2017ம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நவம்பர் 10ம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் அரசாஙகத்தின் வருமானம் மற்றும் செலவீனங்கள் சம்பந்தமான விபரங்களைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது அநேகமானோருக்குத் தெரியாது. வருடாந்த வரவு செலவு அறிக்கையானது அடுத்த வருடம் நாட்டின் பொருளாதாரம் எந்தப் பாதையில் செல்கின்றது என்பதை விளக்குகின்றது. நாட்டின் பொருளாதாரம் செல்லும் பாதைக்கு ஏற்பவே எமது வீடுகளில் பொருளாதாரம், தனியார் பொருளாதாரம் ஆகியன தீர்மானிக்கப்படுகின்றன. இம்முறை வரவு செலவு திட்டம் காட்டியிருக்கும் பாதையில் சென்றால் எமக்கு, அதாவது, உழைக்கும் மக்களின், பணக்காரர்கள் அல்லாத எமது வர்க்கத்தின், எமது மக்களின் தலைவிதி என்னவாகும்? எமது எதிர்கால வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படு மோசமான ஆலோகனைகள் இந்த வரவுசெலவு திட்டத்தில் அடங்கியுள்ளன. கீழ் வரும் ஆலோசனைகளை பார்த்தாலே அவற்றை விளங்கிக் கொள்ள முடியும்.
• அரச நலன்புரிகள் ஒழிக்கப்படுமெனவும், அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்பதனால் மில்லியன் கணக்கான ரூபாய்களை தேடிக்கொள்ள முடியுமெனவும் நிதியமைச்சர் கூறுகிறார்.
• அரச சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்வதை வெட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதனால், தொழில் பிரச்சினை உக்கிரமடைவது நிச்சயம்.
• அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஒழித்துவிட்டு அதற்காக சம்பளத்திலிருந்து தவணைப் பணம் அறவிடப்போகிறார்கள்.
• இலவச சுகாதாரச் சேவையை ஒழித்துவிட்டு சுகாதார காப்புறுதி முறையொன்றை கொண்டுவரவிருக்கிறார்கள்.
• அரச மருத்துவமனைகளில் தனியார் இரசாயனக் கூடங்கள், கட்டணம் செலுத்தும் வாட்டுகளை தொடங்குவதற்கு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளத.
• தனியார் பாடசாலைகள் ஆரம்பிப்பதை ஊக்குவிப்பதற்காக அவற்றை சடட்பூர்வமாக்கும் திட்டம் இருக்கின்றது.
• பாடசாலைகள் பராமரிப்பிற்கு அரசாங்கம் ஒதுக்க வேண்டிய பணம் கடுமையாக வெட்டப்பட்டுள்ளது.
• தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
• அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் பணம் வெட்டப்பட்டு அவற்றை அழிக்கப்பார்க்கின்றார்கள்.
• வெளிவாரி பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதை வெட்டுவதுடன் அரசாங்க பல்கலைக்கழகங்களிலும் பணத்திற்கு பட்டத்தை விற்க ஆலோசிக்கப்பட்பட்டுள்ளது.
• இதன் காரணமாக உயர் கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படும்.
• சிறு விவசாயியை ஒழித்துவிட்டு, விவசாய கைத்தொழிலை பல்தேசியக் கம்பனிகளில் சொத்தாக ஆக்குகிறார்கள்.
• விவசாயிகளுக்கு காணி வழங்காமல் கம்பனிகளுக்கு அரச காணியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கப்போகிறார்கள்.
இந்த அட்டவனையை மேலும் நீடிக்க முடியும். என்ன நடக்கிறது இங்கே? அரச நிறுவனங்களை விற்று, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கை குறைத்து அரச வருமானத்தை இல்லாமலாக்கிக் கொள்கிறார்கள். 2017லும் அரச வருமானமான 87.3% தை எமக்கு வரி விதித்தே தேடப்பார்க்கிறார்கள். அந்த வரி வருமானத்திலும் செல்வந்தர்களிடமிருந்து அறவிடும் வருமான வரி 18.4% வீதம் மாத்திரமே. 2016டன் ஒப்பிடும்போது அடுத்த வருடம் வருமானவரி அதிகரிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கத்தை நடாத்திச் செல்வதற்குத் தேவையான மொத்த சுமையையும் பணக்காரர்கள் அல்லாத, செல்வந்தர்களல்லாத பொது மக்கள் சுமக்க வேண்டியுள்ளது. மோசமான முறையில் வரி விதிக்கிறார்கள். போதாமைக்கு கேவலமான முறையில் எல்லாவற்றிற்கும் தண்டப்பணம் அறவிடுகிறார்கள். அரசாங்கம் வரியாகவும் தண்டப்பணமாகவும் எங்களிடமிருந்து பறித்துக் கொண்டு கல்வி, சுகாதாரச் சேவை, போக்குவரத்து போன்ற சமூக பாதுகாப்புச் சேவைகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தையும் குறைத்துள்ளது. அவற்றை விற்பனைப் பண்டங்களாக்க திரைமறைவில் செயல்படுகிறார்கள். எனவே, கிடைக்கும் சொச்சத்தையும் பிள்ளைகளுக்கு படிப்பிக்கவும், நோய்க்கு மருந்து வாங்கவும் பூஜிக்க வேண்டியுள்ளது.
சமூக வர்த்தகச் சந்தை போன்ற பெரிய பெரிய கொள்கைகளை சொல்லிக் கொண்டு மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கடைசியில் மக்கள் வயிற்றில் அடிக்கின்றது. ஐ.எம்.எப்., உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களை மகிழ்விப்பதற்காக மக்களை பலி கொடுக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் முகத்தை மாற்றியதால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள இந்த வரவு செலவு அறிக்கை மட்டும் போதுமாதாகும்.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மையை, வெறுப்பை பயன்படுத்தி இனவாத, சர்வாதிகார, மோசடி சக்திகள் அதிகாரத்திற்கு வர வழி சமைக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு மாற்றீடாக முகத்தை மாற்றுவதுதான் வழி என இருளில் விழுந்த குழியில் பகலிலும் விழ வைக்கப் பார்க்கிறார்கள். இந்த இரு சாராரிலும் குறைந்த தீயவரை தெரிவு செய்வதற்குப் பதிலாக நாம் வேறுபட்ட தீர்மானத்தை எடுப்போம். முதலாளித்துவ கட்சிகள் இரண்டு. அந்த இரண்டிற்கும் முட்டுக் கொடுக்கும் சந்தர்ப்பவாதிகளையும் சேர்த்து தோற்கடித்துவிட்டு இடதுசாரிய மாற்றீடை தெரிவு செய்வோம். இந்த கொள்ளைக்கார வரவு செலவு திட்டடத்தை தோற்கடிக்க வீதியில் இறங்குவோம். அதற்காக ஒருங்கிணைவோம். போராடுவோம்!
முன்னிலை சோஷலிஸக் கட்சி
15/11/2016
0 commentaires :
Post a Comment