வடமாகாண சபையின் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு பற்றிய பகிரங்க அறிவித்தல் இன்றைய நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.
போரின் கொடிய கரங்களில் சிக்கி சீரழிந்த எம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் ஊழல் அமைச்சர்களால் நயவஞ்சகமாக சுருட்டப்பட்டு தங்களின் குடும்பங்கள், பிள்ளைகளின் சொகுசான வாழ்க்கைக்காக கொள்ளையடிக்கப்பட்டன.
ஒரு வேலைத்திட்ட அட்டவணையை தயாரித்து மாவட்ட வாரியாக, பிரதேச ரீதியாக சுழற்சி முறையில் சுற்றிச் சுழன்று, தேவையேற்பட்டால் அந்த இடங்களில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், உட்கட்டுமானம் இவற்றுக்காக போர்க்கால அடிப்படையில் வேலை செய்ய வேண்டியவர்கள்,
அதனை மறந்து ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் அதில் தமக்கு எவ்வளவு கொமிஷன் வரும் என்பதையே சதா சிந்தித்து செயற்பட்டு வருவதுடன், மக்கள் சேவைக்காக வழங்கப்பட்ட சொகுசு வாகனங்களில் மனைவி, பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு சொந்த தேவைக்காக திரிவதும் தான் இவர்கள் இவ்வளவு நாளும் செய்த மக்கள் பணியாக நோக்கப்படுகின்றது.
இந்த நான்கு அமைச்சர்கள் மீதும் ஏட்டிக்கு போட்டியாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளாலும், தனிநபர்களின் ஆதாரங்கள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் அமைச்சர்களான ஐங்கரநேசன், சத்தியலிங்கம், குருகுலராஜா, டெனிஸ்வரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் மற்றும் ஒழுக்கரீதியான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவென இளைப்பாறிய மேல்நீதிமன்ற நீதிபதி திரு. எஸ். தியாகேந்திரன் அவர்களின் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு 03.10.2016 இல் இருந்து செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விசாரணைக்குழுவானது இலக்கம் 63, நல்லூர் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் பிரதம செயலாளரின் அலுவலகத்தில் இருந்து தனது பணிகளை மேற்கொள்ளும். முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் முறைமைகளும் விசாரணை நடத்தும் முறைமைகளும் மற்றும் நேர அட்டவணைகளும் குழுவினால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். இக்குழு நியமனத் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு இயங்கும். வடக்கு மாகாண முதலமைச்சரினால் இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, குறித்த பிரேரணையில் கையொப்பம் வைத்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அந்தக் கையொப்பத்தை மீளப் பெறுமாறு கோரி நட்சத்திர ஹோட்டல்களில் பிரமாண்டமான விருந்துபசாரங்கள் வழங்கியதோடு, இதர சலுகைகளும் வழங்கப்பட்டன.
இதே போன்ற உத்தியை முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையிலான குழுவினர்கள் மீதும் இந்த ஊழல் அமைச்சர்கள் கையாளக் கூடும். ஆகவே, இவர்கள் மீது நீதிபதி தலைமையிலான குழுவினர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே வடக்கு மாகாண மக்களின் பெருத்த எதிர்பார்ப்பு.
0 commentaires :
Post a Comment