழ்வாணன் தலைமை கட்சியை முற்றிலுமாக கலைத்தது. இக்கும்பலை எதிர்த்து மாணவர் மற்றும் இளையோர் அமைப்பைச் சேர்ந்த மிக சிலரே போராடினோம். இப்போராடடத்தில் தோழர் மூர்த்தி மற்றும் வீரமணியின் பங்கு உறுதிமிக்கதாக இருந்தது. இக்கட்டத்திலேயே நானும் மூர்த்தியும் மிகவும் நெருக்கமானோம்.
இதற்குப் பிறகு 1987ல் நடந்த கர்நாடக மாநில மாநாட்டில் மாநிலக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படடார். இதற்குப் பிறகு கட்சி கண்ணோட்டம் வகுக்கப்பட்டு கிராமப்புற வேலைகள் தொடங்கியது. தோழர் பின்தங்கிய வறட்சி மாவட்டமான ரெய்ச்சூர் மாவட்டத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொண்டார்.
1995ல் நடந்த அனைத்திந்திய சிறப்பு மாநாட்டில் மையக் குழுவின் மாற்று உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்படடார். இம்மாட்டில் நடந்த அரசியல் விவாதங்களில் தமிழ்நாடு, கர்நாடக தோழர்களின் சார்பாக இவரே தலைமையேற்று நடத்தினார். எங்களது பெரும்பாலான கருத்துக்கள் வெற்றி பெற்றதில் இவரது விவாத அணுகுமுறை முக்கிய பங்காற்றியது. இவரிடம் இருந்துதான் நான் தொடக்கத்தில் பொறுமையும், நிதானத்தையும் கற்றுக்கொண்டேன்.
2001ல் நடந்த 9வது பேராயத்தில் அரசியல்வழி மீது விமர்சனம் வைத்த தமிழ்நாடு, கர்நாடகத் தோழர்கள் சிறுபான்மையானோம். எங்களது கருத்தில் சில மாறுபாடுகளை கொண்ட மூர்த்தி தனியாக அரசியல் வழி மீது விமர்சனம் வைத்தார்.
இதற்குப் பிறகு நான் ஊத்தங்கரை மோதலை ஒட்டி சிறைபட்டேன். என்னுடைய முரண்பாடுகள் வளர்ந்து நான் பிரியவேண்டிய சூழ்நிலை வந்தது. இன்று நான் தனி அமைப்பாக வந்து என்னுடைய நிலைப்பாடுகளை முன்வைத்து அது சனநாயகபூர்வமாக தீர்மானிக்கப்பட்டு நடைமுறைக்குச் செல்கிறது. ஆனால், என்னைப் போலவே மாற்றுக் கருத்தை கொண்டிருந்த தோழர் மூர்த்தியின் அரசியல் போராட்டங்கள் கடந்த 12 ஆண்டுகளாக எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியாது. இதைப் பற்றி மாவோயிஸ்ட் தலைமைத் தோழர்களே வெளியிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
அதே சமயத்தில், எனக்கு அடித்தளமிட்டதில் தோழர் மூர்த்தியின் பங்கு மிக முக்கியமானது. எனது அரசியல், பொருளாதாரம் பற்றி அறிவில் அடித்தளமிடடவர். இவர் பன்மொழியில் வல்லவர். தமிழராக இருந்தபோதிலும் கன்னடம், தெலுகு. ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் திறன் பெற்றிருந்தார். நான்கு மொழிகளிலும் ஒன்றிலிருந்து மறறொன்றுக்கு மொழிபெயர்க்கும் அறிவைப் பெற்றிருந்தார். அநேகமாக, கடந்த 12 ஆண்டுகளில் இந்தி, மலையாளத்திலும் அறிவைப் பெற்றிருப்பார் என்று கருதுகிறேன்.
இதனால், இவரே 1986லிருந்து 2002 வரை எங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார். பல கூட்டங்களுக்கும் சரி, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சரி இவரே சலிக்காமல் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். இதனால் எங்களுக்குள் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.
எனக்கும் ஆசாத்துக்குமான உறவு ஆசான், அடுத்து தோழராக வளர்ந்து இறுதியில் கடுமையான மாறுபாடு கொண்டவர்களாக மாறியது. ஆனால், மூர்த்தியுடனான உறவு முதலில் இருந்து இறுதிவரை தோழமையாகவே இருந்தது. எங்களுக்குள் கருத்துக்கள் பெரும்பாலும் உடன்பாடாகவே இருந்தன. நான் மக்கள் யுத்தக் கட்சியில் செயல்பட்ட காலத்தில் எனது முதன்மைத் தோழர் மூர்த்தியே ஆவார்.
ஒரு தவறான வழி மாபெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. மகத்தான தலைவனை, மாபெரும் அறிவுஜீவியை, சிறந்த களப்பணியாளனை புரடசிகர முகாம் இழந்துவிட்டது. இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
தோழர் அஜிதா
தோழர் அஜிதாவின் குடும்பப் பின்னணி அரசியல் பின்புலம் கொண்டது. அவரது பெயரே அவர் எம். எல் பின்னணி கொண்டவர் என்பதைப் புலப்படுத்தும். அவரது தந்தை பரந்தாமன் இறக்கும்வரை மக்கள் யுத்தக் கட்சியில் இருந்தவர். இதனால் மகளையும் அரசியல் ரீதியாக வளர்த்தார். அஜிதாவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர் தியாகி தோழர் ரவீந்திரன் ஆவார்.
சட்டப் படிப்பை முடித்த அஜிதா நீதிமன்றத்தில் செயல்பட மறுத்து முழுநேர ஊழியரானார். தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகத்தில் செயல்படட அஜிதா அதன் பொதுச் செயலரானார். ஊத்தங்கரை மோதலை ஒட்டி த. பெ. க. தடை செய்யப்படட பொழுது அஜிதா தலைமறைவானார். இதற்குப் பிறகு இவரது செயல்பாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது.
இவரது சிறப்பம்சங்களில் ஒன்று அரசியல் அமைப்பில் உறுதிப்பாடு ஆகும். இதற்கு நல்ல எ-டு இவரது சொந்த வாழ்க்கை ஆகும். இவருக்கு வாழ்க்கை ஒப்பந்தம்[திருமணம்] நிச்சயமானது. சிறிது காலம் கழித்து அவரது இணை அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்தார். அஜிதா அவருடன் செல்ல மறுத்து விடடார். வாழ்க்கை ஒப்பந்தத்தை ரத்து செய்தார் [ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் 99. 9% பெண்கள் தங்களது இணையுடன்[ஆண் ] சென்று விடுகின்றனர்]. தனது சொந்த வாழ்க்கையை இறுதிவரை அரசியல் அமைப்புடன் பிணைத்துக் கொண்டு உறுதியுடன் வீரமரணம் அடைந்த தோழர் அஜிதாவைப் போற்றுவோம்!
தோழர் மூர்த்தியைப் போற்றுவோம்!

0 commentaires :

Post a Comment