10/03/2016

அமைதியிழந்தது மலையகம்

ம்பள அதிகரிப்பு விடயத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கொந்தளித்துள்ள மலையக மக்கள், தங்களது போராட்டத்தின் இரண்டாவது வாரத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
இதனால், மலையகத்தின் பல பகுதிகளிலும் பதற்றமான சூழல் நீடித்து வருவதுடன் போராட்டத்துக்கு தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரட்டுக்களத்தில் ஒன்றுகூடி, அன்றைய தொழிலுக்கான நேர அட்டவணையைத் தீர்மானிக்கும் மக்கள், இன்று வீதிகளில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாகவும் மலையக பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் புத்திஜீவிகள் அங்கலாய்க்கின்றனர்.
கூட்டொப்பந்தப் பேச்சு காலாவதியாகி 18 மாதங்கள் கடந்துவிட்டன. இதுவரை நடைபெற்ற 9 சுற்றுப் பேச்சுக்களும் எவ்வித இணக்கப்பாடுகளுமின்றி முடிவடைந்ததால், தோட்டத் தொழிலாளர்கள் பொறுமையிழந்ததுடன், கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதியிலிருந்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே, பிரதான வீதிகளில் அணிதிரண்டுள்ளனர். பொகவந்தலாவை, புஸ்ஸல்லாவை, நோர்வூட், மஸ்கெலியா, நானுஓயா, லிந்துலை ஆகிய பகுதிகளிலும், ஆர்ப்பாட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன.
தடையுத்தரவு
மஸ்கெலியா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம், ஹட்டன் மாவட்ட நீதிமன்றித்தின் தடையுத்தரவுக்கமைய  கைவிட்டப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக மஸ்கெலியா நகரில் ஒன்றுதிரண்ட மக்கள், நீதிமன்றத்தின் தடையுத்தரவை மதித்து ஆங்காங்கே குழுமியிருந்தனர். ஆர்ப்பாட்டம் முறியடிக்கப்பட்டதால், மஸ்கெலியா நகரில் அசம்பாவிதங்கள் ஏற்படலாமென அஞ்சிய பொலிஸார், நகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மஸ்கெலியா நகரலிலுள்ள வர்த்தக நிலையங்களும் நேற்று (2) மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், பொறுமையிழந்த பிரதேச மக்கள், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், மக்களுடன் பேசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
சட்ட நடவடிக்கை
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட லபுக்கலை,  கொண்டக்கலை, பம்பரக்கலை, வெஸ்ட்வாடோ  மற்றும் நுவரெலியா பம்பரகலை தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வுக்கோரி, வியாழக்கிழமை கண்டி-நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக, இவ்வீதிவழியான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது. இவ்வீதியினூடாக பயணித்த அரசாங்க அதிகாரிகள், உரிய நேரத்தில் தமது பணிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, கண்டியிலிருந்து பயணித்த நுவரெலியா மாவட்ட நீதவான் ருவன் டீ சில்வாவின் வாகனத்தையும் மறித்துநின்ற தொழிலாளர்கள், லபுக்கலை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் நீதவானுக்கு உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அன்றைய தின நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பதுளையில் இன்று முதல் போராட்டம்
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைக் கோரியும் தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு வலியுறுத்தியும், இன்று திங்கட்கிழமை முதல், பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஸ்பிரிங்வெளிப் பகுதியின் மேமலைத் தோட்டம், பதுளைப் பகுதியின் சார்ணியா, லுனுகலை, ரொக்கத்தன்னை, உடுவரை, பண்டாரவளைப் பகுதியின் பூணாகலை, ஊவா ஹய்லன்ஸ் தோட்டங்களிலும், அப்புத்தளைப் பகுதியின் தம்பேதன்னை தோட்டத்திலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்போராட்டங்களைத் தொடர்ந்து, எதிர்வரும் தினங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
பொலிஸாருக்கு எரிகாயம்
பத்தனை மவுண்ட்வேர்ணன், திம்புள்ள ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள், பத்தனை சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, தொழிலாளர்கள் பிரதான வீதியில் டயர்களை எரிக்க முற்பட்டபோது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தினர். இதேவேளை, எரியூட்டப்பட்ட டயரை அணைக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், தீ காயங்களுக்கும் உள்ளானார். இவரது கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
'மலையக அரசியல்வாதிகளே  எம்மை ஏமாற்றாதீர்கள்', 'வாக்குறுதியளித்தவாறு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்', 'எமது உரிமையை நாமே வென்றெடுப்போம்', 'அட்டைக் கடியில் வியர்வையை சிந்தி உழைக்கும் எமக்கு தோட்ட கம்பனிகளே சம்பளத்தை அதிகரி' என்ற கோஷங்களை எழுப்பியவாறு, கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் சனிக்கிழமை தோட்ட ஆலய முன்றலில் சிதறுத் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதியில் படுத்து ஒப்பாரி
சில தோட்டங்களின் தொழிலாளர்கள், பிரதான வீதிகளில் படுத்தும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டுகொள்ளாத அரசாங்கம், மலையக பிரதிநிதிகள்
நல்லாட்சிக்கு முக்கிய பங்கு வகித்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கடந்த ஒரு வாரமாக, தமது போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்ற போதிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமரை இணைந்த ஆட்சியாகக் கொண்ட நல்லாட்சி அரசாங்கமானது கண்டும் காணாதது போல் செயற்படுவதாக, தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்குச் சென்ற 9 பிரதிநிதிகளும், இதுவரை பொறுப்பான பதிலெதையும் கூறவில்லை எனவும் குறைந்தது போராட்ட இடத்துக்கு வந்து தமது நிலைமைகளையேனும் பார்வையிடவில்லை எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கம்பனிகளுக்கு நட்டம்?
கடந்த ஒரு வாரமாகத் தொடரும் போராட்டங்களினால், பெருந்தோட்ட கம்பனிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தின் பின்புலத்தில் தொழிற்சங்கங்கள்?
கூட்டொப்பந்த பேச்சு இழுபறி நிலையிலுள்ளதால், முக்கிய தொழிற்சங்கமொன்று, தொழிலாளர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி, இவ்வாறான வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட வைப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, மறுபுறத்தில் கூட்டுத் தொழிற்சங்கமொன்று இவ்வாறான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மறைமுகமாக தமது அதிகாரத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனால்தான், நேற்று மஸ்கெலியா நகரில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமும் முறியடிக்கப்பட்டதாக மத்திய மாகாண சபை உறுப்பினரொருவர் கூறியுள்ளார்.
சர்வதேசமும் தலையிட வேண்டும்
பெருந்தோட்ட மக்களின் தொழிலுரிமை மீறப்பட்டு வருவதால், சர்வதேச நாடுகள் மலையக மக்களையும் திரும்பி பார்க்க வேண்டுமென புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 commentaires :

Post a Comment